சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் பிரியாணி அண்டாவில் வைத்து மனித உடலை சமைக்கப்பட்டிருந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணிக் லஷ்கரும் பகபதி மாஜியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொடூர கொலையை அவர்கள் ஏன் நிகழ்த்தினார்கள் என்பதை காணலாம்.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் இருந்தது. அதில் ஒரு சடலத்தின் உடல் பாகங்கள் இருந்தது உத்தரப்பிரதேச போலீஸார் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து இந்த உடல் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. பின்னர் தமிழ்நாடு போலீஸ் உதவியுடன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்தனர். அப்போது ஒரு கண்ணாடி அணிந்த பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஆணும் அந்த பெட்டியை ஆக்ரா ரயிலில் வைத்துவிட்டு மின்சார ரயிலில் கூடுவாஞ்சேரி தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியான நிலையில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பெண் ஒருவர், கண்ணாடி அணிந்த பெண்ணை தான் பார்த்திருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டையும் அடையாளம் காட்டினார். அந்த வீட்டிற்கு சென்ற போலீஸார் வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பிரியாணி டபராவில் மைதா மாவு போட்டு ஒட்டப்பட்டிருந்ததை திறந்தனர். அதில் காய்கறிகள், அரிசி, சில மசாலாக்களை போட்டு மனித உடல்பாகங்கள் பிரியாணி போல் சமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த டபராவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த நபர் மாணிக் லஸ்கர் என்பதும் அந்த பெண் பகபதி மாஜி என்பதும் தெரியவந்தது. இதில் மாணிக் அஸ்ஸாம் மாநிலத்தவர், பகபதி ஒடிஸா மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும் கணவன் மனைவி என தெரியவந்தது. இவர்களுடன் ஹயதுல் நிஷா என்ற 38 வயது பெண் தங்கியிருந்தாராம். அவரை காணவில்லை என அவரது மகன் புகார் கொடுத்துள்ளாராம். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நிஷாவை கொன்றது தெரியவந்தது. போலீஸார் தனிப்படை அமைத்து தம்பதியை தேடி வந்தனர். 15 நாட்களுக்கு மேல் அவர்களை தேடி வந்த நிலையில் இன்று இருவரும் மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை குறித்து மாணிக்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மாணிக் பணியாற்றிய நிறுவனத்தில் ஹைதுல் நிஷாவும் பணியாற்றியிருந்தாராம். அப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதை அடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இந்த விவகாரம் பகபதிக்கு தெரிந்ததால் மாணிக்குடன் சண்டையில் ஈடுபட்டாராம். இதையடுத்து ஹைதுல் நிஷா, தன்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்தாராம். இதனால் நிஷாவை கொன்றுவிட்டு மனைவி பகபதியுடன் தப்பிச் செல்ல மாணிக் திட்டமிட்டிருந்தாராம். அதன்படி நிஷாவை கொன்று உடல் பாகங்களை சூட்கேஸில் வைத்து ரயிலில் ஏற்றிவிட்டு தலையை எங்கேயோ வீசிவிட்டனராம். இதையடுத்து மீதியிருந்த உடல் பாகத்தை சமைத்து பிரியாணி அண்டாவில் வேக வைத்தனராம். அதை நாய்க்கு போட வைத்திருந்தனரா என தெரியவில்லை. இந்த நிலையில் பிரியாணி அண்டாவில் போட்டதை அப்புறப்படுத்துவதற்குள் இந்த கொலை விவகாரம் போலீஸுக்கு தெரியவந்ததை அடுத்து இருவரும் மணிப்பூருக்கு தப்பிவிட்டனர். இந்த நிலையில் அவர்களின் நடமாட்டத்தை அறிந்த போலீஸார் கைது செய்தனர்.