ஏன்டா வந்தோம்னு இருக்கு.. தவெகவுக்குள் வெக்ஸ் ஆன அதிமுக வி.ஐ.பி.க்கள்! புதுப் புயலை வீசிய உளவுத்துறை


  • சென்னை: தவெகவில் சீனியர் - ஜூனியர் மோதல் நீடித்துவரும் நிலையில், அதிமுகவிலிருந்து வந்து இணைந்த வி.ஐ.பி.க்கள் தங்களுக்கு உடனடியாகக் கட்சி மற்றும் வாரியப் பொறுப்புகள் வழங்கக்கோரி தலைமைக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. மாற்றுக்கட்சி வி.ஐ.பி.க்கள் புலம்பத் தொடங்கியிருப்பது கட்சிக்குள் அடுத்த புயலைக் கிளப்பியுள்ளதாம். இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது..!!

    Advertisement

    தவெகவில் புது சிக்கல் ஒன்று சமீப நாட்களாகவே முளைத்துள்ளது.. தவெகவில் ஆரம்பம் முதலே உழைத்த விஜய் மக்கள் இயக்க சீனியர்களுக்கு 60 சதவீதப் பதவிகள் மட்டுமே கிடைத்த நிலையில், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் போன்ற வெளியில் இருந்து வந்தவர்களுக்கு உயர் பதவிகளும், சட்டசபைத் தேர்தலில் சம்பந்தமே இல்லாத 106 பேருக்கு சீட்களும் வழங்கப்பட்டது சீனியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம்.

    Advertisement

    சீனியர் - ஜூனியர் பிரச்சனை

    தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்த பிறகும் தஞ்சாவூர் சரவணன், மதுரை கல்லாணை உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தராமல், கீர்த்தனா, குமார் உள்ளிட்ட புதியவர்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் தங்களின் குமுறல்களைக் கொட்டியிருக்கிறார்கள்.

    அதேசமயம் பென்னாகரம் கஜேந்திரன், ஊத்தங்கரை இளையராஜா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கேட்டுப் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், சிட்டிங் அமைச்சர்களான ராஜிவ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவியைக் கேட்டுத் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.

    Advertisement

    தவெகவில் உட்கட்சி பூசல்

    இதனிடையே, வெளியில் இருந்து வந்தவர்களுக்காகக் கட்சியின் மாவட்டங்களை உடைத்து, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என நியமிக்கத் தலைமை திட்டமிடுவதால் கொதிப்படைந்த சீனியர்கள், "எங்கள் பதவியைப் பிடுங்கப் பார்க்கிறீர்களா, வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்திலாவது எங்களுக்குப் பதவி கிடைக்குமா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகிறார்களாம்..

    இவர்களுக்கு ஆதரவாக மக்கள் இயக்க நிர்வாகிகளும் களம் இறங்கியுள்ளதால், யாரை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தங்களின் பதவி எப்போது பறிபோகுமோ என்ற பயத்தில் சிட்டிங் அமைச்சர்களும் தவித்து வருவதாக தெரிகிறது.

    Advertisement

    விஐபிகள் - அதிருப்திப் புயல்

    இப்படியொரு உட்கட்சி பூசல் பூதாகரமாக கிளம்பி வரும் நிலையில், நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று இப்போது கிடைத்துள்ளது... ஆம், எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவது போல, அதிமுகவில் இருந்து ஓடி வந்து தவெகவில் ஐக்கியமான வி.ஐ.பி.க்கள் மூலமாக அடுத்த அதிருப்திப் புயல் கட்சிக்குள் வெடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.

    "கட்சியில எங்களுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப் போறீங்க? எந்தப் பதவியும் பொறுப்பும் இல்லாம நாங்க எப்படி அரசியல் பண்ண முடியும்? அதனால சீக்கிரமா எங்களுக்குப் பொறுப்புகளை அறிவிங்க" என்று வந்த வேகத்திலேயே துண்டைப் போட்டு உட்காரப் பார்க்கிறார்கள் இந்த மாற்றுக்கட்சி வி.ஐ.பி.க்கள்.

    Advertisement

    புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜூனா

    வந்தவர்கள் சும்மா இருக்காமல், கட்சியின் முக்கியப் புள்ளிகளான அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைத் தொடர்ந்து நச்சரித்து வருவதால் தலைமைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையாம்.

    இவர்களின் தொடர் அழுத்தத்திற்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் அமைச்சர்கள், நிலைமையைச் சமாளிக்க உளவுத்துறை ரிப்போர்ட்டை கையில் எடுத்திருக்கிறார்களாம்.

    "மாற்று கட்சியிலிருந்து வந்தவங்களுக்கு உடனே பதவிகளைக் கொடுத்தா, ஆரம்பத்துல இருந்து கட்சிக்காக உழைச்ச சீனியர்கள் பயங்கரமா அப்செட் ஆயிடுவாங்கன்னு உளவுத்துறை நமக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. அதனால இப்போதைக்கு அவங்களுக்குப் பொறுப்பு வழங்குறதை தள்ளி வையுங்கள் என்று முதல்வரும் கட்டளையிட்டுள்ளார். அதனால் கொஞ்சம் பொறுமையா இருங்க, சரியான நேரம் வரும்போது உங்களுக்கான அங்கீகாரம் கண்டிப்பா கிடைக்கும்" என்று சீனியர்களை காட்டி அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயன்று வருகிறார்களாம்.

    Advertisement

    வெக்ஸ ஆன அதிமுக புள்ளிகள்

    ஆனால், அமைச்சர்களின் இந்த மழுப்பலான பதில்களால் அதிமுகவிலிருந்து வந்த வி.ஐ.பி.க்கள் மொத்தமாக வெக்ஸ் ஆகிப்போயிருக்கிறார்கள். கட்சிப் பதவிதான் தள்ளிப்போகிறது என்றால், சரி அரசாங்க வாரிய பதவிகளையாவது கொடுங்கள் என்று அடுத்த கோரிக்கையை தூக்கிக் கொண்டு நிற்கிறார்கள். இதற்கும் அமைச்சர்களால் எந்த ஒரு உறுதியான உத்தரவாதத்தையும் கொடுக்க முடியவில்லை என்பதுதான் இப்போதுள்ள சிக்கலாகும்.

    ஒரு பக்கம் கட்சிப் பதவியும் இல்லை, மறுபக்கம் வாரியப் பதவிக்கும் வழியில்லை என்ற நிலை நீடிப்பதால், "அவசரப்பட்டு எந்த ஒரு முன்கூட்டிய உத்தரவாதமும் வாங்காமல் தவெகவிற்குள் வந்தது இவ்வளவு பெரிய தப்பாகிப் போச்சே!" என்று அந்த வி.ஐ.பி.க்கள் இப்போது தங்களுக்குள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்களாம். இந்த உள்கட்சிப் பூசல்தான், தவெக தலைமைக்கு அடுத்த தலைவலியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது..!!

    English Summary

    Why Did We Even Join?” AIADMK Heavyweights Frustrated Inside TVK as Intelligence Report Sparks Fresh Buzz