எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்

  • சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளான கயல்விழி அழகிரி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, நேற்று (ஜூன் 13-ஆம் தேதி) பல முக்கியப் பிரமுகர்களுடன் அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இணைப்பு நடைபெறாதது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது அதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளது.

    Advertisement

    தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    நேற்று முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகி விஜயதாரணி உள்ளிட்டோர் தவெக தலைமையின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    கயல்விழி அழகிரி

    இந்த நிகழ்வில் கயல்விழி அழகிரியும் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
    ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் தவெகவில் இணையவில்லை. இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர் வட்டாரங்களில் பேசிய போது கிடைத்த தகவல்களின்படி, கயல்விழி அழகிரி கடந்த சில மாதங்களாக தவெக தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. முதல்வராக விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

    Advertisement

    தவெக

    அதன்பிறகு தலைமைச் செயலகத்திற்குச் சென்று அமைச்சர்களை சந்தித்ததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இதனால், அவர் விரைவில் தவெகவில் இணைவது உறுதி என்றே பலரும் கருதினர். ஆனால் கட்சி இணைவு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான தவெக வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கயல்விழி அழகிரி வெளிப்படுத்தினாராம்.

    மதுரை மேயர்

    மதுரை அரசியலில் அழகிரி குடும்பத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் நிலையில், அந்த ஆதரவை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கயல்விழி இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் தவெக தலைமையோ இதுவரை எந்தவொரு பதவிக்கும் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தல்

    குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, அப்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சி வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டையே கட்சி தலைமை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கயல்விழி அழகிரி எதிர்பார்த்த உறுதிமொழி இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் அவர் கட்சியில் சேர்வது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    பேச்சுவார்த்தை

    அதேநேரத்தில், கயல்விழி அழகிரிக்கும் தவெக தலைமையுக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கிவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் தொடர்பு தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மற்றும் தென் மாவட்ட அரசியலில் அழகிரி குடும்பத்தின் தாக்கம் இன்னும் இருப்பதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் கயல்விழி அழகிரியின் வருகையை தவெக எதிர்பார்த்துள்ளதாம்.

    Advertisement

    மேயர் பதவி

    தற்போதைய சூழலில், கயல்விழி அழகிரி தவெகவில் இணைவதற்கான கதவு இன்னும் திறந்தே இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் வேகமடையலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேயர் பதவி தொடர்பான பதில் கிடைத்த பிறகு கயல்விழி அழகிரி நிச்சயம் தவெகவில் இணைவார் என்கின்றனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.

    English Summary

    Kayalvizhi Alagiri's TVK entry delayed amid reports of negotiations over Madurai Mayor post assurance.