சென்னை: சட்டமன்ற தேர்தலில் போதுமான மெஜாரிட்டி பெறாத போது, ஏன் அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "நேற்று எங்கள் தோழமை கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் விஜய்யை சந்தித்திருந்தார்கள். அவர்கள் தேர்தல் நேரத்தில் எங்களிடம் ஆதரவு கேட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்று அந்த தலைவர்கள் கூறியிருந்தார்.
நாங்கள் ஆதரவு கேட்டபோது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் சப்போர்ட் பண்ணுமா? தெரியாது. காங்கிரஸை அழைத்தபோது மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்பினோம் என தோழமை கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஏன் அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை? அது எங்கள் அரசியல் நிலைப்பாடு. தேர்தல் ரிசல்ட் வந்துக்கொண்டிருந்த போது, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் மிதுன் சேர்ந்து.. திமுக-அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டனர். திமுகவை எதிர்த்துதான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். சட்டமன்றத்தில் வைத்து ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்கள். அப்படி இருக்கும் போது திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது எவ்வளவு பெரிய துரோகம்? திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததால், அவரை துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. இப்போது ஒட்டுமொத்த கட்சியையும் திமுகவிடம் அடகு வைக்க முயன்றிருப்பது எவ்வளவு பெரிய துரோகம்? இதனால்தான் அதிமுகவினர் கொந்தளித்தனர். இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன்தான் அதிமுகவை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என் மகனுக்கு பதவி ஆசை எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். இளைஞர் அணியை பொறுப்பேற்று மிதுன் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிதுனுக்கு பதவி ஆசை இல்லை எனில் எதற்காக அவரை கட்சி உறுப்பினராக வைத்திருக்கிறீர்கள்? திமுகவில் உதயநிதியை கட்சி பொறுப்புக்கு கொண்டு வரும்போது.. அவர் இத்தனை ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராக இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரே! அப்படி சொல்லி மிதுனை பொறுப்புக்கு கொண்டுவருவதற்காகத்தான் உறுப்பினர்களாக வைத்திருக்கிறீர்களா? அதிமுகவும்-திமுகவும் விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் அல்லது மக்களவை தேர்தலின் போது கூட்டணியை அறிவிப்பார்கள். ஆட்சி அமைக்க கூட்டணி பேசினார்கள் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி வெளிப்படையாக கூறிவிட்டார். புடலங்காய் கூட்டணி என இதை சிபிஎம் பெ.சண்முகம் கூறிவிட்டார். ஐயுஎம்எல் தலைவரும் இதை சொன்னார். முதல் 2.5 ஆண்டுகள் எடப்பாடி முதல்வர், அடுத்த 2.5 ஆண்டுகள் உதயநிதி முதலமைச்சர் என்று சொல்லி ஆதரவு கோரினார் என்று கூறினர். இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. விரைவில் மொத்த அதிமுகவும் தாவெகவில் இணையும்" என்று பேசியுள்ளார்.தோழமை தலைவர்கள்
துரோகம் செய்த அதிமுக
எடப்பாடி பார்த்த வேலை
புடலங்காய் கூட்டணி