சென்னை: தாராபுரம்.. மதுராந்தகம்.. இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவு, இந்த 2 தொகுதிகளில் வெற்றி பெறும் 2 எம்எல்ஏக்களை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை.. தமிழக அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒரு முக்கியமான அரசியல் கணக்கையும் வெளிப்படுத்தப்போகிறது.,, காரணம், இந்த தேர்தல் 3 முக்கிய கட்சிகளுக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியமானதாக இருக்கிறது. அது என்னென்ன காரணங்கள் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
அதிமுகவை எடுத்துக்கொண்டால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 2 தொகுதிகளுமே அதிமுகவின் பலமான களமாகவே பார்க்கப்பட்டன. அதனால், இடைத்தேர்தலில் அந்த தொகுதிகளில் மீண்டும் தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டது.
குறிப்பாக தாராபுரம் ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு சாதகமான களமாக இருப்பதாக கட்சியினர் கருதினார்கள்.. ஆனால், தேர்தல் பணிகளை வேகப்படுத்த வேண்டிய நேரத்தில் சில நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதாகவும், சிலர் தவெக பக்கம் சென்றதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால்தான் உள்ளூர் நிர்வாகிகளை மட்டுமே நம்பாமல், வெளியிலிருந்து கட்சியினரையும் களமிறக்கி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார். மதுராந்தகத்திலும் கே.பி.முனுசாமி தலைமையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.. அதனால், இந்த முடிவு அதிமுகவுக்கு 2 தொகுதிகளின் கணக்கு மட்டுமல்ல. பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளில் தனது வாக்கு பலத்தை கட்சி இன்னும் தக்க வைத்திருக்கிறதா? எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இயந்திரம் ஒருங்கிணைந்து செயல்படுகிறதா? என்ற கேள்விகளுக்கும் இந்த முடிவு ஒரு பதிலை கொடுக்கப்போகிறது. அதுமட்டுமல்ல, அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்வி, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் போன்றவற்றால் ஏற்கனவே தொண்டர்கள் மத்தியில் சோர்வு இருப்பதாக பேசப்படும் நிலையில், இந்த தேர்தல் முடிவு கட்சியின் அடுத்தகட்ட மனநிலையையும் தீர்மானிக்கும்.. அதிமுகவுக்குள் தலைமைக்கு எதிராக காத்திருக்கும் அணிகளுக்கும் இந்த முடிவு முக்கியமான அரசியல் ஆயுதமாக மாறக்கூடிய சூழலும் இருக்கிறது. அடுத்து திமுகவுக்கும் இந்த வெற்றி முக்கியம்.. தாராபுரம், மதுராந்தகம் என 2 இடங்களிலும் திமுகவுக்கு எளிதான களங்கள் கிடையாது. இதில் மதுராந்தகத்தில் கடந்த 2 தேர்தல்களிலும் திமுகவால் வெற்றி பெறவே முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பலம் இருந்தபோதும் 3வது இடத்துக்குத்தான் வர முடிந்தது. ஆனால் இந்த முறை நிலைமை வேறு.. திமுக கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்கியுள்ளது. அதனால் இந்த 2 தொகுதிகளில் கிடைக்கும் வாக்குகள், திமுகவின் சொந்த களபலத்தை அளவிடுவதற்கான முக்கியமான அளவுகோலாக பார்க்கப்படுகிறது. இதுவரை கூட்டணி பலத்தை நம்பியே தேர்தல் அரசியல் செய்வதாக திமுக மீது விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தல் அந்த விமர்சனத்துக்கு நேரடியான பதிலை கொடுக்கக்கூடிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெகவை எதிர்த்து திமுக தனது அமைப்பு பலத்தையும், கீழ்மட்ட நிர்வாகிகளின் தேர்தல் பணியையும் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கியபோது தாராபுரத்தில் தவெகவின் களநிலை, வேட்பாளர் மீதான அதிருப்தி, அதிமுக நிர்வாகிகளின் சுணக்கம் போன்றவை தங்களுக்கு சாதகமாக மாறியிருப்பதாக திமுக கணக்கிட்டது. இதனால் கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினும் தொகுதி பொறுப்பாளர்கள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார். இதனால் திமுகவுக்கு இந்த தேர்தல், ஒரு இடைத்தேர்தலை தாண்டி "கூட்டணி இல்லாமலும் திமுகவால் களத்தில் தனது பலத்தை காட்ட முடியுமா?" என்ற கேள்விக்கு பதில் தேடும் தேர்தலாக மாறியுள்ளது. ஆனால், இந்த தேர்தலின் மையப்புள்ளியே தவெகதான். ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. தவெக அரசின் முதல் பெரிய மக்கள் பரிசோதனையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் தேவையில்லாத ஒன்று, குதிரை பேரத்தின் விளைவு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விமர்சனங்களை தாண்டி தனது அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தவெகவுக்கு இருக்கிறது. அதேபோல வேட்பாளர்களை நோக்கி எதிர்ப்புகள் தெறித்தன.. இதனால் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கி 4 நாட்கள் பிரச்சாரம் செய்யும் நிலைமைக்கு, களங்கள் கலக்கத்தை தந்தன.. அந்தவகையில், இந்த இடைத்தேர்தல் முடிவு தவெகவின் தேர்தல் திறனை மட்டுமல்ல, விஜய்யின் அரசியல் செல்வாக்கையும் அளவிடப்போகிறது. ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எதிர்கொள்ளும் முதல் தேர்தலில், அந்த கட்சிக்கு வாக்காளர்கள் எப்படி பதிலளித்திருக்கிறார்கள் என்பதை இந்த முடிவு காட்டப்போகிறது. ஆக, அதிமுகவுக்கோ இது பழைய பலத்தை அளவிடும் தேர்தல்.. திமுகவுக்கோ, தனது சொந்த பலத்தை கணக்கிடும் தேர்தல்.. தவெகவுக்கோ மக்களை நேரடியாக சந்திக்கும் முதல் பெரிய சோதனை.. முடிவு 3 கட்சிகளுக்கும் 3 வெவ்வேறு விஷயங்களை அளவிடப்போகின்றன.. அந்தவகையில், 3 கட்சிகளுக்கும் இது மிகப்பெரிய அரசியல் கணக்கு..!தாராபுரம், மதுராந்தகம்
எடப்பாடி பழனிசாமி & அதிமுக
திமுகவுக்கும் இந்த வெற்றி முக்கியம்
ஸ்டாலினின் கடைசி நேர பிரச்சாரம்
தவெக - பெரிய பரிசோதனை
3 கட்சிகள் - 3 விஷயங்கள்