தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது ஏன்? திருமாவளவன் பேட்டி

  • சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறும் என்று இன்று திருமாவளவன் அறிவித்தார். மேலும் வன்னியரசு அமைச்சராக நாளை பதவியேற்பார் என்றும் தொல் திருமாவளவன் கூறினார். தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக விஜய்யின் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார்.

    Advertisement

    தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. முதல்வராக விஜய் பொறுப்பெற்றார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான தொகுதிகள் கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்தார்.

    Advertisement

    அமைச்சரவையில் விசிக இடம்பெறும் - திருமாவளவன்

    தவெக அமைச்சரவையில் கடந்த 10 ஆம் தேதி விஜய் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடம் கொடுக்கப்பட்டது. அந்த கட்சியின் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். தவெக எம்.எல்.ஏக்கள் 21 பேரையும் சேர்த்து 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்ற நிலையில், இரண்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

    இந்த இரண்டு துறைகளும் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்காக விஜய் விட்டு வைத்து இருப்பதாக தகவல் வெளியானது. விஜய்யும் திருமாவளவனிடம் நேரடியாக இது தொடர்பாக பேசி, விசிக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு செய்வதாக திருமாவளவன் அறிவித்தார்.

    Advertisement

    இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்று அறிவித்தார். திருமாவளவன் கூறியதாவது:-

    பெரும்பாலானோரின் கருத்து இது தான்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பை அடுத்து, எமது கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து ஆய்வு செய்தோம். பெரும்பான்மையானோரின் கருத்தின் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் இடம் பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளோம்.

    Advertisement

    வன்னி அரசு, ஜோதிமணி ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்களில், வன்னி அரசுவின் பெயரை பரிந்துரைப்பது என்று முடிவு செய்துள்ளோம். அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டுமே இன்று வெளியிடுகிறோம். மற்றவை குறித்து பின்னர் விரிவாக பேசலாம். இன்றைய சூழலில் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது எங்கள் கட்சியின் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

    அத்தனை பேரும் இடம்பெற வேண்டும் என்றனர்

    எட்டாம் தேதி இரவு 6 மணிக்கு நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் 32 பேர் பங்கேற்றதில் ஒரு சிலரை தவிர அத்தனை பேரும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். நிறைவாக தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதனை ஒட்டித்தான் 9 ஆம் தேதி முற்பகல் பொதுச்செயலாளர்களுடன் ஆலோசனை செய்தேன்.

    Advertisement

    முடிவாக நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்ற முடிவை எடுத்தோம். நிபந்தனையற்ற ஆதரவு என்ற முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில்தான் ஆதரவு கடிதம் கொடுத்தோம். ஆனாலும், கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள். என்றாலும் நாங்கள் அதை மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

    தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக

    இந்த சூழலில் தவெகவிடம் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அமைச்சரவையில் இடம் பெறுவதை பரிசீலிக்க வேண்டும்; கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்த முதல் இயக்கம் விசிக. தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முறை அறிமுகம் ஆகிறது.

    Advertisement

    தவெக விடுத்த அழைப்பையும் கணக்கில் கொண்டு கட்சியின் நீண்ட கால கனவை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார். தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை வன்னி அரசுக்கு வழங்கப்படலாம் என்று எதிரபார்க்கப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவான ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    English Summary

    Thirumavalavan said that Viduthalai Chiruthaigal Katchi has decided to join the TVK-led cabinet and announced that Vanni Arasu is expected to take oath as minister tomorrow. He also explained the reasons behind VCK’s participation in Vijay’s government despite being part of the DMK alliance.