தமிழ்நாடு நாள் இன்று: ‘தமிழ்நாடு’ என்ற பெயர் உருவான வரலாறு.. சட்டசபையில் ஸ்பெஷல் அனுமதி கேட்ட அண்ணா!

  • சென்னை: 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா, ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    Advertisement

    அதிமுக ஆட்சியில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் ஆட்சியின்போது, ஜூலை 17 தமிழ்நாடு நாள் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தவெக அரசு இன்றைய நாளை தமிழ்நாடு நாள் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, நவம்பர் 1, ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களையும் கொண்டாடும் என அறிவித்துள்ளது.

    Advertisement

    மொழிவாரி மாநிலங்கள்

    பல்வேறு போராட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி, இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பிய பெயரே சூட்டப்பட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 'மதராஸ்' என்ற பெயரே தொடரும் என அரசு அறிவித்தது.

    தமிழ்நாடு பெயர்

    'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956, ஜூலை 27-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி, 76 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார். சங்கரலிங்கத்தின் மறைவு இந்தப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. 1957-ல் திமுக முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதே 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடுதான் நுழைந்தது.

    Advertisement

    1957, மே 7-ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்த திமுக-வின் தீர்மானத்துக்கு 42 பேர் ஆதரவாகவும், 127 பேர் எதிராகவும் வாக்களித்ததை அடுத்து அந்தத் தீர்மானம் அப்போது தோல்வியடைந்தது. அதன்பிறகும் சில முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேறவில்லை.

    தமிழ்நாடு என பெயர்சூட்டிய அண்ணா

    1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது திமுக. ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றினார் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

    சட்டசபையில் எழுந்த முழக்கம்

    பேரறிஞர் அண்ணா பேசும்போது, "சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்ற இந்த நன்னாளில் "தமிழ்நாடு" என்று நான் சொன்னதும் "வாழ்க" என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்." என்றார். அதைத்தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா, "தமிழ்நாடு" என 3 முறை சொல்லச் சொல்ல, சட்டசபை உறுப்பினர்கள், வாழ்க! வாழ்க! வாழ்க! என முழக்கமிட்டனர்.

    Advertisement

    அதைத் தொடர்ந்து 23.11.1968-ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969, ஜனவரி 14-ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்பது 'தமிழ்நாடு' என அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு மாநிலம் உருவான நாளை தான் தமிழ்நாடு அமைந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று பல தமிழ் அமைப்புகள் கூறி வந்தனர். அதன்படி 2019 ஆம் ஆண்டு முதல், நவம்பர் 1 ஆம் தேதியைத் தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

    தமிழ்நாடு நாள்

    ஆனால், 2021 ல் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அன்றைய நாளான ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது.

    Advertisement

    பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு என்று பெயரை கொண்டாடுவதற்கு நவம்பர் முதல் நாளா அல்லது ஜூலை 18ஆம் தேதியா என்று கடந்த ஆண்டு வரை சர்ச்சை எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ஜூலை 18 ஆம் தேதியான இந்நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    தவெக அரசு நிலைப்பாடு

    இந்நிலையில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த "தமிழ்நாடு நாள்" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    English Summary

    When the DMK assumed power in 1967, the then Chief Minister Perarignar Anna moved and passed a resolution in the Tamil Nadu Legislative Assembly on July 18 to rename the Madras State as ‘Tamil Nadu’. To commemorate that historic day, July 18 is celebrated as ‘Tamil Nadu Day’.