சென்னை: கர்நாடக வனப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ள விவகாரம் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. கர்நாடக அரசின் தவறுக்கு, தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருப்பது தவெக அரசின் பலவீனத்துக்கு உதாரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹனூர் வனப்பகுதியில் தமிழர்கள் மூன்று பேர் அம்மாநில வனத்துறையால் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு நீதி வேண்டி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தமிழக சட்டசபையில் தெரிவித்தார். கர்நாடக அரசு ரூபாய் 1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், அரசு இன்னும் நிவாரணம் அறிவிக்கவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முழுப் பொறுப்பும் கர்நாடக மாநில அரசையே சார்ந்தது. அங்குள்ள வனத்துறையினரின் நடவடிக்கையால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடம் இருந்துதான் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதற்கான அழுத்தத்தை கர்நாடக அரசுக்கு அளிக்கத் தவறிய தவெக அரசு, சொந்த மாநில மக்களின் வரிப்பணத்தை நிவாரணமாக தாராளமாக அள்ளி வீசியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கர்நாடக அரசு, அம்மாநில வனத்துறையின் தவறுக்குப் பொறுப்பேற்று போதிய நிவாரணம் அறிவிக்காத நிலையில் கர்நாடகாவிடம் போராடி உரிமையைப் பெற்றுத்தர முடியாத தவெக அரசு, தன் கஜானாவிலிருந்து பணத்தைக் கொடுத்து பிரச்சனையைத் தற்காலிகமாக மூடிமறைக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக மக்களின் உழைப்பில் கிடைக்கும் வரிப்பணம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்பட வேண்டுமே தவிர, பக்கத்து மாநிலத்தின் தவறுகளை மறைக்கும் போர்வையாக மாறக்கூடாது. இந்த விவகாரத்தில் முந்தைய ஆந்திர செம்மரக் கடத்தல் சம்பவத்தின்போது கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டதை தவெக தரப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தச் சம்பவத்தின் போது தமிழக அரசு தலா 3 லட்சம் ரூபாய் அறிவித்தது. ஆனால், அதன் பிறகு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஆந்திர அரசுக்கே நேரடியாக உத்தரவிட்டது. மேலும், இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஆந்திர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தமிழகத்திலிருந்து எல்லை தாண்டி ஆந்திர காட்டுக்குள் சென்ற தமிழர்கள். கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டில் என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் கர்நாடகத்திலேயே வாழ்ந்து வந்த கர்நாடகவாசிகள். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். சட்டப்பூர்வமாகவும், புவியியல் ரீதியாகவும் கர்நாடக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டிய ஒரு விவகாரத்தில், தமிழக அரசு கர்நாடகா அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அம்மாநில அரசுக்குப் பணிந்துபோய், சொந்த மாநில மக்களின் வரிப்பணத்தை எடுத்து தாரை வார்த்திருப்பது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிதாக கார்கள் வழங்குவது, வாகனப்படி, உதவியாளர் படி என மாதம் ரூபாய் 1 லட்சம் கூடுதலாக வழங்குவது போன்ற ஆடம்பரச் செலவுகளில் தொடங்கி, இதுபோன்ற பொறுப்பற்ற நிதி ஒதுக்கீடுகள் வரை தவெக அரசு, அரசின் நிதியைத் தாறுமாறாகச் செலவிட்டு வருகிறது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களைச் சீரழிக்கும் இத்தகைய போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அண்டை மாநிலங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், நம் உரிமைகளுக்காகவும் உறுதியாகக் குரல் கொடுக்கும் வலுவான அரசே தமிழகத்திற்குத் தேவை. அண்டை மாநில அரசின் தவறுகளைப் பூசி மெழுகும் தற்காலிக நிவாரணங்கள் வேண்டாம் என்ற குரல்கள் பரவலாக எழுந்துள்ளன.தவெக அரசு நிவாரணம்
கர்நாடக அரசே பொறுப்பு
தமிழக அரசு கஜானாவில் இருந்து
ஆந்திர சம்பவம்
2 சம்பவங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம்
தாறுமாறாக வாரி இறைக்கும் தவெக அரசு