சென்னை: விமானத்தில் பயணம் செய்யும்போது பலருக்கும் ஜன்னல் சீட் மீது தனி ஆர்வம் இருக்கும். விமானம் வானில் பறக்கும்போது வெளியே தெரியும் அழகான காட்சிகளை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான அனுபவம். ஆனால், அந்த ஜன்னல்களை உற்று பார்த்திருக்கிறீர்களா? அவை ஏன் எப்போதும் சதுரமாக இல்லாமல் வட்டமான வடிவில் இருக்கின்றன? என்ற கேள்வி வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!
இந்த காலத்தில் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருவர் முதல்முறை விமானத்தில் பயணித்தாலும் சரி, 1000 முறைக்கு மேல் பயணித்திருந்தாலும் சரி அனைவரையும் ஈர்ப்பது அந்த ஜன்னல் சீட் தான். விமானத்தில் இருந்தபடி ஜன்னலை பார்த்தால் வெளியே தெரியும் அழகே தனி!
அப்படி ஜன்னல் சீட்டில் பயணிக்கும்போது நாம் ஒரு விஷயத்தை கவனித்திருப்போம். அதாவது விமானத்தின் ஜன்னல் வீட்டில் இருக்கும் ஜன்னலை போல சதுர வடிவில் இருக்காது. மாறாக அது வட்ட வடிவில் இருக்கும். இது வெறும் அழகுக்காக உருவாக்கப்பட்ட டீசைன் கிடையாது. அதன் பின்னால் முக்கியமான பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் இந்த வட்ட வடிவம் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது. விமான ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கான மிக முக்கியமான காரணம் பாதுகாப்பு தான். வட்ட வடிவம் அழுத்தத்தை ஜன்னலின் விளிம்புகளில் ஒரே இடத்தில் குவியாமல் சீராக பகிர்ந்துகொள்ள உதவுகிறது. ஆனால், சதுர ஜன்னல்களின் மூலைகளில் அழுத்தம் அதிகமாகக் குவிய வாய்ப்புள்ளது. இதனால் காலப்போக்கில் அந்த மூலைகளில் சிறிய விரிசல்கள் உருவாகி, அவை பெரிதாகும் அபாயம் ஏற்படலாம். வட்ட வடிவத்தின் மூலம் இந்த அபாயம் குறைக்கப்படுகிறது. விமானம் அதிக உயரத்துக்கு செல்லும்போது, விமானத்திற்கு வெளியே உள்ள காற்றழுத்தம் கணிசமாகக் குறைகிறது. அதே நேரத்தில், பயணிகள் சுவாசிப்பதற்கு ஏற்ற வகையில் விமானத்தின் உள்ளே செயற்கையாக அழுத்தம் பராமரிக்கப்படுகிறது. இதனால் விமானத்தின் உடற்பகுதியில் தொடர்ந்து அழுத்த வேறுபாடு ஏற்படுகிறது. வட்டமான ஜன்னல்கள் இந்த அழுத்தத்தை சிறப்பாகப் பகிர்ந்து கொள்வதால், மீண்டும் மீண்டும் ஏற்படும் அழுத்த மாற்றங்களை தாங்குவதற்கு ஏற்றதாக இருக்கின்றன. மேலும், ஒரு விமானம் ஒவ்வொரு முறையும் பறக்கும்போதும் அதன் கேபினில் அழுத்தம் அதிகரிக்கிறது.. தரையிறங்கியதும் மீண்டும் குறைகிறது. இவ்வாறு தொடர்ந்து மாறி மாறி அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதும் நடப்பதால் விமானத்தின் உலோக உடற்பகுதியில் காலப்போக்கில் பாதிப்பு ஏற்படலாம். வட்டமான ஜன்னல்கள் அழுத்தத்தை சிறப்பாகப் பகிர்வதால், விமானத்தின் கட்டமைப்பில் ஏற்படும் இந்த சுமை குறையும். விமானம் வானில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் நிலையில், ஜன்னல் அல்லது விமானத்தின் உடற்பகுதியில் ஏற்படும் கட்டமைப்பு கோளாறு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். வட்ட வடிவ ஜன்னல்களின் வலுவான கட்டமைப்பு, அழுத்தத்தால் ஜன்னலில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. இதனால் அவை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது மட்டுமின்றி விமானத்தின் உடற்பகுதி நேரான பெட்டியை போல இருக்காது.. இந்த வளைந்து இருக்கும். அந்த கட்டமைப்புடன் வட்டமான ஜன்னல்களே சிறப்பாக பொருந்தி போகும். மேலும், வட்டமான வடிவம் விமானத்தின் உடற்பகுதியில் அழுத்தம் சீராகப் பரவுவதற்கும் உதவுகிறது. எனவே, அடுத்த முறை விமானத்தில் ஜன்னல் சீட் கிடைக்கும்போது, வெளியே தெரியும் காட்சிகளை ரசிப்பதோடு, உங்கள் அருகில் இருக்கும் ஜன்னல் டீசைன் வெறும் அழகிற்கு மட்டுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சதுர வடிவம்
காரணம்
கேபின் அழுத்தம்
சரியான டிசைன்