பிளைட் ஏறும் ராஜ்மோகன்.. டெல்லிக்கு அவசர பயணம்.. ஸ்டாலினுக்கே பிரஷர் ஏற்றிய விஷயத்திற்கு தீர்வு?


  • சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதி நிலுவையில் உள்ள சூழலில், அதனை உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி செல்லவுள்ளார்.

    Advertisement

    அங்கு அவர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, தமிழகத்தின் கல்வி உரிமைகள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து கோரிக்கை வைக்க உள்ளார்.

    சமக்ர சிக்ஷா திட்டம் என்றால் என்ன?

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பள்ளி நிதியுதவித் திட்டமே 'சமக்ர சிக்ஷா' ஆகும். இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிய பள்ளிகளைத் தொடங்குதல், ஆய்வகங்கள் அமைத்தல், ஆசிரியர்களைப் புதிதாக நியமித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முக்கியக் கல்வி மேம்பாட்டுப் பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியைக் கொண்டுதான் அரசுப் பள்ளிகளின் அன்றாடப் பராமரிப்பு முதல் மாணவர்களின் கல்வித் தரம் மேம்பாடு வரையிலான பணிகள் தடையின்றித் திட்டமிடப்படுகின்றன.

    PM SHRI திட்ட விவகாரம்

    தற்போது மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதில் பெரும் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டமாகும். ஆரம்பத்தில் இத்திட்டத்தில் இணைவதற்குக் கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்திருந்த தமிழக அரசு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் மும்மொழி கொள்கை.

    Advertisement

    தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்கள் மற்றும் மும்மொழிப் பாடத்திட்டக் கட்டுப்பாடுகள் இத்திட்டத்தின் கீழ் மறைமுகமாகத் திணிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழக அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. ஆனால், முன்னதாகக் கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தமிழக அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு இணங்காத காரணத்தைக் காட்டி, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவாக, தற்போதைய நிலவரப்படி சுமார் 5,000 கோடி ரூபாய் வரையிலான நிதி மாநிலத்திற்கு வந்து சேராமல் முடங்கியுள்ளது.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சிக்கு இது பெரிய அழுத்தமாக இருந்தது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிதி முடக்கத்தால் தமிழகத்தில் தற்காலிகப் பணியில் உள்ள ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிப் பராமரிப்புப் பணிகள் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் தடையின்றிச் செயல்படுவதில் பெரும் சவால்கள் எழுந்துள்ளன.

    இந்த நிதி நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நேற்று முன்தினம் முதல்வர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    Advertisement

    மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய சமக்ர சிக்ஷா நிதியை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக டெல்லிக்குத் தூது சென்று மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

    விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதற்கான பயணத் திட்டங்களை வகுத்துள்ளனர். அதன்படி, அமைச்சர் ராஜ்மோகன் டெல்லிக்கு நேரில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்கும் போது, தமிழகத்தின் கல்வி மற்றும் இருமொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மாநிலத்திற்குரிய கல்வி நிதியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அவர் அளிக்கவுள்ளார்.

    இந்த டெல்லி பயணத்தின் மூலம் தமிழகத்தின் நீண்ட நாள் கல்வி நிதிப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

    English Summary

    Why is TN School Education Minister Rajmohan visiting Delhi for Urgent Meet?