சென்னை: திடீரென்று எல் முருகன் தனது ராஜ்யசபா எம்பி பதவியையும், மத்திய இணையமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதன் பின்னணி பற்றி பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. எல் முருகன் மீண்டும் தமிழக பாஜக தலைவராக உள்ளதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் சொன்ன முக்கிய விஷயம் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல் முருகன். மத்திய பிரதேசத்தில் இருந்து 2024ம் ஆண்டில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இவர் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். நேற்று முன்தினம் திடீரென்று எல் முருகன் தனது ராஜ்யசபா எம்பி பதவி மற்றும் மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ''2029 நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த விரும்புகிறேன். இதனால் இந்த பதவிகளை ராஜினாமா செய்கிறேன்'' என்று விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் தான் எல் முருகனின் திடீர் ராஜினாமா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. எல் முருகன் எதற்காக எம்பி பதவியுடன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற கேள்விகள் தமிழகத்தில் எழும்பி உள்ள அதே நேரத்தில் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதா? அதற்கு முன்னோட்டமாக எல் முருகன் ராஜினாமா செய்தாரா? என பிற மாநில மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபற்றி தமிழக பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ''அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு அந்த பதவியை பிடிக்க எல் முருகன் முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை. மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. தற்போது நயினார் நாகேந்திரன் தற்போது பாஜக மாநில தலைவராக இருக்கிறார். இதனால் எல் முருகனுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். இன்னும் சொல்லபோனால் வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் உள்ளது. எல் முருகன் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த சமுதாயத்தை சேர்ந்த எம் வெங்கடேசன் தற்போது பாஜகவின் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அதே சமுதாயத்தை சேர்ந்த எல் முருகனுக்கு மாநில தலைவர் பதவிக்கு வாய்ப்பு இல்லை. சில தலைவர்கள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே மாநில தலைவர போன்ற கட்சியின் அமைப்பு பொறுப்புகளையும் வகித்து உள்ளனர். ஆனால் அது எல் முருகனுக்கு சாத்தியமில்லை. இதற்கு முக்கிய காரணம் எல் முருகன் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். பாஜகவில் ராஜ்யசபா எம்பி பதவி, மத்திய அமைச்சர் பதவி வழங்கினாலும் கூட தமிழகத்தில் பாஜக வளரவில்லை. 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரியில் திமுகவின் ஆ ராசாவிடமும், 2026 சட்டசபை தேர்தலில் அவினாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கமலியிடமும் தோல்வியடைந்தார். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு எல் முருகனால் அவரது வெற்றியை கூட றுதி செய்ய முடியவில்லையே என பாஜக மேலிடம் கவலைப்பட்டது. அதோடு சமீபத்திய சட்டசபை தேர்தலில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4ல் இருந்து ஒன்றாக சரிந்துள்ளது. இதனால் அவர் ஆளுநர் பதவியை விரும்பினார். ஆனால் அந்த பதவி கிடைக்கவில்லை. கடந்த 12ம் தேதி கூட தமிழகம், கர்நாடகா உள்பட சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் எல் முருகன் பெயர் இடம்பெறவில்லை. அதோடு விரைவில் மத்திய அமைச்சரவையை மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது எல் முருகன் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் கசிந்தது. எனவே மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதை விட நாமாகவே முன்கூட்டி ராஜினாமா செய்து விடுவோம் என்று எல் முருகன் தனது மத்திய அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜிானமா செய்து இருக்கலாம்'' என்று கூறியுள்ளனர்.