பெட்ரூம் வரை கேமரா.. நாளெல்லாம் இன்ச் இன்ச்சாக வாட்ச் பண்ணிய கணவர்.. 47வது நாளில் என்னாச்சு தெரியுமா

  • சென்னை: திருமணம் முடிந்த 47 நாட்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கியுள்ளது.. ஆயிரம் கனவுகளுடன் புது வாழ்வில் அடியெடுத்து வைத்த அந்த பெண்ணுக்கு, எதிர்பாராத பெரும் அதிர்ச்சி மாமியார் வீட்டில் காத்து கொண்டிருந்தது.. இதுதொடர்பான புகாரில், பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் கொழுந்தன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தின் அம்பர்நாத் சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விசாக்கா தில்கர் (26). இவருக்கும் நிதின் தில்கர் என்ற டாக்டருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி முறைப்படி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

    Advertisement

    புதுமண தம்பதி இல்லற வாழ்க்கை

    திருமணமான ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவர் நிதின் மற்றும் அவரது குடும்பத்தாரின் அசல் குணம் வெளியே வரத் தொடங்கியது.

    திருமணத்தின் போது வரதட்சணையாக தங்களுக்குப் போதிய தங்க நகைகளும், பணமும் வரவில்லை என்று கூறி விசாக்காவை அவரது புகுந்த வீட்டினர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் டார்ச்சர் செய்ய துவங்கி உள்ளனர்.. மேலும் விசாகாவின் பெற்றோரிடம் இருந்து கூடுதலாக 50 கிராம் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு கணவர் மற்றும் மாமியார் தரப்பில் தொடர்ந்து கட்டாயப்படுத்தி, கடுமையான சித்ரவதைகளை செய்து வந்துள்ளனர்.

    Advertisement

    திரும்புற பக்கமெல்லாம் சிசிடிவி கேமரா

    இதற்கெல்லாம் மேலாக, விசாகாவின் மொத்த சுதந்திரத்தையும் பறித்துள்ளார் அவரது கணவர் நிதின்.. எந்தவொரு தனிமனித சுதந்திரமும் இல்லாமல் அடிமை போல நடத்தி வந்தாராம்.. குறிப்பாக விசாகாவின் நடத்தையின் மீது அநாவசியமாக சந்தேகம் கொண்ட அவர், வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும், உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். இதற்கான கனெக்‌ஷனை தன்னுடைய செல்போனில் வைத்து கொண்டார்.

    விசாக்கா வீட்டில் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று 24 மணி நேரமும் தன்னுடைய செல்போன் கேமரா மூலம் கணவர் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருந்தாராம்.

    Advertisement

    பக்கத்து வீட்டில் பேசிய மனைவி

    அதாவது அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் கூட விசாகா பேசக்கூடாது என்று மாமியார் குடும்பத்தினர் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக கூட பேசக்கூடாதாம்.

    ஒருவேளை மீறி யாரிடமாவது பேசினால், சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துவிட்டு கணவர் நிதின் வீட்டிற்கு வந்து விசாக்காவை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்துவாராம்.. இதனால் அந்த பெண் தனது சொந்த வீட்டிற்குள் ஒரு கைதியைப் போல வாழ்ந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று, அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண் ஒருவரிடம் விசாகா பேசியதாகத் தெரிகிறது. இதை சிசிடிவி கேமரா மூலம் பார்த்து கொந்தளித்து விட்டார் நிதின்.. உடனே வீட்டிற்கு வந்து விசாகாவை கொடூரமான முறையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனைக்கும் அவமானத்திற்கும் ஆளான விசாகா, தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகள் எல்லாம், தன் அம்மாவுக்கு போனை போட்டு சொல்லி கதறி அழுதுள்ளார்..

    Advertisement

    பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்

    தன் மகள் படும் துயரத்தைக் கேட்டு பதறிப்போன விசாக்காவின் பெற்றோர், உடனடியாக மகளைத் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துவிடவும், மாப்பிள்ளை வீட்டாரிடம் நியாயம் கேட்கவும் அம்பர்நாத்திற்கு கிளம்பி செல்ல தயாரானார்கள்.. ஆனால் பெற்றோர் அங்கு வந்து சேருவதற்கு முன்பாகவேவே, விசாகா நேற்று தன்னுடைய வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து சிவாஜி நகர் காவல் நிலைய போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாக்காவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாகாவின் அப்பா, போலீசில் அளித்த விரிவான புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவர் நிதினை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Advertisement

    சுற்றி வளைக்கப்பட்ட மாமியார்

    மாமியார் சாயாபென் மற்றும் கணவரின் சகோதரர் நிநாத் ஆகியோரை குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த மாமியாரும், கொழுந்தனும் தப்பியோடி தலைமறைவாக இருந்திருக்கிறார்களாம்.. எனினும், தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி சுற்றி வளைத்து கைது செய்து விட்டனர்.

    திருமணம் முடிந்த 47 நாட்களிலேயே விசாக்கா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.. சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது...!!!

    English Summary

    Why Did a Husband Monitor His Wife Around the Clock? The Shocking Turn on Day 47 of Marriage