திமுக கூட்டணிக்கு ‘குட்பை'.. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வெளியேறியது ஏன்? பின்னணியில் மெகா பிளான்


  • சென்னை: தவெக தலைமையிலான அரசில் இணைந்ததை தொடர்ந்து, திமுகவுடனான உறவை அதிகாரப்பூர்வமாக துண்டித்துக் கொண்டுள்ளது இந்தியன் யூனியஸ் முஸ்லிம் லீக் கட்சி. இந்நிலையில் தான் 60 ஆண்டு கால திமுக பந்தத்தை கைவிட்டு வெளியேறியதன் பின்னணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வைத்துள்ள திட்டம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாணியம்பாடி, பாபநாசம் சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் வாணியம்பாடி தொகுதியில் சையது பாரூக் பாஷா, பாபநாசம் தொகுதியில் ஏஎம் ஷாஜகான் ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தலுக்கு பிறகு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தவெகவின் பக்கம் சாய்ந்தது. தவெகவிற்கு ஆதரவு வழங்கியது.

    Advertisement

    முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏஎம் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நேற்று சென்னை ராயபுரத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வசதியாக அதற்கான பணிகளை தொடங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவித்தார். தவெக அரசில் இணைந்தாலும் கூட தொடர்ந்து திமுகவுடன் நட்பு பாராட்டிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இப்போது கூட்டணியை முறித்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதன் பின்னணி பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற முதல் காரணம் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தான். இந்த உள்ளாட்சி தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் பதவிகளையும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் தலைவர் பதவிகளையும் கைப்பற்ற அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. திமுக கூட்டணியில் 60 ஆண்டுகளாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அங்கம் வகித்தாலும் கூட இந்த பதவிகள் அந்த கட்சிக்கு கிடைத்தது இல்லை. இதனால் தற்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

    அதேவேளையில் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைமை பொறுப்பை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியால் பெறுவதற்கான பலம் இருக்கிறதா? என்றால் இல்லை. இதனால் முதற்கட்டமாக அந்த கட்சி தனது கட்டமைப்பையும், தொண்டர்களின் பலத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    மேலும் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை தவெகவிடம் கேட்டு பெறவும், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். அதுதான் இப்போது நடந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தவெகவை பொறுத்தவரை இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர ஒரு கட்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை அரவணைக்கவும் வாய்ப்புள்ளது.

    Advertisement

    இதுபற்றி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது,''கேரளாவை தாண்டி கட்சியின் கட்டமைப்பை விரிவுப்படுத்தும் திட்டம் 2025ம் ஆண்டில் இருந்தே பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு எங்கள் கட்சியின் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டதே இந்த திட்டம் தொட்ஙகிவிட்டது. ஒரு மதச்சார்பற்ற முஸ்லிம் கட்சியின் தேவை மாநிலம் முழுவதும் உணரப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நான்கு மாநகராட்சி கவுன்சிலர்களை எங்கள் கட்சி வென்றுள்ளது. இது எங்களது நீண்ட பயணத்தின் முதல் மைல்கல் ஆகும்.

    எப்போதுமே தனி ஒரு கட்சியால் மட்டுமே ஆளப்பட்டு வந்த தமிழகத்தில், தற்போதைய அரசில் ஒரு அங்கமாக இருப்பது எங்களது இரண்டாவது மைல்கல். தமிழக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இடம் கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் தொண்டர்களின் பலத்தை அதிகரிக்க இதுதான் நல்ல வாய்ப்பாகும்'' என்றனர்.

    Advertisement

    மேலும் தமிழகத்தில் தற்போது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கட்சியை மறுசீரமைக்கவும், மாநிலம் தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை முன்னெடுக்கவும் அக்கட்சியின் தேசிய தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது.

    இது தொடர்பாக ஐயுஎம்எல் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மகனும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ஹபிபுர் ரஹ்மான் கூறுகையில், ''மாநில அரசில் பங்கு பெற்ற பிறகு எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. தவெக உடனான கூட்டணி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சமூக மக்களிடையே கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் குறித்து நேற்று நடந்த கட்சியின் மாநில பொதுக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது'' என்றார்.

    English Summary

    Following its decision to join the TVK-led alliance, the Indian Union Muslim League (IUML) has officially severed ties with the DMK. Amidst this development, key details have emerged regarding the party's strategy behind abandoning its 60-year-long association with the DMK.