விஜயபாஸ்கர் தவெகவில் இணையக் கூடாது? ஜான் ஆரோக்கியசாமி காட்டும் பிடிவாதம்? தள்ளிப்போகும் இணைப்பு

  • சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைவது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன. ஜூன் 29-ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெறவிருந்த இந்த இணைப்பு விழா, வரும் ஜூலை 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    Advertisement

    மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த தேதி மாற்றம் என தவெக தலைமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் வட்டாரங்களில் பரவும் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்படாத சில தகவல்கள், இந்த தாமதத்திற்கு பின்னால் கட்சிக்குள் இருக்கும் கடுமையான உள்நாட்டு மோதல்களும், அரசியல் உத்திகளுமே காரணம் என சுட்டிக்காட்டுகின்றன.

    Advertisement

    ஜான் ஆரோக்கியசாமியின் பிடிவாதம்: பின்னணி என்ன?

    தவெகவின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராகக் கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமி (John Arockiasamy), சி. விஜயபாஸ்கரை கட்சிக்குள் இணைப்பதில் முற்றிலும் உடன்படவில்லை என்றும், தனது கடுமையான எதிர்ப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதலமைச்சர் விஜய் தனது கட்சியின் அடித்தளத்தையே "ஊழலற்ற தூய்மையான ஆட்சி மற்றும் வெளிப்படையான நிர்வாகம்" என்ற முழக்கத்தின் மீதுதான் கட்டமைத்துள்ளார். இந்தச் சூழலில், குட்கா முறைகேடு வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தொடர்ந்த வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு எனப் பல்வேறு மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகளின் பிடியில் இருக்கும் ஒரு முக்கிய தலைவரை கட்சிக்குள் கொண்டு வருவது, கட்சியின் அடிப்படை கொள்கைக்கே முரணாக அமைந்துவிடும் என்பது ஜான் ஆரோக்கியசாமியின் வாதமாக இருக்கிறது.

    Advertisement

    விஜயபாஸ்கரின் வருகை, எதிர்க்கட்சிகளுக்கு தவெகவை "ஊழல்வாதிகளின் புகலிடம்" என்று விமர்சிப்பதற்கான எளிய ஆயுதத்தை வழங்கிவிடும் என்றும், இது கட்சியின் தூய்மையான பிம்பத்தை பொதுமக்களிடையே கடுமையாக பாதிக்கும் என்றும் வியூகக் குழு எச்சரித்துள்ளது.

    தள்ளிப்போகும் இணைப்பு; கட்சிக்குள் இருக்கும் இரு வேறு கருத்துக்கள்:

    அதே நேரத்தில், தவெகவின் மற்றொரு முக்கிய தரப்பு, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கையும், அடிமட்ட தொண்டர்களின் பலத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறது. தேர்தல் அரசியலில் வெறும் கொள்கை மட்டும் போதாது, களத்தில் வாக்கு வங்கியைத் திரட்ட விஜயபாஸ்கர் போன்ற சீனியர் தலைவர்களின் பலம் தேவை என்பது இவர்களின் கருத்து.

    Advertisement

    இந்த உட்கட்சி விவாதங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத உள் விவகாரங்கள் காரணமாகவே, வெறும் நிர்வாகக் காரணங்களை மட்டும் முன்வைத்து தற்போதைக்கு இணைப்பு விழா தள்ளிப்போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை 2-ஆம் தேதி இணைப்பு நடக்குமா அல்லது அதற்குள் விஜயபாஸ்கரின் ரோல் மற்றும் அவருக்கான முக்கியத்துவம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா என்ற கேள்வி தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    விராலிமலையில் அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்:

    இணைப்பு விழா தள்ளிப்போனாலும், தனது அரசியல் நகர்வுகளை விஜயபாஸ்கர் நிறுத்தவில்லை. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இதைக் கணக்கில் கொண்டு, தொகுதி மக்களைத் தன் பக்கமே தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், சுமார் 80,000 குடும்பங்களுக்கு "நன்றி அறிவிப்பு பரிசுப் பெட்டகம்" (எவர்சில்வர் பாத்திரம், இனிப்புகள்) வழங்கும் பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளார்.

    Advertisement

    அதிமுகவிலிருந்து விலகியதால் உள்ளூர் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைச் சமாளிக்கவும், வரும் இடைத்தேர்தலில் தவெகவின் 'விசில்' சின்னத்தில் போட்டியிட்டால் தனக்கான ஆதரவு குறையாமல் இருக்கவும் இந்த அதிரடி வியூகத்தை அவர் கையாண்டு வருகிறார். தவெகவின் டாப் லெவல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் எதிர்ப்பு மற்றும் கட்சிக்குள்ளான இந்த இடியாப்பச் சிக்கல்களை முதலமைச்சர் விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே ஜூலை 2 அரசியல் நகர்வுகள் அமையும்.

    English Summary

    Why Strategy Chief John Arockiasamy Strongly Opposes C Vijayabaskar’s Entry Into Vijay’s Party