அர்ச்சனா கல்பாத்திக்கு அறங்காவலர் குழுவில் என்ன வேலை? பழைய ஃபார்முலாவை தூசு தட்டுகிறாரா விஜய்?

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றங்கள் நடக்கும்போதெல்லாம், அரசு பொறுப்புகளிலும் பல்வேறு வாரியங்களிலும் புதிய நியமனங்கள் இடம்பெறுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இப்போதுள்ள தவெக அரசு அமைத்துள்ள மாநில அளவிலான அறங்காவலர் தேர்வுக்குழுவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி போன்ற பிற முக்கிய நிர்வாக நியமனங்களும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளன.. அதாவது இந்த நியமனங்கள் அதிகார துஷ்பிரயோகமாக கருதப்படுகிறதா? அல்லது ஆட்சித் தந்திரமா? என்ற கேள்வி அரசியல் களத்தை துளைத்தெடுத்து கொண்டிருக்கிறது.. அதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்...!!

    Advertisement

    10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கொண்ட திருக்கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்களை தேர்வு செய்ய மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை விஜய் அரசு அமைத்துள்ளது.

    Advertisement

    இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் இராமநாதன், ஆன்மீக சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ, பாடகர் வேல்முருகன் ஆகியோருடன் பிகில், கோட் படங்களின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் அர்ச்சனா கல்பாத்திக்கு போஸ்டிங் தரப்பட்டுள்ளது, மிகப்பெரிய சலசலப்பை உண்டு பண்ணி வருகிறது.. சினிமா புரொடியூசரான அர்ச்சனா கல்பாத்திக்கு கோவில் அறங்காவலர் தேர்வு குழுவில் என்ன வேலை? என்ற கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளது..

    அமைச்சர் ரமேஷ் விளக்கம்

    இதற்கு அமைச்சர் ரமேஷ், "அர்ச்சனா கல்பாத்தியை வெறும் சினிமா தயாரிப்பாளராக பார்க்கக் கூடாது; அவர் தனது சொந்த நிதியில் பல்வேறு கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்து ஆன்மீக ரீதியாகப் பங்காற்றியுள்ளார்" என்று விளக்கமும் தந்துள்ளார்.

    Advertisement

    இருந்தாலும், முதல்வர் விஜய்யின் படங்களில் பணியாற்றிய "ஜனநாயகன்" தயாரிப்பாளர் வெங்கட நாராயணா டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், லியோ பட இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி தனி செயலாளராகவும், பீஸ்ட் பட கேமராமேன் மனோஜ் பரமஹம்சா திரைப்படப் பயிற்சி நிறுவன தலைவராகவும் நியமிக்கப்பட்டிருப்பது அதற்குமேல் விமர்சனங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

    திரிஷா தலையீடு?

    நேற்றைய தினம் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "அறங்காவலர் குழுவில், விஜய்யின் சினிமா தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இடம் பெற்றுள்ளனர்.. இந்த நியமனத்தில் திரிஷாவின் பரிந்துரைகளே முக்கிய பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன" என்று குற்றம் சாட்டியிருப்பதையும் நாம் எளிதில் கடந்து செல்ல முடியாது. அர்ச்சனா கல்பாத்தி, திரிஷாவின் கல்லூரி காலம் தொட்டே பழக்கம் கொண்டவர் என்பதும் விமர்சனங்களை வலுப்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக அரசின் இத்தகைய நியமனங்கள் என்பது "வெறும் சினிமா தொடர்பு" என்ற கோணத்தில் மட்டுமே பார்க்க முடியுமா? சில பிளஸ் பாயிண்ட்களும் இதில் இருக்கத்தான் செய்கின்றன.

    முதலாவதாக..

    நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களை துல்லியமாக திட்டமிட்டு எடுக்கும் மேலாண்மைத் திறன் இவர்களுக்கு இருக்கிறது. அதே திறமையை பயன்படுத்தி, அரசுத் திட்டங்களையும் விரைவாகவும் திறமையாகவும் செயல்படுத்த முடியும் என்று ஆதரிப்பவர்கள் நம்புகிறார்கள்.

    இரண்டாவதாக..

    எப்போதுமே ஒரு புதிய ஆட்சி அமையும்போது, பழைய அதிகாரிகளின் முட்டுக்கட்டைகளை உடைத்து தள்ள வேண்டிய அவசியம் அரசுக்கு உருவாகிறது... அப்போதுதான் தனது கனவு திட்டங்களை எந்த தாமதமும் இல்லாமல் ஸ்பீடு காட்ட முடியும் என்பதால், முதலமைச்சருக்கு விசுவாசமான ஒரு நம்பிக்கை வட்டம் தேவைப்படுகிறது.

    Advertisement

    மூன்றாவதாக..

    அர்ச்சனா கல்பாத்தியை பொறுத்தவரை, அவரை உண்மையிலேயே வெறும் புரோடியூசராக மட்டுமே இங்கு சுருக்கி பார்த்துவிட முடியாது. சினிமா பிம்பத்தை தாண்டி, தன்னுடைய சொந்த பணத்தில் நிறைய கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார்.. ஆன்மீக ரீதியாக ஏராளமான பங்களிப்பை தந்துள்ளார்.. இதெல்லாம் இந்த பதவிக்கான தகுதியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவர் மட்டும்தான், கோவில்களுக்கு பெரிய அளவில் நன்கொடு வழங்கியவரா, வேறு யாரும் வழங்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

    இருந்தாலும், ஒரு கமர்ஷியல் படங்களை தயாரிப்பதற்கும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.. எனவே இதுபோன்ற நியமனங்களில் மைனஸ் பாயிண்ட்களும் இல்லாமல் இல்லை..

    Advertisement

    முதலாவதாக..

    நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளுக்கும், துறை சார்ந்த வல்லுநர்களுக்கும் முன்னுரிமை அளிக்காமல், தனிப்பட்ட சினிமா தொடர்புகளின் அடிப்படையில் பெரிய போஸ்டிங்குகளை வழங்கினால், நிர்வாகத்தின் வேகம் குறையலாம்.. அதுமட்டுமல்லாமல், கடுமையாக உழைக்கும் அரசு அதிகாரிகளின் மனதையும் இது சோர்வையும், சலிப்பையும் நிச்சயம் தரும்.

    இரண்டாவதாக..

    ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சீனியாரிட்டி அதிகாரத்துவ பின்னணியோ அல்லது அரசியல் அனுபவமோ இல்லாத சினிமா பிரபலங்களிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒப்படைப்பது, அரசு நிர்வாகத்தின் நம்பகத்தன்மையும் மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி விடும்..

    மூன்றாவதாக..

    அரசு வாரியங்கள், கோவில் நிதி நிர்வாகம் போன்ற புனிதமான இடங்களை சினிமா விசுவாசத்துக்கு கொடுக்கும் கிஃப்ட்டாக மாற்றுவது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.. அதாவது "ஸ்பாயில்ஸ் சிஸ்டம்" என்ற அமெரிக்க முறையிலான அரசியல் சுயநலத்துக்கும் வழிவகுத்துவிடும் என்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது. அதனால் இப்போதே போர்க்கொடியையும் தூக்கி வருகின்றன.

    கருணாநிதி, அண்ணா, எம்ஜிஆர்

    தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் இப்படியான பெரிய போஸ்டிங்குகளை வழங்குவது தவெக ஆட்சியில் மட்டுமே நடக்கவில்லை.. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆட்சிக்காலங்களிலும் சினிமா பிரபலங்களுக்கு அரசு வாரியத் தலைவர் பதவிகள், கலைப் பண்பாட்டு நிறுவனப் பொறுப்புகள், ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன..

    இருந்தாலும், இப்போதைய அறங்காவலர் குழுவின் அதிகாரம் என்பது ரொம்பவே முக்கியமானது... பவர்ஃபுல் போஸ்டிங்.. காரணம், கோவில்களின் நிதி நிர்வாகம், உண்டியல் வசூல், ஸ்பெஷல் தரிசன அனுமதி சீட்டுகள் வழங்குதல், அர்ச்சகர்களின் வழிபாட்டு முறைகள், பூஜைகளை கண்காணிப்பது உள்ளிட்ட எல்லாவிதமான முதன்மை அதிகாரங்களும் இந்த அறங்காவலர்களுக்கே உண்டு..

    அதுமட்டுமல்ல, கோவில்களில் பூரண கும்ப மரியாதையை பெறும் இவர்கள், இறைவனின் பிரதிநிதிகளாகவும் திருக்கோவிலின் அறிவிக்கப்படாத அதிகாரிகளாகவுமே செயல்படுகிறார்கள்... அதனாலதான் வேறு எந்த ஆட்சியை விடவும், இந்த தவெக ஆட்சி நியமனத்தில் சலசலப்பு சத்தம் அதிகமாகவே கேட்கிறது.

    வரலாற்று பிழையாகிடுமோ?

    இத்தகைய நியமனங்களை ஆட்சி தந்திரம் என்று சொல்வதா? அதிகாரத் துஷ்பிரயோகம் என்று சொல்வதா? தெரியவில்லை.. ஏனென்றால் இவையெல்லாம் அந்தந்த நபர்களின் தனிப்பட்ட பின்னணி தீர்மானிக்கப்போவதில்லை... மாறாக, அவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு மக்கள் நலனுக்காக வெளிப்படைத்தன்மையுடன் எப்படியெல்லாம் பணியாற்ற போகிறார்கள் என்பதை வைத்துதான் தீர்மானிக்க முடியும்..

    ஒருவேளை, தனிப்பட்ட லாபத்திற்காகவும் அதிகார துஷ்பிரயோகத்திற்காகவும் இந்த பதவிகள் பயன்படுத்தப்பட்டால், அது நிச்சயம் ஜோசப் விஜய்யின் ஆட்சியில் ஒரு வரலாற்றுப் பிழையாகவே பதிவு செய்யப்படும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Why Is Archana Kalpathi in the Temple Trustee Panel? Is Vijay Government Reviving an Old Formula?