சென்னை: சென்னையில் கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி இடையே 4வது மெட்ரோ பாதை அமைக்கும் பணி தான் அதிவேகமாக நடந்து வருகிறது. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து போரூர் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் பாதைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு 7 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. பிரதமர் அலுவலகத்திடமிருந்து இதற்கான திறப்பு விழா தேதி அறிவிக்கப்படவில்லைv என்றும், இதனால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த பூந்தமல்லி பாதையை வடபழனி வரை திறந்தால் தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிற நிலையில், விரைவாக திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் கட்டமாக சென்ட்ரல் முதல் பரங்கிமலை, விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை என இரண்டு வழித்தடத்தில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது. பயணிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடி என்கிற அளவிற்கு இதில் பயணிகள் எண்ணிக்கை இருக்கிறது.
இதையடுத்து, 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவில் மாதவரம் முதல் சிப்காட் வரை (3-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (4-வது வழித்தடம்), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வழித்தடத்திலும் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து போரூர் சந்திப்பு வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூர உயர்மட்ட ரயில் பாதைப்பணிகள் முதல் கட்டமாக நிறைவடைந்துள்ளன. இந்தப்பாதையில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு செய்தனர். 'இந்தப்பாதையில் பயணிகளுக்கான ரயிலை இயக்கலாம்' என்று பாதுகாப்பு சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்ட போதிலும், தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த ரயில் பாதை திறக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் பிரதமர் அலுவலகத்திடமிருந்து இதற்கான திறப்பு விழா தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை " என்றார்கள், இதுபற்றி பூந்தமல்லி, போரூர் பயணிகள் கூறுகையில், பூந்தமல்லி, வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்த வழித்தடமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலர் எளிதாக ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல இனி மெட்ரோ ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. பலர் சொந்தவாகனங்களுக்கு பதில் மெட்ரோ ரயிலை விரும்புவார்கள். ஆனால் 7 மாதமாக ரயில் பாதை திறக்கப்படாமல் முடங்கி உள்ளது. விரைவாக ரயில் சேவைகளை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.