ஈவு இரக்கமே இல்லையா சார்? விஜய் ஆட்சிக்கு தரும் சப்போர்ட்டை வாபஸ் வாங்க சிபிஎம் திட்டம்? ஏன்?

  • சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தை ஆதரித்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது. தமிழகத்தில் முன்னெடுக்கும் போராட்டங்களை ஒடுக்க, தவெக அரசின் காவல்துறை நடத்தும் காட்டுமிராண்டித்தனம் எல்லை மீறிப் போகிறது. இதனை ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகின்றன.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற இளைஞர் அமைப்பும், பல்வேறு மாணவர் சங்கங்களும் இணைந்து ஜந்தர் மந்தரில் நடத்தி வரும் இந்த போராட்டம், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    காக்ரோச் ஜனதா கட்சி பேரணியும் வன்முறையும்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை தொடங்கினர். தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றப் பகுதியை நோக்கி முன்னேற முயன்ற மாணவர்களைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

    இந்த மோதலில் 118க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 60க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டம் வலுவடைந்ததால் மத்திய டெல்லிப் பகுதியில் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

    Advertisement


    தமிழ்நாட்டிலும் போராட்டம்

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தை ஆதரித்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வலுப் பெற்று வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான சென்னை தி.நகரிலுள்ள பாலன் இல்லத்தில் தோழர்களும் கல்லூரி மாணவர்களும் நடத்தும் போராட்டங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. மத்திய பாஜக அரசையும் மாநில அரசின் காவல்துறையின் அராஜகத்தையும் இவர்கள் கண்டித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ.யின் மாநில செயலாளர் சண்முகம், நீட் தேர்வை எதிர்த்து வெறும் அறிக்கை மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறார். இது தோழர்களை வருத்தமடைய வைத்துள்ளது. நேற்று இரவு சண்முகத்தை சி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகிகளும், போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர் தோழர்களும் சந்தித்துள்ளனர்.

    Advertisement

    அந்த சந்திப்பில், ''தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் போராட்டங்களை தவெக அரசின் போலீஸ் ஒடுக்குகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதில் எங்களின் நிலைப்பாடு மாறாது என அறிக்கை கொடுத்துள்ள முதல்வர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக மத்திய பாஜக அரசை கண்டித்து நடத்தப்படும் போராட்டத்தை எதற்காக ஒடுக்க நினைக்கிறார்? போராட்டம் வலிமையாக நடக்க அனைத்தும் உதவிகளையும் செய்ய வேண்டிய தவெக அரசு, போலீஸ் மூலம் மிக மோசமாக நடந்துகொள்கிறது.

    ஈவு இரக்க மில்லாமல் பெண்களைத் தாக்குகிறார்கள்; ஆபாசமாக பேசுகிறார்கள். ஆனால், முதல்வர் விஜய், இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப் பட்டதாக தெரியவில்லை. நீங்கள் வெறும் அறிக்கை விட்டு பயனில்லை. முதல்வர் விஜயை சந்தித்து நம் கட்சியின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்யுங்கள். இல்லையெனில், ஆட்சிக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் அவரிடம் சொல்லி விட்டு வாருங்கள். மாணவர்கள் பலம் தான் நம் கட்சியின் பலம். அதையும் நாம் இழந்து விடக்கூடாது. தவெக அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் முதல்வரை சந்தித்து கண்டனத்தை பதிவு செய்யுங்கள் '' என்று சண்முகத்திற்கு கடும் அழுத்தம் தந்திருக்கிறார்கள்.

    Advertisement

    இதற்கு பதிலளித்துப் பேசிய சண்முகம், ஏற்கனவே அவரை சந்தித்து பேச நேரம் கேட்டு தகவல் அனுப்பினேன். இன்னும் நேரம் கொடுக்கப்படவில்லை. நேரம் ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். நிச்சயம் அவரை சந்தித்து நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன்'' என்று மட்டும் சொல்லி, அவர்களின் ஆவேசத்தை மட்டுப்படுத்தியுள்ளார் சண்முகம்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why is CPM not want to support TVK govt anymore after the NEET Paper Leak Protests?