1 சவரன் தங்கம் + பட்டுப்புடவை யாருக்கெல்லாம் கிடைக்கும்? விஜய் அரசின் பட்ஜெட் பிளஸ், மைனஸ்

  • சென்னை: விஜய் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தன்னுடைய முதலாவது திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், அதுகுறித்த கருத்துக்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.. அதில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.. இப்போது 88 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. அதற்குள் பட்ஜெட் தாக்கல் என்பது, தமிழக மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விட்டது.

    Advertisement

    "ஆட்சி மாறினால் காட்சி மாறும்"

    "ஆட்சி மாறினால் காட்சி மாறும்" என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு, இந்த நிதிநிலை அறிக்கை புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறதா அல்லது நிதி நெருக்கடியில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதையும் நடுநிலையோடு ஆராய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

    ஒருபுறம், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிக்கு வலுசேர்க்கும் வகையில், "அண்ணன் சீர்" திட்டத்தின்கீழ் மணப்பெண்ணுக்கு 1 பவுன் (8 கிராம்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

    Advertisement

    விஜய் அரசின் முதல் பட்ஜெட்

    அதேபோல இஸ்லாமியர்களின் ஹஜ் யாத்திரைக்கான மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பது, வேளாண் துறை மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு, பால்வளம், உணவு பதப்படுத்துதல் போன்ற மதிப்புக்கூட்டு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது போன்றவை பாராட்டத்தக்க அம்சங்களாகும்.

    அரசு டெண்டர்களில் நிலவிவந்த கமிஷன் முறையை கட்டுப்படுத்தி வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயற்சிப்பது, நீட் தேர்வை ரத்து செய்து 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை வலியுறுத்துவது ஆகியவை ஆட்சியாளர்களின் சமூகப் பொறுப்பை நன்றாகவே காட்டுகின்றன.

    தாய்மாமன் தங்கத்தில் 1 பவுன்

    ஆனால் இன்னொருபுறம் இந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சில ஏமாற்றங்களையும் அளித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அதிகமாக பேசப்பட்டது மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 இலவச சமையல் கேஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள்தான். ஆனால், அவை இரண்டுமே இந்த பட்ஜெட்டில் விடுபட்டுள்ளன.

    Advertisement

    புதிய அரசின் மீதமுள்ள பதவி காலத்தில் இவை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முதல் பட்ஜெட்டிலேயே இது இடம்பெறும் என்று நம்பியிருந்த பெண்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகவே அமைந்தது.

    தவெக அரசு - கடன் சுமை

    இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமான சவாலாக உருவெடுத்து நிற்பது மாநிலத்தின் நிதி மேலாண்மைதான்... தமிழகத்தின் இப்போதைய கடன் அளவு ரூ.10.98 லட்சம் கோடி என்ற நிலையை எட்டியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சராசரியாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை உள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

    நடப்பு 2026-27 நிதியாண்டில் மட்டும் மேலும் ரூ.1,73,445 கோடி கடன் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதும், இந்த ஆண்டிற்கான வட்டித் தொகையாகவே ரூ.78,683 கோடி கட்ட வேண்டியிருப்பதும் நிதி நெருக்கடியை நன்றாகவே உணர்த்துகின்றன. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ரூ.21,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

    Advertisement

    பட்ஜெட்டின் பிளஸ், மைனஸ்

    எனவே தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டில் புதிய மாற்றத்திற்கான பல ஆரோக்கியமான விதைகளும், தொலைநோக்குத் திட்டங்களும் தூவப்பட்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதேசமயம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடன் சுமையை கட்டுப்படுத்துவதிலும், கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதிலும் அரசுக்கு மிகப்பெரிய நிதித் தடுமாற்றம் நிலவுவதையும் மறைக்க முடியாது.

    "நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும்" என்ற நிதி அமைச்சரின் கருத்தும், "கடன் குறையாது" என்ற அதிகாரிகளின் கருத்தும் எதார்த்த நிலையையே பிரதிபலிக்கின்றன. அதனால் திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடாமல், வருவாயை பெருக்கி, நிதி நிர்வாகத்தை சீரமைத்து வெற்றிப் பாதையில் பயணிப்பதே இந்த அரசின் முன்னால் இருக்கும் நிஜமான சவாலாகும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Vijay Government’s First Budget.. Who Benefits from the 1 Sovereign Gold Scheme Amid ₹10.98 Lakh Crore Debt?