சென்னை: அதிமுகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் விளக்கமளித்துள்ளனர்.
மதுராந்தகம் எம்எல்ஏ மரகம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், தாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். அது நடந்துவிடக் கூடாது. அதனால்தான் தவெகவுக்கு ஆதரவளித்தோம். நாங்கள் அதிமுகவிலிருந்துதான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால் எங்கள் மீது விமர்சனம் எழுந்தது. 54 ஆண்டுகளாக வீர நடை போட்டுக்கொண்டிருக்கிற அதிமுக இயக்கத்திற்கு துரோகம் செய்ய, திமுகவுடன் நாங்கள் இணைய விரும்பவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம். தொகுதியில் 2021ல் வெற்றி பெற்றிருந்த போது, எதையும் செய்ய திமுகவிடவில்லை. இந்த முறையாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துதான் நாங்கள் தவெகவில் இணைந்தோம். விஜய் பொறுப்பேற்ற பின்னர் அம்மா ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை அப்படியே செயல்படுத்துகிறார். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்" என்று கூறியிருக்கின்றனர்.