சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த சத்துணவுத் திட்டம் பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஆனால், சமீபத்தில் பல மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் திடீரென முட்டை வழங்கப்படவில்லை என்ற செய்தி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது இல்லை என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தில் இவ்வளவு பெரிய அலட்சியம் எப்படி ஏற்பட்டது? முட்டை வராததற்கு யார் காரணம்?
வெள்ளிக்கிழமை அன்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், உணவோடு தரப்பட வேண்டிய முட்டை மாணவர்களின் தட்டுகளுக்கு வரவில்லை. முட்டை கிடைக்காத மாவட்டங்கள்: திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் முட்டை இல்லாமல் வெறும் மதிய உணவு மட்டுமே வழங்கப்பட்டது. முட்டை கிடைத்த மாவட்டங்கள்: அதே நேரத்தில் திருப்பூர், மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழக்கம் போல் முட்டைகள் விநியோகிக்கப்பட்டு, மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. ஒரே மாநிலம், ஒரே திட்டம் என்ற நிலையில், சில மாவட்ட மாணவர்களுக்கு முட்டை கிடைத்து, பல மாவட்ட மாணவர்களுக்கு முட்டை கிடைக்காமல் போனது ஏன் என்ற நியாயமான கேள்வி உடனடியாக எழுந்தது. இந்தக் குளறுபடிக்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது, அரசு அதிகாரிகளுக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே காரணம் என தெரியவந்துள்ளது. பள்ளிகளில் வியாழக்கிழமையுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. வழக்கமாகத் தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்படும். ஆனால், அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் என்றும், மாணவர்களுக்குச் சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்தத் தகவல் சத்துணவு அமைப்பாளர்களுக்கும், முட்டை சப்ளை செய்யும் விநியோகஸ்தர்களுக்கும் சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை. வெள்ளிக்கிழமை பள்ளிகள் இயங்குமா, இயங்காதா என்ற குழப்பம் நீடித்ததால், முட்டைக்கான தேவையை (Indent) சில மாவட்ட அதிகாரிகள் முட்டை சப்ளையர்களுக்கு முறையாக அனுப்பத் தவறிவிட்டனர். இதுகுறித்து சத்துணவுப் பணியாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "வியாழக்கிழமையே காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) பள்ளிகள் இயங்கும் என்ற தகவல் எங்களுக்கு மிகவும் தாமதமாகவே வந்தது. பள்ளிக் குழந்தைகளுக்கு சமைக்க வேண்டிய முட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் செய்து வைக்க வேண்டும். கடைசி நேரத்தில் தகவல் வந்ததால், சில மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட பள்ளிகளிலும் உள்ளூர் அளவில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு முட்டை வழங்கப்பட்டது. ஆனால், மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்ததால், பெரும்பாலான பள்ளிகளில் முட்டையை வாங்க முடியாமல் போய்விட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளிகளில் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வேலை நாட்களிலும் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருக்க, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான மசாலா மற்றும் சுவைகளில் முட்டை சமைத்துத் தர அரசு அட்டவணை அமைத்துள்ளது. இத்தகைய சூழலில் முட்டை விநியோகம் தடைபட்டது குறித்து ஆசிரியர் ஒருவர் பேசுகையில்: "கல்வித்துறை மற்றும் சத்துணவுத்துறை ஆகிய இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட தகவல் குழப்பத்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் கடந்த 15 ஆண்டுகளாகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். என் பணிக்காலத்தில் மதிய உணவில் முட்டை இல்லாமல் போனதை இப்போதுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். மாணவர்களின் அடிப்படை ஊட்டச்சத்து விஷயத்தில் இப்படி ஒரு தவறு நடந்திருக்கக் கூடாது," என்றார். இந்த அலட்சியம் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு அதிகாரப்பூர்வ மனு ஒன்றை அனுப்பியுள்து . அதில் அவர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள்: சத்துணவுத் திட்டம் என்பது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை எளிய மாணவர்களுக்கும் சமமாகச் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். ஆனால், சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு முட்டை வழங்கிவிட்டு, மற்ற மாவட்டங்களில் முட்டை வழங்காமல் விட்டது பெரும் தவறு. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் எந்தக் காரணத்திற்காகவும் மதிய உணவு திட்டத்தில் முட்டை விநியோகம் தடைபடாமல் சீராகக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் தட்டுகளுக்குச் சேர வேண்டிய லட்சக்கணக்கான முட்டைகள் ஒரே நாளில் மாயமானது வெறும் நிர்வாகக் குளறுபடி தானா அல்லது இதன் பின்னணியில் மிகப்பெரிய முறைகேடு ஏதேனும் மறைந்துள்ளதா என்ற பலத்த சந்தேகமும் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒப்பந்ததாரர்களிடமிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளைத் திட்டமிட்டுத் திசை திருப்பி, அவற்றை வெளிச்சந்தையில் மொத்தமாக விற்றுப் பண மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழை, எளிய மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டத்தில் முறைகேடு செய்து காசு பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதால், விநியோகக் கணக்குகளை முழுமையாகத் தணிக்கை செய்து, முட்டை பதுக்கப்பட்டு விற்கப்பட்டதா என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு வரும் லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இந்த மதிய உணவுதான் மிக முக்கியமான சத்தான உணவு ஆகும். சாதாரண தகவல் தொடர்பு இடைவெளியால் முட்டை விநியோகம் பாதிக்கப்படுவது நல்லதல்ல. துறை அதிகாரிகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு சத்துணவு அமைப்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தமிழக அரசு உறுதியாகக் கண்காணிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.எந்தெந்த மாவட்டங்களில் முட்டை கிடைக்கவில்லை?
முட்டை கிடைக்காமல் போனதன் பின்னணி என்ன?
சத்துணவு ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்?
15 ஆண்டுகளில் முதல்முறை: ஆசிரியர்கள் வேதனை
உரிய விசாரணை நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை
மிகப்பெரிய முட்டை ஊழல்
உடனடி கவனிப்பு தேவை