ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்

  • சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.7 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.. இந்தத் தொடர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை கேள்விக்குள்ளாக்கி மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார். லாபத்தை நிறுவனங்கள் வைத்துக்கொண்டு நஷ்டத்தை மட்டும் மக்களிடம் பகிர்வது ஏன் என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி, அரசியல் களத்தில் பெரும் விவாதமாகியுள்ளது..

    Advertisement

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி விலை உயர்வால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    Advertisement

    பெட்ரோல் விலை உயர்வு

    முக்கியமாக சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.20-ம், டீசல் விலை ரூ.7.38-ம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சூழலில், பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மாணிக்கம் தாகூர் கேள்வி

    இந்த விலை உயர்வு குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்திய அரசையும் எண்ணெய் நிறுவனங்களையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

    லாபத்தை மட்டும் தங்களுக்குள் வைத்துக்கொண்டு, நஷ்டத்தை மட்டுமே பொதுமக்களின் தலையில் சுமத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியுள்ள நிலையில், அந்தப் பணம் எங்கே போனது என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

    நஷ்டத்தை மட்டும் சொல்லுவீங்களா

    இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. நஷ்டத்தை மட்டும் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடி பெருநிறுவனங்களுக்காக வேலை பார்க்கிறார். கடந்த 7 காலாண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடைந்தன.... நிதியாண்டு 2024-ல் மட்டும் ரூ.81,000 கோடி லாபத்தை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றன. லாபத்தை பகிராதவர்கள், நஷ்டத்தை மட்டும் மக்களுடன் பகிர்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயல்பாடு குறித்து மாணிக்கம் தாகூர் எழுப்பியுள்ள கடுமையான கேள்விகள் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள், போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

    மத்திய அரசு நடவடிக்கை என்ன?

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அதைச் சாக்காகக் காட்டி விலையைத் தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசு, அதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் பயனைப் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்குவதில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

    Advertisement

    இத்தகைய சூழலில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது மட்டுமே நீண்டகாலத் தீர்வாக அமையும்.. காரணம், இது மாநிலங்களுக்கிடையேயான விலை வேறுபாட்டைக் குறைப்பதோடு மத்திய, மாநில வரிகளை ஒருங்கிணைத்து விலையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

    அதுமட்டுமல்ல எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை முறைப்படுத்துவது மற்றும் மக்களின் சுமையைக் குறைக்க கலால் வரியைக் கணிசமாகக் குறைப்பது போன்ற அவசர நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்... அதனால் அரசு இதில் தலையிட்டு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Why has Petrol Price Risen by ₹7 in Just 10 days? Manickam Tagore Questions Centre Over Public Losses