Vijay Cabinet: விஜய் கேபினட்டில் ஜேப்பியார் மருமகன்.. யார் இந்த அமைச்சர் மரிய வில்சன்?

  • சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துள்ளார் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது விஜய்யின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்கும் இவரைப் பற்றியும், இவரது அரசியல் பின்னணி பற்றியும் பார்க்கலாம்.

    Advertisement

    தமிழகத்தில் பிரபல கல்வி நிறுவன அதிபராக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன் தான் மரிய வில்சன். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். இவர் ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

    Advertisement

    ஜேப்பியார் மருமகன்

    தீவிர எம்ஜிஆர் விசுவாசியான ஜேப்பியார், சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர், தன் அதிரடியான செயல்பாடுகளால், மாவீரன் என அதிமுகவினரால் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் வளர்த்து விட்ட கல்வியாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஜேப்பியார் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் இவரது கல்வி நிறுவனங்களை வழிநடத்திச் செல்லும் முக்கிய நபராக மரிய வில்சன் திகழ்கிறார்.

    ஜேப்பியார் அரசியலைவிட்டு ஒதுங்கிய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருடைய மருமகன் மரிய வில்சன் அரசியலில் குதித்தார். ஜேப்பியார் பெயரில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களில் முக்கியமானவர் மரிய வில்சன். மாணவர்கள் புதுமையான ஆலோசனைகளை அளிக்கும் வகையில் 'டிசைன் திங்கிங் கிளப்' ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்.

    Advertisement

    தவெகவில்

    இதுதவிர பல்வேறு தொழில்சார் சொசைட்டிகளையும் அமைத்து மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார் மரிய வில்சன். இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

    கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு மிக முக்கியமான நிவாரணம் அறிவித்தார் மரிய வில்சன். கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும், 5,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்நாள் முழுக்க வழங்குவேன் என்றும் மரிய வில்சன் அறிவித்தது பெரும் கவனம் பெற்றது.

    Advertisement

    ஆர்.கே.நகர் - மரிய வில்சன்

    தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போதும் தனித்துவமான முக்கியத்துவம் உண்டு. முன்னாள் முதலமைச்சர்கள் போட்டியிட்ட பெருமை வாய்ந்த, அரசியல் ரீதியாக மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இந்தத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரிய வில்சன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், தொகுதி மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வடசென்னையின் பிரதானப் பிரச்சினைகளான உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். தேர்தல் முடிவுகளில் ஆர்.கே.நகர் மக்கள் இவர் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர்.

    Advertisement

    வடசென்னைக்கான அங்கீகாரம்

    தற்போது முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, சென்னைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ள சூழலில், மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதிக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

    மீனவ மக்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வாழும் ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைத்திருப்பது, அந்தப் பகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்ப்பதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரு சாமானியத் தொண்டராக, மக்கள் பிரதிநிதியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழக அமைச்சரவையின் முக்கியப் பொறுப்பை நோக்கி நகர்ந்திருக்கிறார் மரிய வில்சன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, வடசென்னையின் முகவரியை மாற்றியமைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Marie Wilson, the son-in-law of Jeppiaar, has joined the cabinet led by Chief Minister Joseph Vijay. Let us take a closer look at him—the individual who contested and won the RK Nagar constituency representing TVK, and who is now assuming office as a minister in Vijay's new cabinet—as well as his political background.