சுயநலம் 1% கூட இல்லை.. நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருக்கலாம்.! அவர் தான் கிங் மேக்கர் காமராஜர்

  • சென்னை: இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் காமராஜர். படிக்காத மேதை, கர்மவீரர் என அவருக்கு பல்வேறு புனை பெயர்கள் இருந்தாலும் கிங் மேக்கர் என்பதே அவரது அரசியல் தலைமை பண்பைச் சுட்டிக்காட்டுவதில் சரியாக இருக்கும். அவரது பிறந்த நாளான இன்று ஏன் அவர் ரியல் கிங் மேக்கராக இருந்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    1903ம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி விருதுநகரில் பிறந்த காமராஜர், சுதந்திரப் போராட்ட வீரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் தான் சுதந்திர போராட்டம் மிக தீவிரமாக நடந்து வந்தது. காந்தி தொடங்கி பல தலைவர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தர தயாராக இருந்தனர். அந்த சுதந்திரப் போராட்டத்தில் காமராஜரும் பங்கேற்றார்.

    Advertisement

    காமராஜர்

    காங்கிரஸ் கட்சியில் இருந்து சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தார். சுதந்திரத்திற்கு பிறகு பிஎஸ் குமாரசாமி ராஜா மற்றும் ராஜாஜிக்கு பிறகு தமிழக முதல்வராக பதவியேற்றார். குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகியோர் மேலவை மூலமாகவே சட்டசபைக்கு தேர்வாகி இருந்தனர். அதன்படி பார்த்தால் மக்களை சந்தித்து, தேர்தலை எதிர்கொண்டு முதல்வராக பதவியேற்ற முதல் ஆள் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் காமராஜர்.

    சுமார் 9.5 ஆண்டுகள் தமிழக (அப்போது சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த காமராஜர் மதிய உணவுத் திட்டம் தொடங்கி பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் பல அணைகள், தொழிற்சாலைகளும் கொண்டு வரப்பட்டன. இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே! மக்கள் நல திட்டங்களை போலவே அரசியலிலும் சாணக்கியராகவே காமராஜர் இருந்தார்.

    Advertisement

    கட்சிக்கு முக்கியத்துவம்

    சுயநலம் இல்லாமல் கட்சி வளர்ச்சிக்கே முன்னுரிமை கொடுத்தார். இந்தக் காலத்தில் அதுபோன்ற தலைவர்களை எல்லாம் நம்மால் பார்க்கவே முடியாது. இதன் காரணமாகவே அவரை கிங் மேக்கர் என அழைக்கிறார்கள். அவரது அரசியல் சாணக்கியதனத்தை காட்டும் சில சம்பவங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

    1963ம் ஆண்டு இந்திய அரசியலில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் காமராஜர். அப்போது அவர் முன்வைத்த திட்டம்தான் "காமராஜ் திட்டம்". அதாவது முதல்வர் போன்ற அரசுப் பதவிகளில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகி, கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். சொன்னது மட்டுமின்றி முதல் நபராக தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் நினைத்திருந்தால் 1967 தேர்தல் வரை முதல்வராக இருந்திருக்கலாம். ஆனால், கட்சிக்கு முன்னுரிமை கொடுத்து தனது பதவியை தூக்கி எரிந்தார்.

    Advertisement

    நேருவின் மரணம்

    இதன் பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார். அதே காலகட்டத்தில் இந்திய அரசியலை உலுக்கிய இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன. முதலில் 1964ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு தலைவர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. இருப்பினும், அனைவரையும் ஏற்க வைப்பது கடினமாகவே இருந்தது.

    அப்போது காமராஜர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியில் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் தேசிய அரசியலில் காமராஜரின் இமேஜ் மேலும் உயர்ந்தது. இருப்பினும், 2 ஆண்டுகளில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அப்போது மீண்டும் பிரதமர் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த லிஸ்டில் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பெயர்கள் இருந்தன.

    Advertisement

    இந்திரா காந்தி

    காமராஜரே கூட பிரதமர் ஆகலாம் என்றும் கூட சிலர் சொன்னார்கள். ஆனாலும், அப்போதும் சுயநலம் பார்க்காமல் காமராஜர் எடுத்த முடிவு இந்திய அரசியலின் போக்கையே மாற்றியது. காங்கிரஸ் கட்சிக்குள் ஆதரவை ஒருங்கிணைத்து, இந்திரா காந்தியை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதில் காமராஜர் முக்கிய பங்காற்றினார். இப்படி தொடர்ந்து இரண்டு பிரதமர்களை தேர்வு செய்வதில் அவரது செல்வாக்கு இருந்தது.

    அதாவது நேரு என்ற மாபெரும் தலைவர் உயிரிழந்த போது, அடுத்த யார் என்பதை கச்சிதமாக தீர்மானித்தார். லால் பகதூர் சாஸ்திரியின் எதிர்பாராத மறைவுக்கு பிறகு, இந்திரா காந்தி வந்தால் தான் சரியாக இருக்கும் என்ற முடிவைத் துணிச்சலாக எடுத்தார். இதன் காரணமாகவே அவர் கிங் மேக்கர் என அழைக்கப்படுகிறார்.

    Advertisement

    கிங் மேக்கர்

    அதிகாரம், பதவி, செல்வம் ஆகியவற்றை மட்டுமே தேடும் அரசியல்வாதிகளுக்கு நடுவில்.. தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கட்சியை வளர்க்கவும் நாட்டின் நிலைத்தன்மைக்காகவும் பயன்படுத்தியவர் காமராஜர்! இந்திய அரசியலின் போக்கை மாற்றிய "கிங்மேக்கர்" என்ற பட்டம் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை!

    English Summary

    Reason behind K. Kamaraj being called as Kingmaker(இந்தியாவின் இரு முக்கிய பிரதமர்களை தேர்வு செய்த காமராஜர்): Kamaraj has elected two Indian prime ministers.