சென்னை: தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், இந்தியா கூட்டணியை வழிநடத்துவதாக சொல்லிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் சீனில் இல்லை. குறிப்பாக ராகுல் காந்தி சென்னையில் முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(CPM) உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.
இன்று காலை முதல் ரயில், விமானங்கள், பேருந்துகள் மூலம் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்ல முயன்றனர். ஆனால் இவர்களை பாதியில் வழி மறித்த போலீசார் அப்படியே கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ரயில்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி முழுமுவதும் சுமார் 40க்கும் அதிகமான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. செல்போன் டவர் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மொத்த டெல்லியிலும் போர் பதற்றம் போன்ற சூழல் உருவாகியிருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்கார், திரிணாமுல், சிபிஐ, சிபிஎம் எம்பிக்கள் என இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் டெல்லியில் இருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கையில், ராகுல் காந்தி இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் அதன் வீரியம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் ராகுல் காந்தி சென்னையில் முதலமைச்சர் விஜய்யுடன் மத்திய விருந்தில் பங்கேற்றிருக்கிறார். இப்படிதான் ஸ்கோர் செய்ய வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கோட்டை விட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் காங்கிரஸை சரமாரியாக போட்டு பொளந்து வருகிறார்கள். போராட்டத்தை வழிநடத்தும் CJP தலைவர் அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், AISA தலைவர் நேஹா போரா உள்ளிட்டோர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிறைச்சாலைக்கோ.. மண்டபங்களிலோ அடைக்கப்படவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீப்கேவின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். தீப்கேவை தொடர்புக்கொள்ள அவரது வழக்கறிஞர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் டெல்லி அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை. இதற்காக நின்று சண்டை செய்ய வேண்டிய ராகுல் காந்தி அங்கு இல்லாதது ஏன்? ரெண்டு நாட்கள் போராட்டம் நடத்தி கைதானவர் மூன்றாவது நாளான இன்று ஏன் டெல்லியில் இல்லை? திட்டமிட்டே பாஜகவுக்கு சப்போர்ட் செய்கிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எதிர்க்கட்சி அரசியலில் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் வெறுமென சம்பிரதாயமான போராட்டங்களில் மட்டும்தான் காங்கிரஸ் இருக்கிறது. ரிஸ்க் எடுக்க ராகுல் காந்தியோ, மற்ற தலைவர்களோ தயாராக இல்லை. எனவேதான் பாஜகவிடம் காங்கிரஸின் செயல்பாடுகள் வேலைக்கு ஆகாமல் இருக்கின்றன என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.