சென்னை: "இடைத்தேர்தல் களம் ஆதரவாக இல்லாததால் முதலமைச்சர் தெருத் தெருவாக செல்கிறார். தூய சக்தி அடையாளத்தை தவெக அழித்து ஒழிக்கிறது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணையவில்லை. தற்போது தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன.
அதேபோல் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் அ.மு. சலீமை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படவிலலை. எந்த தேர்தல் அதிகாரிகளையும் தொகுதியில் பார்க்க முடிவதில்லை. இடைத்தேர்தலில் பணப் புழக்கம், விதிமீறல் இருக்கும் என அறிந்தும் அவர்கள் செயல்படவில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது. இதை பயன்படுத்தி தவெக, திமுக, அதிமுக ஆகியவை பணம் விநியோகம் செய்வதாக மக்களே சொல்கிறார்கள். பணம் தராத ஒரே கட்சி கம்யூனிஸ்டுகள் தான். தவெக, திமுக அணி, அதிமுக - பாஜக அணி ஆகிய மூன்று அணிகளும் தயக்கம், அச்சம் இன்றி பணம் விநியோகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எல்லாம் கொடுக்கிறார்கள், நீங்கள் மட்டும் கொடுக்காமல் இப்படி வெறும் நோட்டீஸை மட்டுமே கொடுத்துவிட்டுப் போகிறீர்களே என்று ரொம்ப வருத்தமாக மக்கள் எல்லாம் எங்களிடம் கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அப்படி கொடுக்கவும் மாட்டோம். தூய சக்தி நாங்கள்தான் என தமிழக முதல்வர் விஜய் தொடர்ந்து சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்தது. இந்நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசு விரும்பும் ஆட்சியை ஏற்படும் மோசடி ஆணையராக ஞானேஷ்குமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது படிவம் மாற்றி பெயர் போதும் என்கிறார்கள். ஒரேயடியாக தாத்தா குறித்து விவரம் கேட்பதும், தற்போது தந்தை பெயர் கூட தேவையில்லை என்பதும் தவறானது. தகுதியானோரை மட்டும் சேர்க்க வேண்டும். பொதுத்தேர்தலில் பிரச்சாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரச்சாரமே அதிகம். தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் அக்கட்சியினர் தெருத் தெருவாக செல்கிறார்கள். பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்ததால் இவ்வேட்பாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவுள்ளது. தவெகவின் நெறிமுறையற்ற செயலால் திணிக்கப்பட்ட தேர்தல் இது" எனத் தெரிவித்துள்ளார்.