சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை

  • சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது.இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது. மின்சாரம் பற்றாக்குறை இல்லை என்றால், அப்புறம் ஏன் மின்சாரம் தடைபடுகிறது என்றால், ஏசி தான் காரணம். எல்லாரும் ஒரே நேரத்திம் ஏசி போடுகிறது. அந்த மின் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு மின்மாற்றிகள் இருப்பது இல்லை.. அதனால் பழுதடைந்துவிடுகின்றன. மின் கேபிள்களுமே இதே காரணத்தால் தான் பழுதாகின்றன.

    Advertisement

    பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயிலில் ஓடி ஓடி உழைத்துவிட்டு, "அப்பாடா... இனிமேலாவது நிம்மதியாகத் தூங்கலாம்" என்று படுக்கையில் சாய்ந்தால், அடுத்த பத்தாவது நிமிடம் "டக்" என்று மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் முன்னால் கண்கள் வலிக்க வேலை செய்த ஐடி இளைஞன், பகல் முழுக்க சமையலறையில் வெந்து தணிந்த தாய், நாளைக்கு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் ஒரு மாணவன்... என எல்லாரும் கையில் ஒரு விசிறியோடு தெருவுக்கு வருகிறார்கள். இது ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் கதையல்ல; இன்று ஒட்டுமொத்த சென்னையின் அவலக்குரலாக மாறியிருக்கிறது.

    Advertisement

    சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ராயபுரம், பெரம்பூர், அம்பத்தூர், மேடவாக்கம் என நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் நள்ளிரவில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) வெடித்துச் சிதறும் சத்தமும், மக்களின் குமுறல் சத்தமும்தான் கேட்கிறது. ஏன் இந்த அவலம்? இரவு நேரங்களில் மட்டும் ஏன் மின்மாற்றிகள் பழுதாகின்றன? இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஏன் இந்த இரவு நேரக் கொடுமை?

    இதற்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது தாங்க முடியாத 'ஏசி' லோடு. பகலில் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள், இரவில்தான் வீட்டின் ஏசிகளை ஆன் செய்கிறார்கள். ஒரு தெருவில் இருக்கும் 50 வீடுகளில் 40 வீடுகளில் ஒரே நேரத்தில் ஏசி ஓடும்போது, அந்தப் பகுதி மின்மாற்றியின் மீதான மின்பளு அதன் எல்லையைத் தாண்டுகிறது.

    Advertisement

    மற்றொரு தொழில்நுட்பக் காரணம், மின்மாற்றிகள் குளிர்ச்சியடையாதது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மின்மாற்றிகள் ஏற்கனவே சூடாக இருக்கும். இரவு நேரத்திலாவது அவை குளிர்ந்த நிலைக்கு வர வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரவில்தான் லோடு அதிகமாக இருப்பதால், அவை தங்களைத் தாங்களே குளிர்வித்துக்கொள்ள முடியாமல், உஷ்ணம் தாங்காமல் வெடித்துவிடுகின்றன. இதற்குப் பின்னால் முறையான பராமரிப்பு இல்லாததும் ஒரு கசப்பான உண்மை. பல இடங்களில் காலாவதியான, பழைய மின்மாற்றிகளே இன்னும் பயன்பாட்டில் உள்ளன. போதிய ஆயில் டாப்-அப் (Oil Top-up) செய்யப்படாததும் இந்த வெடிப்புக்கு முக்கியக் காரணமாகிறது.

    Advertisement

    மக்களின் கண்ணீர் கதைகள்

    நள்ளிரவு 2 மணிக்கு மின்மாற்றி பழுதானால், மின்வாரிய ஊழியர்கள் வந்து அதைச் சரிசெய்ய அதிகாலை ஆகிவிடுகிறது. "கொசுக்கடி ஒருபக்கம், வியர்வை மறுபக்கம்... தூக்கமில்லாமல் தவிக்கும் என் இரண்டு வயதுக் குழந்தையைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை" என்று கண்ணீரோடு பேசுகிறார் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஒரு தாய்.

    வயதானவர்கள் மற்றும் நோயாளிகளின் நிலை இன்னும் மோசம். மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இந்த உஷ்ணத்தில் தவிக்கிறார்கள். தூக்கமில்லாத இரவுகள் அடுத்த நாள் மனிதர்களின் உழைப்பையும், மனநலனையும் நேரடியாகப் பாதிக்கிறது. ஒரு நாள் மின்சாரம் இல்லை என்றால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்துப் போகிறது.

    Advertisement

    தீர்வுதான் என்ன

    இதற்குத் தற்காலிக ஒட்டுவேலைகள் இனி சரிப்பட்டு வராது. மின்வாரியம் போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். மக்கள் தொகை மற்றும் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள சென்னை முழுவதும் உடனடியாகக் கூடுதல் மின்மாற்றிகளை நிறுவ வேண்டும். லோடைப் பிரித்து வழங்க வேண்டும். கோடைகாலம் தொடங்கும் முன்பே அனைத்து மின்மாற்றிகளிலும் ஆயில் அளவு, கேபிள்களின் தரம் ஆகியவற்றைச் சரிபார்த்து 'ப்ரிவென்டிவ் மெயின்டனன்ஸ்' செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடந்ததாக தெரியவில்லை.. ஏனெனில் அப்படி நடந்திருந்தால், அடிக்கடி இப்படி மின்மாற்றிகள் மற்றும் மின்சார லைன்களில் பழுது ஏற்பட்டிருக்காது..

    Advertisement

    அதேபோல், மக்களும் தங்கள் வீட்டின் மின் தேவையை மின்வாரியத்திடம் முறையாகத் தெரிவித்து உயர்த்த வேண்டும். அப்போதுதான் அந்தத் தெருவுக்கு எவ்வளவு பெரிய மின்மாற்றி தேவை என்பதை அதிகாரிகளால் சரியாகக் கணிக்க முடியும். மின்சாரம் என்பது இன்று ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை. வியர்வையில் நனையும் சென்னை மக்களின் தூக்கத்திற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? மின்வாரியம் வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடாமல், துரிதமாகச் செயல்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Why do frequent power outages occur in Chennai at night? A truth the public needs to know—known only to officials.