பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்

  • சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் மக்கள் நலத் திட்டங்களை விரைவாகவும் எளிதாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    Advertisement

    சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருவாய் துறையின் சேவைகளை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் சிரமமின்றி பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.

    Advertisement

    ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகளில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டார அதிகாரிகள் மற்றும் விஏஓக்கள் ஆய்வு செய்து 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பணிகள் முடிக்கப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    அரசு நிலங்கள் குறித்த விவரங்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் பட்டா மாறுதல் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை சரிசெய்வது தொடர்பாகவும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    பேரிடர் மேலாண்மை பணிகளுக்காக தமிழகம் ரூ.1000 கோடி நிதி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    Advertisement

    முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், "அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவை நடைமுறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறதா என்பதில்தான் முதல்வரின் முழு கவனமும் உள்ளது. பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும் மக்கள் பயனடைகிறார்களா, அவர்கள் திருப்தியடைகிறார்களா என்பதையே அவர் முக்கியமாகக் கருதுகிறார்" என்றார்.

    மேலும், மாரிதாஸ் கைது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த வழக்கின் சட்ட ரீதியான விவரங்கள் குறித்து தனக்கு தெளிவான தகவல் இல்லை என்று கூறினார். அதேசமயம், பத்திரிகை சுதந்திரம் என்பது தனிநபர் விமர்சனங்களைத் தாண்டி சமூக வளர்ச்சி மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

    English Summary

    Minister Sengottaiyan stated that Chief Minister Vijay is focused on implementing welfare schemes and delivering results rather than attending frequent press interactions. He also highlighted efforts to speed up public services and improve revenue administration.