வில்லங்க சான்றிதழ் அவசியம்.. Nil வந்தாலும் இதை மிஸ் பண்ணாதீங்க! சொத்து வாங்குவோருக்கு தமிழக அரசு வசதி

  • சென்னை: நிலம் வாங்குவதற்கு முன் நாம் அவசியம் சரிபார்க்க வேண்டிய மிக முக்கியமான ஆவணம் வில்லங்க சான்றிதழ் ஆகும்.. இந்தச் சான்றிதழ் ஒரு சொத்தின் மீதான கடந்த கால சட்டப்பூர்வ சிக்கல்களைத் தெளிவாக விளக்கி, உங்கள் முதலீட்டைப் பாதுகாக்கும் கேடயமாகச் செயல்படுகிறது.. வில்லங்க சான்றிதழ் தொடர்பான முக்கிய தகவல்களையும், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களையும் இந்தச் செய்தியில் சுருக்கமாக காணலாம்.

    Advertisement

    நிலம் வாங்குவது என்பது ஒவ்வொரு சராசரி மனிதனின் வாழ்நாள் கனவு மற்றும் மிகப்பெரிய முதலீடு ஆகும். ஆனால், அவசரத்தில் முறையாக வில்லங்க சான்றிதழைப் பார்க்காமல் ஒரு நிலத்தை வாங்குவது என்பது, தெரிந்தே ஒரு புதைகுழியில் கால் வைப்பதற்குச் சமம் என்பார்கள்.

    Advertisement

    ஒரு சொத்தின் கடந்த கால வரலாறு, அதாவது அந்த சொத்து யாருடையது, விற்பனை செய்யப்பட்டது, கடன் வாங்கப்பட்டுள்ளதா அல்லது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா போன்ற அனைத்து விவரங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழ்.

    வில்லங்க சான்றிதழ் அவசியம்

    வில்லங்க சான்றிதழ் இல்லாமல் நிலம் வாங்கினால், அந்த நிலம் ஏற்கனவே வேறொருவருக்கு விற்கப்பட்டிருக்கலாம் அல்லது அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் நிலத்தை வாங்கி முடித்த பிறகு வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் போதுதான் பல கசப்பான உண்மைகள் தெரியவரும்.

    மேலும், குடும்ப பங்கீடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலத்தை தெரியாமல் வாங்கிவிட்டால், உங்கள் பணம் பறிபோவதுடன், மீதி காலத்தை நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிப்பதிலேயே கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும். எனவே, சிக்கல்களை தவிர்க்க வில்லங்க சான்றிதழ் சரிபார்ப்பு மிக முக்கியம்.

    Advertisement

    இதனிடையே, வில்லங்க சான்றிதழில் "Nil Encumbrance" என்று இருந்தால், அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த நிலத்தின் மீது எந்த விதமான வில்லங்கங்களும் பதிவேட்டில் இல்லை என்று பொருள். இது நிலம் வாங்குபவருக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. இருந்தாலும் "Nil" என்று வந்துவிட்டாலே கண்ணை மூடிக்கொண்டு நிலத்தை வாங்கிவிடக் கூடாது.

    சட்ட நுணுக்கங்கள்

    சில நேரங்களில் கூட்டுறவு வங்கிக் கடன்கள் அல்லது நீதிமன்றத் தடை உத்தரவுகள் உடனடியாக வில்லங்க சான்றிதழில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கலாம். எனவே, குறைந்தபட்சம் 30 ஆண்டுகால வில்லங்க சான்றிதழை எடுத்து நுணுக்கமாக சரிபார்ப்பது அவசியம். ஆவணங்கள் நூறு சதவீதம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த நிலம் உங்களுக்கு உண்மையான சொத்தாக நிலைத்திருக்கும்.

    Advertisement

    இந்த நிலையில், தமிழ்நாடு பதிவுத்துறை சொத்து பரிமாற்றங்களை இன்னும் எளிமையாக்கும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தமிழக சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பதிவு நாளிலேயே பொது மக்களுக்கு பத்திரத்தை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பத்திரங்கள் - புதிய நடைமுறை

    சொத்து கள ஆய்வு தேவைப்படும் நிகழ்வுகளைத் தவிர்த்து, பிற பத்திரங்களை அதே நாளில் திருப்பித்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, பதிவு பணிகளை முடித்தாலும், தகவல்களை பதிவுத்துறை தகவல் தொகுப்பில் சேர்க்க ஓரிரு நாட்கள் ஆகும். அந்த இடைவெளியில்தான் வில்லங்க சான்றிதழ் பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    இனிமேல் பதிவு முடிந்த நாளிலேயே, பத்திரம் கையில் கிடைக்கும் முன்னரே, வில்லங்க சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு மொபைல் போன் வாயிலாக அனுப்பும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்யும் போதே அதற்கான தகவல்கள் உடனே தரவுத்தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    சொத்து வரி, மின்சாரம்

    இதனை தொடர்ந்து பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிற்கு பதிவுத்துறை ஒரு மெசேஜ் அனுப்புகிறது. அந்த மெசேஜ் தான் ஒரு இணையதள லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால், அந்த சொத்து குறித்த சமீபத்திய பரிமாற்றம் அடங்கிய வில்லங்க சான்றிதழை மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இணைய இணைப்பு 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

    Advertisement

    மக்கள் இந்த சான்றிதழை சொத்து வரி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு பெயர் மாற்றங்களைச் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் சாமானிய மக்களின் நிலம் சார்ந்த பணிகளை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Encumbrance Certificate importance! Don’t Ignore This Check Even If EC Shows Nil! Tamil Nadu Govt Alert