சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமாக, திருச்சியில் உள்ள சொத்துக்கு நிர்வாக உரிமை கோரி, ஜானகியின் மகன் சுரேந்திரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமாக, திருச்சியில் ஒரு சொத்து உள்ளது. எம்ஜிஆர் தனது சொத்துக்கள் யார் யாருக்கு என்ன போக வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளார். ஆனால் திருச்சி சொத்து மட்டும் யாருக்கு என்று தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.. இந்த சூழலில் ஜானகியின் மகன் சுரேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 'திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆரின் சொத்தை நிர்வகிக்கும் உரிமையை, அவரது மனைவி ஜானகியின் முதல் கணவரின் மகனான எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளீட் முன் செப்டம்பர் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'எம்.ஜி.ஆர்., 1987ல் தன் சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என, உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் திருச்சியில் உள்ள சொத்து குறித்து எதுவும் எம்ஜிஆர் குறிப்பிடவில்லை. அந்த சொத்தை யாருக்கும் இதுவரை எம்ஜிஆர் யாருக்கும் எழுதி கொடுக்கவும் இல்லை. ஜானகி தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. எனவே, ஜானகியின் மகனான எனக்கு சொத்தின் உரிமையை வழங்க வேண்டும்' என, கூறியிருந்தார். எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்கரபாணியின் வாரிசுகள் தரப்பில், 'திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., சொத்துக்களில் எங்களுக்கும் உரிமை உள்ளதால், எங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தர். இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளீட் பிறப்பித்த உத்தரவு: எம்.ஜி.ஆரின் வாரிசு ஜானகி என்பதற்கான சான்றுகள் தாக்கல் செய்யப்படவில்லை. ஜானகி அவர்கள், 1996ல் உயிரிழந்த நிலையில், 2019ல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நீண்ட இடைவெளியில், சம்பந்தப்பட்ட சொத்து யார் வசம் இருந்தது, யாருடைய பெயரில் மாற்றப்பட்டது அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்ற எந்த தகவலையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை இந்த வழக்கில் சொத்து தொடர்பான உரிமைகள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லை. இந்த வழக்கையும், சக்கரபாணியின் வாரிசுகள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன். அதேநேரம், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை நாட அனுமதி வழங்கப்படுகிறது" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளீட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.