யார் இந்த மரிய வில்சன்? வடசென்னை டூ நிதியமைச்சர்.. மாமனார் ஜேப்பியாரை போலவே சர்ச்சையில் சிக்குவது ஏன்?

  • சென்னை: தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே பரபரப்புகள் அரசியல் களத்தில் ஓயாமல் உள்ளது... அந்தவகையில் சமீப நாட்களாக மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருப்பவர் நிதியமைச்சர் மரிய வில்சன். "எம்ஜிஆருக்கு ஜேப்பியார் போல, விஜய்க்கு நான் இருப்பேன்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து கவனத்தைப் பெற்ற மரிய வில்சன் யார்? அவரது பின்னணி என்ன என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்...!!

    Advertisement

    தமிழகத்தில் மிகப் பிரபலமான கல்வி நிறுவன அதிபராக விளங்கிய மறைந்த ஜேப்பியாரின் மருமகன் தான் இந்த மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவரான இவர், பி.டெக், எம்பிஏ மற்றும் 2012-ல் மேலாண்மை அறிவியலில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்ற கல்விமான் ஆவார்.

    Advertisement

    மாவீரர் ஜேப்பியார்

    தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியாக வலம் வந்து, சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து "மாவீர்" என அழைக்கப்பட்ட ஜேப்பியார் 2016-ல் மறைந்தார்.

    அவர் உருவாக்கிய கல்வி சாம்ராஜ்யத்தை திறம்பட வழிநடத்தி, ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்த மரிய வில்சன், மாணவர்கள் புதுப்புது ஆலோசனைகளை அளிக்கும் வகையில் "டிசைன் திங்கிங் கிளப்" மற்றும் பல அமைப்புகளை உருவாக்கி மாற்றத்தையும் ஏற்படுத்தினார்.

    தவெகவில் மரிய வில்சன்

    ஜேப்பியார் அரசியலை விட்டு ஒதுங்கிய 36 வருடங்களுக்கு பிறகு, அவருடைய மருமகன் மரிய வில்சன், 2025 ஜூன் 9ம் தேதி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்து அரசியலில் குதித்தார்.

    Advertisement

    கரூரில் விஜய் பிரச்சாரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, ஆயுள் காப்பீடு, மாதம் 5000 ரூபாய் வாழ்நாள் நிவாரணம் அறிவித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

    வடசென்னை - நிதியமைச்சர்

    தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கி, வடசென்னையின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன்வைத்து தீவிர பிரச்சாரம் செய்து 97,800 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வாழும் வடசென்னை பகுதிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் இவருக்கு முக்கிய நிதியமைச்சர் பொறுப்பையும் வழங்கினார்.

    சர்ச்சைகளில் அமைச்சர்

    இப்படி அரசியல் ஏணியில் வேகவேகமாக உச்சிக்கு சென்ற அமைச்சர் மரிய வில்சன், இப்போது அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் தவிப்பதுதான் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Advertisement

    சட்டப்பேரவையில் முதல் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, அவரது தமிழ் உச்சரிப்பை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளுமாறு மதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் சொன்னதற்கு, "என்னுடைய கிறிஸ்துவம் எனக்கு அன்பின் மொழியை கற்றுக் கொடுத்துள்ளது, உங்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது" என ஆவேசமாகப் பதிலளித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    நிதியமைச்சரின் இந்த பேச்சு தமிழ் மொழியையே தாழ்த்துவது போல் உள்ளது என்றும், உடனடியாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் கொதித்தெழுந்துள்ளனர். சோஷியல் மீடியாவிலும் ரீல்ஸ்களை பதிவிட்டு நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    தவிர்த்திருக்கலாமே

    சட்டப்பேரவை என்பது மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கும் பொதுக்களம் என்பதால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தமிழ் உச்சரிப்பு குறித்து சுட்டிக்காட்டியபோது, அதற்கு அமைச்சர் மரிய வில்சன் தனது மத அடையாளத்தை முன்வைத்து ஆவேசமாக பதிலளித்தது சர்ச்சையைத் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று என்பதே நடுநிலையான பார்வையாகும்.

    அரசமைப்பு சட்டத்தின்படி ஒவ்வொருவருக்கும் மத உரிமை இருந்தாலும், மக்கள் பணிக்கான பேரவையில் மொழியையும் மதத்தையும் முடிச்சு போட்டுப் பேசுவது கொஞ்சமும் ஏற்படையதல்ல..

    மூத்த தலைவர்கள் வானதி சீனிவாசன், சீமான், அர்ஜுன் சம்பத் போன்ற அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுவது போல, தனிநபர் மத கோட்பாடுகளை விட தமிழ் மொழியின் கண்ணியமும் மரபும் காக்கப்படுவதே அவசியமானது என்பதால், அமைதியான முறையில் விளக்கம் அளித்திருந்தால் இந்த வீண் சர்ச்சைகளை தடுத்திருக்க முடியும்.

    Advertisement

    ஜேப்பியார் சொன்னது நினைவிருக்கா

    இதே போல சர்ச்சையாக பேசி, அன்று சிக்கியவர் ஜேப்பியார் என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது..

    "பசங்க பசங்க பேசிக்கலாம், பொண்ணுங்க பொண்ணுங்க பேசிக்கலாம், பசங்களும் பொண்ணுங்களும் பேசக்கூடாது, ஏன் கை குலுக்க வேண்டும்?" என்றெல்லாம் பேசி தனது கல்லூரிகளில் அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்து, பஞ்சமில்லாமல் சர்ச்சைகளில் வலம் வந்தவர் ஜேப்பியார்!

    அதுமட்டுமல்ல, மாணவர்களை வெயிலில் நிற்க வைப்பது போன்ற வித்தியாசமான கண்டிஷன்களாலும், கறாரான பேச்சுக்களாலும் சர்ச்சைகளில் சிக்கினார்..

    பொதுவெளியின் எல்லைகள்

    ஆனால், மரிய வில்சன் சட்டப்பேரவை போன்ற ஜனநாயக களத்தில் தமிழ் மொழி உச்சரிப்பு குறித்து எழுந்த கேள்விக்கு தனது மதத்தைக் குறிப்பிட்டு பதிலளித்து நேரடி அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    2 பேரின் எல்லைகளும் பின்னணிகளும் வேறாக இருந்தாலும், பொது மேடைகளில் நிதானமான விளக்கங்களை அளிக்காமல், தங்கள் சொந்த நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்து ஆவேசமாக பேசி சர்ச்சைகளை உருவாக்கியவர்கள்.

    "எம்ஜிஆருக்கு ஜேப்பியார் போல, விஜய்க்கு நான் இருப்பேன்" எனத் தனக்குத் தானே சப்பக்கட்டு கட்டினாலும், அன்று மாமனார் ஜேப்பியார் உதிர்த்த அதிரடி கருத்துகள் எப்படிப் விவாத பொருளானதோ, அதேபோல இன்று மருமகன் மரிய வில்சன் பேசிய பேச்சும் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு சாதகமாக அமையுமா அல்லது வடசென்னை மக்கள் தந்த ஆதரவுக்கே பெரிய சிக்கலாக மாறி விடுமா என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Who Is Maria Wilson? North Chennai to Finance Minister, Jeppiaar Link Sparks Controversy