இடைத்தேர்தல் முடிஞ்சதும்.. அமைச்சரவை மாற்றம்! தவெக ஜூனியர்களை தூக்க போகும் மாஜி அதிமுக தலைகள்

  • சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது 'இடைத்தேர்தல்' மோடிற்குள் நகர்ந்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிந்ததும் தமிழக அமைச்சரவை பெரிய அளவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிமுகவில் இருந்து கட்சி மாறி தவெக வந்த தலைகளுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதிமுகவில் இருந்து வரிசையாக மூத்த தலைவர்கள் பலர் தவெக தாவுவது அதிகரித்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே.

    Advertisement

    இதில் குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் வருகை, தற்போதைய தவெக அமைச்சரவைக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் தற்போதைய கோட்டை வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

    சும்மா வருவார்களா சீனியர்கள்?

    எம்எல்ஏ பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் அரசியல் எதிர்காலத்தையே பந்தயமாக வைத்து தவெகவிற்குள் வந்திருக்கும் இந்த அதிமுக மாஜிக்கள், வெறும் சாதாரண எம்எல்ஏக்களாக பின்வரிசையில் அமர நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டார்கள்.

    முக்கியமாக இவர்கள் பல காலம் அமைச்சர்களாக இருந்தவர்கள். பல ஆண்டுகள் அதிகார பலம், அசைக்க முடியாத மாவட்ட செல்வாக்கு, மற்றும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைகளில் முக்கிய இலாக்காக்களை கையாண்ட நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் இவர்கள்.

    Advertisement

    அமைச்சர் பதவி வேண்டும்

    விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் இவர்கள் மீண்டும் களம் கண்டு வெற்றி பெற்றால், இவர்களுக்கு உடனடியாக அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இந்த ஆபரேஷன் நடந்ததாக அரசியல் விவாதங்கள் அனல் பறக்கின்றன.

    விஜய் முதன்முதலில் அமைச்சரவையை அமைத்தபோது, இள ரத்தம் மற்றும் புது முகங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கினார். தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பல அமைச்சர்கள், சட்டமன்ற நடைமுறைகளுக்கே புதியவர்கள். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், செங்கோட்டையன் போன்ற ஓரிரு சீனியர்களைத் தவிர, பெரும்பாலான இலாக்காக்கள் அனுபவமற்ற கைகளிலேயே சிக்கியுள்ளன. அதிலும் சரத், கீர்த்தனா போன்றவர்கள் கடுமையான சர்ச்சைகளில் தினம் தினம் சிக்கி வருகிறார்கள்.

    Advertisement

    தற்போது அதிமுகவிலிருந்து வந்துள்ள சி. விஜயபாஸ்கர் போன்ற பழுத்த அரசியல்வாதிகள் இடைத்தேர்தலில் வென்று உள்ளே வரும்போது, இலாக்காக்கள் மாற்றம் செய்யப்படுவது நூறு சதவீதம் உறுதி. நிர்வாகத்தை சீர்படுத்தவும், திமுக போன்ற பலமான எதிர்க்கட்சிகளின் அட்டாக்குகளை சட்டமன்றத்தில் எதிர்கொள்ளவும் விஜய்க்கு அனுபவம் வாய்ந்த கைகள் தேவைப்படுகின்றன.

    இதனால், தற்போது சிறப்பாகச் செயல்படாத அல்லது அனுபவமின்றி திணறி வரும் சில 'ஜூனியர்' அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் அல்லது அவர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம். தற்போது அமைச்சரவை கோட்டா நிறைவு பெற்றுள்ளதால்.. இப்போது உள்ள சிலரை பதவிகள் கண்டிப்பாக பறிக்கப்படும்.

    விஜய்யின் கணக்கு என்ன?

    முதலமைச்சர் விஜயைப் பொறுத்தவரை, இது வெறும் அரசியல் சேர்க்கை மட்டுமல்ல; அவரது அரசாங்கத்தின் நிர்வாகத்தை வலிமை செய்வதற்கான ஒரு நிர்வாகத் தேவை.

    நிர்வாக அனுபவம் இல்லாத அமைச்சர்களால் அரசு இயந்திரம் வேகம் குறைந்துவிடக் கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார். விஜயபாஸ்கர் போன்றவர்கள் மருத்துவம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளை விரல் நுனியில் வைத்திருந்தவர்கள். இவர்களைப் போன்ற ஹெவிவெயிட் தலைவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது, அரசாங்கத்தின் இமேஜை மக்களிடம் உயர்த்தும்.. என்று விஜய் பர்சனலாக நினைக்கிறாராம்.

    English Summary

    Why ex AIADMK Heavyweights will get cabinet posts and TVK leaders may lose their posts?