சென்னை: சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், நில மோசடிகளில் சிக்கி ஏமாறாமல் இருக்க ஆவணங்களை சரிபார்ப்பது அவசியமாகும். தங்களின் பணத்தை பாதுகாக்கவும், உரிமை பிரச்சினைகளை தவிர்க்கவும் நில விவரங்களை முன்கூட்டியே ஆராய வேண்டும் என அரசு அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். அதற்காகத்தான் தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம், இ-சேவை மையங்கள் மூலமாகப் பட்டா, சிட்டா உள்ளிட்ட நில ஆவணங்களை எளிதாகச் சரிபார்க்கும் டிஜிட்டல் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த வசதியை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில், சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது நிலம் வாங்க வேண்டும் என்பது சராசரி மனிதர்களின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. இதற்காக தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்ய பலரும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், நிலம் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் சில நேரங்களில் நடக்கும் மோசடிகள், வாங்குபவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. நிலம் வாங்கும் போது மிக முக்கியமான விஷயம், அதன் ஆவணங்களை சரியாக சரிபார்ப்பதுதான். எதிர்காலத்தில் சொத்து தொடர்பான எந்த பிரச்சினையும், கோர்ட் கேசுகளும் வராமல் இருக்க வேண்டுமானால், நிலத்தின் உண்மை தன்மையை முன்கூட்டியே ஆராய வேண்டும் என்று அரசு அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். முன்னாடியெல்லாம் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தாலுகா ஆபீசுக்கும், விஏஓ ஆபீசுக்கும் பலமுறை அலைந்து திரிய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால், பொதுமக்கள் எளிதாக விவரங்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான இணையவழி வசதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே, கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக https://eservices.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இ-சேவை இணையதளத்தை பயன்படுத்தி நிலம் தொடர்பான பல்வேறு தகவல்களை ஒரே செகண்டில் தெரிந்து கொள்ள முடியும். இந்த வெப்சைட்டில் நீங்கள் வாங்க நினைக்கும் நிலத்தைப் பற்றிய முழு ஜாதகத்தையுமே பார்த்துவிடலாம். அதுவும் நீங்கள் யாரிடம் நிலம் வாங்குகிறீர்களோ, அவர்தான் அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளரா என்பதை பட்டா விவரங்கள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, அந்த நிலம் தனியாருக்கு சொந்தமானதா, அல்லது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலமா, அல்லது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பொது நிலமா போன்ற அடிப்படையான மற்றும் மிக முக்கியமான விவரங்களையும் இதில் அறியலாம். அத்துடன் நிலத்தின் பரப்பளவு, அது நஞ்சை நிலமா அல்லது புஞ்சை நிலமா போன்ற ஆவணங்களை ஆன்லைனிலேயே சரிபார்த்து, அதன் நகலையும் நாம் இலவசமாகப் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆன்லைன் வசதியால், நாம் எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் நிலம் தொடர்பான தகவல்களைத் தேடிப் பெற முடிகிறது. நிலம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த வெப்சைட்டில் சரிபார்ப்பதன் மூலம், தவறான நபர்களிடம் ஏமாறாமல் நம் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஒருவேளை உங்களுக்கு ஆன்லைனில் பார்க்கத் தெரியவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். பட்டா மாற்றம் செய்தல், பட்டா விவரங்களைச் சரிபார்த்தல், நிலத்தின் வில்லங்கச் சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்கு இ-சேவை மையங்களை நாடலாம். இதற்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுடைய அடையாள அட்டை, நிலவரி கட்டிய ரசீது, மின் கட்டண ரசீது மற்றும் பழைய பட்டா, சிட்டா ஆவணங்களைக் கொண்டு எளிதாகச் சேவைகளை மேற்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவசரப்பட்டு நிலம் வாங்கிவிட்டுப் பின்னாடி வருந்துவதை விட, வாங்குவதற்கு முன்பே அரசின் இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்..!!!சொந்த நிலம் வாங்குவோர்களுக்கு
விஏஓ, தாலுகா ஆபீஸ்
பட்டா விவரங்கள்
அரசின் ஆன்லைன் வசதி
பட்டா மாற்றம் செய்தல்