ஜெபமாலை.. கிறிஸ்தவ பேரணி.. FCRA எதிர்ப்பு.. தவெக அரசு மீது பாய்ந்த பாஜக.. ஆனா விஜய் வாயே திறக்கலயே?

  • சென்னை: தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யின் ஆட்சி நிர்வாகம் மீது, எதிர்க்கட்சியான பாஜக அடுத்தடுத்து புகார்களை வீசி வருகிறது.. குறிப்பாக பாஜகவின் மத ரீதியான குற்றச்சாட்டுகள், கோட்டை வட்டாரத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் அரசியல் பார்வையாளர்களையும் மூக்கின் மேல் விரலை வைக்க செய்துள்ளன..

    Advertisement

    தமிழக சட்டசபை எத்தனையோ கூட்டத்தொடர்களை சந்தித்துள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடர் பல்வேறு சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் கிளப்பி விட்டு சென்றுள்ளது.

    Advertisement

    அதில் ஒன்றுதான் FCRA.. அதாவது மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தல் திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள்

    "சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது" என்பது ஆளுங்கட்சியின் வாதமாகும். ஆனால் பாஜகவின் ஒரே உறுப்பினரான போஜராஜன், நிதி வெளிப்படைத்தன்மைக்காக கொண்டுவரப்படும் சட்டத்தை எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பும் செய்திருந்தார்.

    திமுகவின் எஸ். ஆஸ்டின், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் வரை பலரும் ஆதரவு அளித்தாலும், இதன் பின்னணியில் கிறிஸ்தவ அமைப்புகளை பாதுகாக்கும் ரகசிய திட்டம் இருப்பதாக எதிர்த்தரப்பு கொந்தளிக்கிறது.

    Advertisement

    மரிய வில்சன் ஜெபமாலை

    இப்படிப்பட்ட சூழலில்தான், எரியும் தீயில் லிட்டர் கணக்கில் பெட்ரோல் ஊற்றுவது போல அமைந்து விட்டது நிதியமைச்சர் மரிய வில்சனின் பேச்சு!

    தமிழ் மொழியையும் கிறிஸ்தவ போதனைகளையும் ஒப்பிட்டு, "தமிழ் கற்றுத்தராத அன்பு, அமைதி மற்றும் கருணையை கிறிஸ்தவம் கற்றுத் தருகிறது" என்று அவர் சொன்னது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமா? பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, கையில் ஜெபமாலையுடன் அவர் சிலுவை அடையாளம் வரைந்த விவகாரம், இந்து அமைப்புகளை பெருமளவில் கொதித்தெழ வைத்திருக்கிறது.

    சபாநாயகர் - கத்தோலிக்க பேரணி

    இன்னொருபுறம், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கத்தோலிக்க அமைப்பு நடத்திய கருவில் இருக்கும் குழந்தைகளின் உரிமைக்கான பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.. பிறக்காத குழந்தைகளின் வாழ்வுரிமை குறித்த விவாதம் ஒருபுறமிருக்க, ஒரு மாநில சபாநாயகர் குறிப்பிட்ட மத அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டது சர்ச்சையை மேலும் சூடாக்கியுள்ளது.

    Advertisement

    இவைகள் எல்லாவற்றையும் பாஜக கையில் எடுத்துள்ளது.. "தவெக என்பது இந்து எதிர்ப்பு மனநிலை கொண்ட ஒரு கிறிஸ்தவ கட்சி" என்றும், காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைக் குறிவைத்தே இயங்குகிறது என்றும் குற்றம்சாட்டுகிறது.

    இத்தனை பரபரப்புகள் சட்டசபையில் நடந்தும், இத்தனை குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வீசியும், தவெக தலைவர் விஜய் காத்து வரும் அந்த அமைதிதான், மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது!

    பாஜக குற்றச்சாட்டு

    நம்முடைய தமிழக அரசியலை பொறுத்தவரை எப்போதுமே ஒரு ஆட்சியை வழிநடத்தும்போது, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது எந்தளவுக்கு அவசியமோ, அந்தளவுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான அரசு என்ற நம்பகத் தன்மையை காப்பாற்றுவதும் ரொம்பவே முக்கியம்!

    Advertisement

    எஃப்.சி.ஆர்.ஏ சட்ட எதிர்ப்பின் பின்னணியில் அரசு தரப்பில் நியாயங்கள் இருக்கவே செய்கின்றன.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால் அதேசமயம், உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தனிப்பட்ட மத அடையாளங்களும், எல்லை மீறும் சில பேச்சுகளும் எதிர்க்கட்சிகளுக்கு, மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக மாறிவிடுகின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.

    லட்டு போல சான்ஸ்

    லட்டு போல அப்படியொரு சான்ஸை எதிர்க்கட்சிகளுக்கு, தவெக அரசு தந்து கொண்டிருப்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

    இந்த விஷயத்தை பயன்படுத்தி பாஜக மக்களை மத அடிப்படையில் பிரிக்கப் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை தவெக தலைமைக்கு நிச்சயமாக இருக்கிறது.. அரசியல் களம் கொந்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், முதலமைச்சரின் மவுனம் மட்டுமே தீர்வாகிவிட முடியாது..

    Advertisement

    வரவிருக்கும் நாட்களில், இந்த விவகாரத்தை விஜய் அரசு எந்த அரசியல் முதிர்ச்சியோடு அணுகப் போகிறது? விஜய்யின் மவுனம் எதற்காக? இந்த விமர்சனங்களை தவெக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

    English Summary

    Why is BJP Attacking the TVK Government & Will CM Vijay Break His Silence? Rosary Row to FCRA Bill