பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. மீனவர்களுடன் பேச்சு ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

  • சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தது முதலே, அந்த திட்டம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஒருபுறம் அரசு அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் அப்பகுதி மீனவ அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்துக்காக அடையாளம் காணப்பட்ட நிலம், அங்குள்ள பழைய குடியிருப்புகள் என பல்வேறு விவகாரங்களும் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த கருத்து கேட்பு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா?

    Advertisement

    சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலங்களில் பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியையும் அரசு பெற்றது.

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்

    தொடர்ந்து, 3 மாதங்களுக்குள் DPR எனப்படும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கவும், அடுத்தகட்ட பணிகளை தொடங்கவும் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

    தலைமைச் செயலகம் அமைய உள்ள நிலத்தின் பயன்பாட்டு வகைப்பாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்பு பயன்பாட்டில் இருந்த 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற சிஎம்டிஏ குழுமக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    Advertisement

    ஆனாலும், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு அந்தப் பகுதியை சேர்ந்த மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    96 குடியிருப்புகள்

    பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 3.82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 96 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குடியிருப்புகளை இடிப்பதற்கான காரணங்கள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 1986-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இந்த 96 வாடகைக் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. நாளடைவில் அவை பழுதடைந்ததால், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கியூப் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது.

    Advertisement

    இந்தக் குழு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி குடியிருப்புகளை ஆய்வு செய்து, அவற்றை இடிக்க பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, குடியிருப்புகளை காலி செய்யுமாறு அங்கு வசித்து வந்தவர்களுக்கு 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்த குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவு

    இதனை எதிர்த்து குடியிருப்புதாரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், குடியிருப்புதாரர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்று 2024-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    குடியிருப்புதாரர்கள் தாக்கல் செய்த 7 ரிட் மனுக்கள் மீதான விசாரணையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து 25 பேர் மேல்முறையீடு செய்தனர்.

    Advertisement

    இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், 2026-ம் ஆண்டு குடியிருப்புகளை 45 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, குடியிருப்புதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு அனுமதி மனுவையும் (SLP) உச்ச நீதிமன்றம் கடந்த 2026-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தள்ளுபடி செய்தது.

    இந்த நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் பழுதடைந்த குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அரசு மறுப்பு

    பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புப் பிரிவு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதன் மூலம், பழைய குடியிருப்புகளை இடிப்பதற்கு தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே காரணம் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பட்டினப்பாக்கம் கைவிடப்படுகிறதா? தலைமைச் செயலகம், சட்டசபைக்கு பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்

    மீனவர்கள் எதிர்ப்பு

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மீனவ அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டம் தொடர்பாக மீனவர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக அரசு தரப்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக மீன்வளத்துறை சார்பில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளை கைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இதுகுறித்து நெய்தல் மக்கள் கட்சித் தலைவர் கு.பாரதியும் தெரிவித்திருந்தார்.

    பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

    இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற இருந்த இப்பேச்சுவார்த்தைக்கு எழுத்துப்பூர்வமான அழைப்பு வரவில்லை என மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் தேர்வானது எப்படி? எங்களுக்கே தெரியாது.. விஜய் அரசு RTI-ல் பதில்

    ரகசியமாக கருத்து கேட்பு?

    பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரை 12 மீனவ கிராமங்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் என்பதால், தங்களது கருத்துகளை தெரிவிக்க தயாராக இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். ஆனால், போராடும் சங்கப் பிரதிநிதிகளை அழைக்காமல், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒருவரை மட்டும் போனில் அழைத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

    12 கிராமங்களுக்கும் எழுத்துப்பூர்வமான அழைப்பு விடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்திருக்கிறோம் என்றும் அந்த இடம் மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட வேண்டிய பகுதி என்பதற்கான ஆதாரங்களுடன் கூட்டத்தில் திட்டத்தை எதிர்த்து பேசுவோம் என்றும் மீனவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

    பட்டினப்பாக்கம் பழைய குடியிருப்புகளை இடிக்க முடிவு! தமிழக அரசு திடீர் அறிவிப்பு! வருது தலைமை செயலகம்

    வாழ்வாதாரம் பாதிக்குமா

    ஒருவேளை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது மீனவர்களின் முக்கிய கவலையாக உள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், படகுகள் நிறுத்தும் இடம், மீன்பிடி தொடர்பான அன்றாட நடவடிக்கைகள் என பல விஷயங்களில் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அப்பகுதி மீனவர்களிடம் உள்ளது. இதனால்தான் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    மீனவர்களின் இந்த எதிர்ப்புகளுக்கு அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதுதான் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது. வியாழக்கிழமை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய விளக்கம் கிடைக்குமா? இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் மீனவ அமைப்புகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    English Summary

    Pattinapakkam Secretariat.. Why Are Chennai Fishermen Boycotting Today's Public Consultation Meeting?