சென்னை: மாலை முரசு நாளிதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் துணை ஆசிரியராக செயல்பட்டு, அச்சு ஊடக உலகிற்குத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மூத்த பத்திரிகையாளர் R.P. முருகேசன் (70) இன்று காலமானார். பரபரப்பான மீடியா வெளிச்சங்களுக்குப் பின்னால் நின்று, பத்திரிகையுலகையே வியக்க வைத்த இந்த ஆளுமையின் வாழ்வுப் பாதை எப்படிப்பட்டது? மீடியா உலகம் இன்று இழந்து தவிக்கும் R.P. முருகேசனின் பின்னணியில் உள்ள பலரும் அறியாத சில பக்கங்களை இங்கே பார்ப்போம்...!!
மீடியா உலகம் நாள்தோறும் விழித்திருந்து ஆயிரக்கணக்கான செய்திகளை வினாடிக்கு வினாடி வெளித்தள்ளிக்கொண்டே இருக்கிறது... அப்படி அச்சிடப்படும் ஒவ்வொரு எழுத்தின் வழியேயும் வெளிச்சம் வாசகர்களை சென்றடைகிறது.. ஆனாலும் அந்த வெளிச்சத்திற்குப் பின்னால் நின்று தம் வாழ்நாளையே தாரை வார்த்த ஆளுமைகள் பல நேரங்களில் கவனிக்கப்படுவதில்லை..
விளம்பர வெளிச்சங்களின் பக்கம் ஒதுங்கி நின்று, தங்களின் பேனாவையும் உழைப்பையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு அமைதியாகக் கடந்துபோகும் அத்தகைய அரிதான இதழியல் ஆளுமைகளில் ஒருவர் தான் மூத்த பத்திரிகையாளர் R.P. முருகேசன்..!! தனது 35 வயது வரை தூத்துக்குடி மண்ணில் விவசாயம் பார்த்த ஒரு சாமானிய மனிதர், குடும்பத்தின் இழப்புகளுக்கு பிறகு சென்னைக்கு வந்து பத்திரிகையாளராக மாறியதே ஒரு சுவாரசியமான திருப்பம்தான்.. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சோஃபியா என்ற மேன்ஷனின் சிறிய அறையில் அவர் குடியேறியபோது, அவரிடம் பெரிய திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், அந்த குட்டி அறைதான் அடுத்த 35 ஆண்டு காலத்திற்கு உலக அரசியலை அளவிடும் ஒரு மையமாக மாறியது. அவரது சின்ன அறையின் மூலை முடுக்கெல்லாம் புத்தகங்களும் பத்திரிகைகளுமே நிறைந்திருந்தன... கட்டிலில் படுப்பதற்கு கூட இடமில்லாமல், அதன் மீதும் ஏகப்பட்ட புத்தகங்கள் ஆக்கிரமித்து கிடந்தன.. இந்த நவீன தொழில்நுட்ப உலகிலும் ஒரு சாதாரண பட்டன் போனை மட்டுமே வைத்துக்கொண்டு, ஆடம்பரங்களில்லாத நபராகவே வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் முருகேசன்.. 15 வயதிலிருந்தே கதர் ஆடை மட்டுமே அணிந்து வந்துள்ளார்.. இறுதிவரை கலர் ஆடையை உடுத்தியதே கிடையாது.. காலேஜ் போகும்போதும் கூட, கதர் ஆடையுடனேயே சென்று படித்துள்ளார்... அந்தவகையில், கதர் என்பது இவரது ஆடை அல்ல, கவசம் என்றே சொல்லலாம்.. உலக அரசியலின் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருந்தார் முருகேசன்,.. சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் சக பத்திரிகையாளர்களுக்கு தோன்றும் எத்தகைய சந்தேகத்திற்கும் அவரே முதன்மை தீர்வாக விளங்கினார். செய்திகளில் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும், முருகேசனிடம்தான் பத்திரிகையாளர்கள் சந்தேகம் கேட்பார்கள். தமிழ் நாளிதழ் வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மாலை முரசு நாளிதழின் நிறுவனர், அமரர் பா. இராமச்சந்திர ஆதித்தனாரின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவர் R.P. முருகேசன். செய்திகளின் உண்மைத்தன்மையிலும், அரசியல் ஆய்வுகளின் ஆழத்திலும் அவர் காட்டிய நேர்மையே, நாளிதழ் நிர்வாகத்தின் பெரும் மதிப்பிற்கு அவரை உரியவராக்கியது. சர்வதேச மற்றும் தேசிய அரசியல் நகர்வுகளை மிக நுட்பமாக ஆராய்ந்து எழுதிய அவரது கட்டுரைகள், மாலை முரசு நாளிதழுக்கு என்று ஒரு தனித்துவமான வாசகர் வட்டத்தையே உருவாக்கிக் கொடுத்தன. அரசியல் ரீதியாக பாஜகவின் தீவிர அனுதாபியாகவும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மிதமான, ஆளுமைமிக்கக் கொள்கைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்டவராகவும் அவர் திகழ்ந்தார். இதன் காரணமாக, பாஜகவின் மூத்த தலைவர்களான இல. கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் போன்றோருடன் நெருங்கிய நட்பும் பரஸ்பர நன்மதிப்பும் அவருக்கு எப்போதும் இருந்தது. பல அரசியல் தலைவர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள நாடும் அளவுக்கு அரசியல் அறிவு நிரம்பியவராக அவர் இருந்தபோதிலும், தனது பேனா முனையில் ஒருபோதும் கட்சிச் சார்பையோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையோ அனுமதித்ததில்லை. பத்திரிகையாளருக்குரிய Journalistic Ethics என்று சொல்லக்கூடிய தொழில்முறை நேர்மையை தன் இறுதி மூச்சு வரை கடைப்பிடித்தார். மூத்த பத்திரிகையாளர் முருகேசனின் அரசியல் சிந்தனை, வெறும் கோட்பாடுகளோடு நின்றுவிடவில்லை,.. அது கொள்கைப் பிடிப்பாகவும் மாறியது.. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை ஜனநாயகத்தின் மீதான வடுவாகக் கருதிய அவர், ஆண்டுதோறும் எமர்ஜென்சி நினைவுநாளில் தவறாமல் உண்ணாவிரத அறப்போராட்டத்தைக் கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது கூட, அந்த நினைவுநாளில் தன் உண்ணாநோன்பு உறுதியை கைவிட மறுத்தார்.. படுக்கையிலும் கூடத் தனது கொள்கைப் பிடிப்பிலிருந்து ஒரு அங்குலமும் விலகாத அந்த உடும்பிபிடி கொள்ளை குணம், அவரது நேர்மைக்கும் கோட்பாட்டு உறுதிக்கும் சான்றாக அமைந்தது. கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல், வாசிப்பையும் பத்திரிகை பணியையுமே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த R.P. முருகேசன், சமீபத்தில் பணி ஓய்வுபெற்று தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றார். காசநோயின் பாதிப்பால் உடல்நலம் குன்றியிருந்த நிலையில், இன்று காலை அவரது இறுதி மூச்சு காற்றில் கலந்தது. செய்திகளைத் தேடி ஓடும் அவசர உலகில், தமக்கென எதையும் கோரிப் பெறாமல், எளிமையையே ஆபரணமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த R.P. முருகேசனின் வாழ்வு, இன்றைய தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கு ஒரு நிசப்தமான பாடம்..! பேனா முனையை கவசமாகவும், கதர் ஆடையை அடையாளமாகவும் கொண்டு வாழக் கற்றுக்கொடுத்த ஒரு பேராசான் இன்று அமைதியாக விடைபெற்றுவிட்டார். அச்சு இயந்திரங்களின் சத்தத்திற்கு நடுவே, அவரது இந்த நிசப்தமான மறைவு இதழியல் துறைக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு...!! அவர் விட்டுச்சென்ற அந்த சோஃபியா மேன்ஷன் அறையின் புத்தகங்களில், இப்போதும் ஒரு உண்மையான பத்திரிகையாளனின் வாசனை வீசிக் கொண்டுதான் இருக்கும்...!!!R.P. முருகேசன் யார்
உலக அரசியலை கரைத்து குடித்த முருகேசன்
பாஜக மீதான பற்று, நேசம்
எமர்ஜென்சி - உண்ணாவிரதம்
நிசப்தமான பாடம்
மேன்ஷன் அறை வாசம்