மோடிக்கு பயந்த விஜய்? கேரளா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது ஏன்? இப்படியொரு காரணமா!

  • சென்னை: கேரளா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் விடி சதீசன் நேற்று பதவியேற்று கொண்டார். கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விஜய் நேற்றைய தினம் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிவில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அதோடு விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

    Advertisement

    தமிழகத்தை போல் கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் விடி சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று சதீசன் முதல்வராக பதவியேற்று கொண்டார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவை புறக்கணித்த விஜய்

    இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் நிச்சயம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இதுபற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் இந்த விழாவிற்கு செல்லாமல் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    முதலில் மோடி சந்திப்பு தான்...

    இதுபற்றி தவெக தரப்பில் கேட்டபோது, ''மே 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சில மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடன் நல்லுறவு கொண்டிருந்தாலும் கூட மாநில-மத்திய உறவை மேம்படுத்தவும் முதல்வர் விரும்புகிறார். மாநிலத்தின் நிதி நிலைமை நிச்சயமற்ற தன்மையில் உள்ளது. இதனால் மத்திய அரசின் ஆதரவு மாநில அரசுக்கு தேவை.

    எனவே மோடி உடனான சந்திப்பு வரை காங்கிரஸின் முக்கியத்துவம் நிறைந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் விரும்பவில்லை. இதனால் அவர் செல்லவில்லை. இருப்பினும் டெல்லி பயணத்தை முடித்த பிறகு விஜய் கேரளா சென்று விடி சதீசனுக்கு வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். '' என்றனர்.

    Advertisement

    பிரச்சனையை தவிர்க்க..

    இதன்மூலம் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டும்போது அது பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை கோபப்படுத்தலாம். இதனால் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம். இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக தான் விஜய் கேரளா முதல்வர் விடி சதீசன் முதல்வராக பதவியேற்ற விழாவில் பங்கேற்கவில்லை என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர்.

    திமுக விமர்சனம்

    முன்னதாக முதல்வர் விஜய்யை, திமுகவும் கடுமையாக விமர்சனம் செய்தது. இதுபற்றி திமுகவின் செய்தி தொடர்பாளர் இளங்கோவன், ''விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். ஆனால் விஜய் கேரளா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை கடைசி நேரத்தில் தவிர்த்தார். விஜய்க்கு எதிராக ஆடம்பர கார் வரி வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு ஆகியவை மத்திய விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு பயந்தே அவர் அங்கு செல்லவில்லை'' என்று சாடியிருந்தார்.

    English Summary

    V.D. Satheesan of the Congress party assumed office as the Chief Minister of Kerala yesterday. Tamil Nadu Chief Minister Vijay, a leader of an alliance partner, was invited to the event. However, Vijay did not participate in yesterday's swearing-in ceremony. Sensational details regarding the background have now emerged.