‘ஹோலோகிராம் விஜய்’ ஐடியா ஹீரோ.. தவெக அரசின் புதிய வேளாண் அமைச்சர்.. யார் இந்த வினோத்?

  • சென்னை: கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வினோத் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரக் களத்திலேயே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த இந்த வினோத் யார்?

    Advertisement

    விஜய் அமைச்சரவையில் இளைஞர்கள் பலர் வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தின் பிரதானத் துறைகளில் ஒன்றான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராகக் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    யார் இந்த வினோத்?

    1994ஆம் ஆண்டு பிறந்த வினோத், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவி. ஆடுதுறையில் உள்ள ஸ்ரீ குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், பின்னர் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்தார். இருப்பினும், அந்த படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமல் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சொந்தமாக தொழில் செய்து வந்தார்.

    விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய முகமாகச் செயல்பட்டு வந்தவர் வினோத். தமிழக வெற்றிக் கழகத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே செயல்பட்டு வந்த வினோத் ரவி, தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தார்.

    Advertisement

    விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார டெல்டா பகுதிகளில் தவெக-வின் அடித்தளத்தை அமைத்தவர்களில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உதவி, மருத்துவ முகாம்கள், மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வந்ததால், தொகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு எளிய தலைவராக மாறினார்.

    கட்சியில் தீவிரமாக செயல்பட்ட காரணத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனை எதிர்த்து போட்டியிட்ட வினோத் ரவி, கடும் போட்டிக்குப் பிறகு வெறும் 679 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    Advertisement

    ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய்

    2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வினோத் கையாண்ட உத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விஜய் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்வது சவாலாக இருந்த சூழலில், வினோத் ரவி தொழில்நுட்பத்தைப் புகுத்தினார். கும்பகோணம் தொகுதியில் "3D ஹோலோகிராம்" டெக்னாலஜி மூலம் விஜய்யின் முப்பரிமாண உருவத்தை மக்கள் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் தோன்றச் செய்தார்.

    விஜய் நேரில் நின்று பேசுவது போன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்ட இந்த நவீனப் பிரச்சாரம், இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்த புதுமையான சிந்தனையும், கடுமையான தேர்தல் உழைப்பும் அவரை திமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட கும்பகோணத்தில் மாபெரும் வெற்றி பெற வைத்தது.

    Advertisement

    வேளாண் துறை அமைச்சர்

    இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தில் வினோத் ரவிக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நேரடியாக அமைச்சரவை பொறுப்பைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

    குறிப்பாக விவசாயம் முக்கிய துறையாக இருக்கும் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வேளாண்மைத் துறை வழங்கப்பட்டிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது. கட்சி மாவட்ட செயலாளராக இருந்து, முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அமைச்சராக உயர்ந்துள்ள வினோத் ரவியின் அரசியல் பயணம் தற்போது கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

    Advertisement

    விவசாயிகள் வாழ்விலும் மேஜிக்?

    தேர்தல் பிரச்சாரத்தில் தத்ரூபமான 3D ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்த வினோத் ரவி, அதே நவீனச் சிந்தனையைத் தமிழக வேளாண் துறையிலும் புகுத்துவார், டிஜிட்டல் விவசாயம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கையில்தான் விஜய் இவருக்கு இந்தத் துறையைத் தந்துள்ளார் என்கிறார்கள் டெல்வா மண்டல தவெக நிர்வாகிகள்.

    விஜய் மக்கள் இயக்கத்தின் சாதாரண நிர்வாகியாகத் தொடங்கி, இன்று தமிழகத்தின் மிக முக்கிய துறையான வேளாண் துறையின் அமைச்சராக வினோத் உயர்ந்திருப்பது, அவரது உழைப்புக்குக் கிடைத்த அசல் அங்கீகாரம். 'ஹோலோகிராம்' மூலம் பிரச்சாரத்தில் மேஜிக் செய்த வினோத், இனி தமிழக விவசாயிகளின் வாழ்விலும் மேஜிக் நிகழச் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Vinoth, who contested and won in the Kumbakonam constituency, has now been appointed as the Minister of Agriculture in the cabinet led by Chief Minister Vijay. Who is this individual who captured the attention of the entire state of Tamil Nadu right on the campaign trail?