தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏன்.. அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளிப்பாரா?

  • சென்னை: கோடைகால வெப்பத்தின் காரணமாக தமிழ்நாட்டில் மின் தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 19 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 21 ஆயிரம் மெகாவாட் இதனால் மாலை நேரங்களில் மின்பற்றாக்குறை ஏற்படலாம் என மத்திய மின் துறை கடந்த மாதமே எச்சரித்திருந்தது. எனினும் அரசு கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது. இதனால் கோடை காலம் முழுவதும் தமிழ்நாட்டில் எங்கும் மின்சார தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    Advertisement

    ஆனால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதுமே அறிவிக்கப்படாத மின்வெட்டால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது தமிழ்நாட்டில் ஒரு செயற்கை தட்டுப்பாடா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளிப்பாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி நள்ளிரவில் வில்லிவாக்கம், திருவொற்றியூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் அவதி அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதேபோல் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனி, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், மதுரவாயல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதேபோல் சென்னை கொளத்தூர் அடுத்த ரேவதி நகர், கடப்பா சாலை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கொளத்தூர் செந்தில் நகர் மெயின் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னையில் வியாசர்பாடி அடுத்த சர்மா நகர், சாஸ்திரி நகர், மகாகவி பாரதி நகர், புது நகர், காந்தி நகர், எருக்கஞ்சேரி பகுதிகளிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக கூறி நேற்று முன்தினம் நள்ளிரவு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அதேபோல் ஆலந்தூர், நங்கநல்லூர் மற்றும் முகலிவாக்கம் பகுதிகளிலும் நேற்று தொடர்ந்து ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் (லோ வோல்டேஜ்) இருந்து வருகிறது. இதனால் வீடுகளில் இருந்து பணி செய்யும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தினசரி பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரவில் மின்விசிறியைகூட இயக்க முடியாத அளவிற்கு நிலைமை இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு வராது என்று உறுதி அளித்த மின்சார வாரிய அதிகாரிகள் அதனை முறையாக கடைபிடிக்காமல் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நடத்துபவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மின் பராமரிப்பு என்ற பெயரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தொழிற்சாலைகளும் பெரிதளவில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    மின்தடை ஏற்படும்போது மின்வாரிய அலுவலகங்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போதும், 'விரைவில் மின்சாரம் வந்துவிடும்' என பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது, ஆனால் பல இடங்களில் மின் விநியோகம் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய முன்னாள் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், மின்சார துறையை தமிழ்நாட்டில் தனியார் மயமாக்க மத்திய அரசு விரும்புகிறது. அதற்கு துணை போகும் வகையில் நடவடிக்கை இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார். எனவே மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் , ஏன் தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்று விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரிய வரும். விரைவில் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Will Electricity Minister Nirmal Kumar provide an explanation for the unannounced power cuts in Tamil Nadu?