சென்னை: மேகதாதுவில் குறுக்கே அணை கட்ட கர்நாடகா சமர்ப்பித்த மாற்றியமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் (CWC) அதிரடியாகத் திருப்பி அனுப்பியுள்ளது. அணைக்கட்டின் கொள்ளளவு கணக்கீட்டில் உள்ள குளறுபடிகள், விதிகளுக்குப் புறம்பான புதிய திட்டங்கள் மற்றும் அதிகப்படியான நீர் பயன்பாடு ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி CWC எடுத்த இந்த நடவடிக்கை, தமிழகத்திற்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த ஒரு மிக முக்கியமான சட்டரீதியான வெற்றியாகும்.
ஆனால், இந்தச் சூழலில்தான் ஒரு மிக ஆபத்தான அரசியல் நகர்வு திரைமறைவிலும் மேடைகளிலும் அரங்கேறத் தொடங்கியிருக்கிறது. காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழக முதல்வர் விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த நேரடிப் பேச்சுவார்த்தை முறை உண்மையிலேயே தமிழகத்திற்குப் பலன் தருமா? அல்லது பல ஆண்டு கால போராட்டத்தை ஒரே அடியில் தகர்த்துவிடுமா?
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) என்பது ஏதோ அரசியல்வாதிகளின் தயவில் தானாக உருவான அமைப்பு அல்ல. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், பல ஆண்டு கால சட்டப் போராட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகம் பெற்றெடுத்த ஒரு சட்டரீதியான பாதுகாப்பு அரண். மேல்மடை மாநிலமான கர்நாடகா, தனது அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப தண்ணீரை மறிக்க முடியாது என்பதை உறுதிசெய்யும் ஒரே சட்டப்பூர்வமான அதிகாரம் இந்த ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட ஒரு உச்சபட்ச அமைப்பை விடுத்து, மாநில முதல்வர்கள் நேரடியாகப் பேசிப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வது என்பது, இந்த ஆணையத்தின் அதிகாரத்தைக் கேள்விக் குறியாக்கும் செயலாகும். ஒருவேளை, பெங்களூர் செல்லும் முதல்வர் விஜய், கர்நாடக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேட்டூர் அணையின் உடனடித் தேவைக்காகச் சில டி.எம்.சி தண்ணீரைப் பெற்றுத் தருகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அடுத்த சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்களில் வைரல் ரீல்ஸ்களும், வரலாற்றுச் சாதனை என முழங்கும் வெற்றி வீடியோக்களும் புயலெனக் கிளம்பும். அரசியல் தொண்டர்கள் ஆரவாரம் செய்வார்கள். ஆனால், இந்தத் தற்காலிகக் கொண்டாட்டத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கொடூரமான ஆபத்தை யாராவது யோசித்துப் பார்த்தார்களா? நாளை மற்றொரு வறட்சி ஆண்டு வரும்போது, கர்நாடகா மீண்டும் தண்ணீர் தர மறுத்தால் என்ன நடக்கும்? நாம் வழக்கம் போல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகும்போது, கர்நாடக அரசு மிகச் சுலபமாக ஒரு வாதத்தை வைக்கும்: கடந்த முறை தண்ணீர் தேவைப்பட்டபோது தமிழக அரசு ஆணையத்தை நாடாமல், நேரடியாக எங்களிடம் வந்துதான் பேசிப் பெற்றது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் என்பது வெறும் பெயரளவு அமைப்புதான்; மாநிலங்களுக்கு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையே போதும்! இந்த ஒரே ஒரு வாதத்தின் மூலம், பத்தாண்டு காலப் போராட்டத்தால் நாம் வென்றெடுத்த CWMA-வின் அதிகாரத்தை கர்நாடகா மிகச் சுலபமாக நீர்த்துப்போகச் செய்துவிடும். அரசியல் களத்தில் இருக்கும் தவெக தொண்டர்களோ அல்லது ரீல்ஸ் போட்டு உடனடி விளம்பரத்தை விரும்பும் சமூக ஊடக நெட்டிசன்களோ இந்தச் சட்டரீதியான நுணுக்கங்களை உணராமல் போகலாம். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் இந்தத் தொலைநோக்குப் பார்வை வேண்டாமா? உடனடி அரசியல் லாபத்திற்காகவும், ரீல்ஸ் கொண்டாட்டங்களுக்காகவும் தமிழகத்தின் நிரந்தரச் சட்டப் பாதுகாப்பைப் பலிகொடுப்பது வரலாற்றுப் பிழையாகும். கர்நாடகாவின் தற்காலிகக் கருணைக்குக் கையேந்துவதை விட, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டப்பூர்வமாக நீரைப் பெறுவதே தமிழகத்தின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது. குறுகிய கால வெற்றிக்காக, பல ஆண்டு போராட்டத்தை வீணடித்துவிடக் கூடாது!தியாகங்களால் பெற்ற சட்ட பாதுகாப்பு
குறுகிய காலக் கொண்டாட்டமும், நீளும் ஆபத்தும்
தொலைநோக்குப் பார்வை தேவை!