4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏன் அறிவிக்கவில்லை? சபாநாயகரின் இந்த முடிவு காரணமா? தராசு ஷ்யாம் பளிச்

  • சென்னை: தமிழக அரசியலில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் நடந்துள்ள நிலையில், இது நிறைய சட்டக் கேள்விகளை எழுப்பி வருகின்றன.. இந்த தொடர் ராஜினாமாவின் பின்னணியில் உள்ள சட்ட நடைமுறைகளையும், தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது தொடர்பான தனது சட்ட விளக்கங்களையும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார்.

    Advertisement

    பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள ஷ்யாம், "அரசியல் சாசனத்தின்படி எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமாவும் தன்னிச்சையானதாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னால் ஏதாவது ஆசை வார்த்தைகளோ அல்லது அழுத்தங்களோ இருந்தால் அதைத் தன்னிச்சையானது என்று சட்டம் கருதாது.

    Advertisement

    4 தொகுதி இடைத்தேர்தல்

    எம்.எல்.ஏ-க்கள் கைப்பட எழுதி கொடுத்துவிட்டதுமே, அதை சபாநாயகரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அரசியல் சாசன விதிமுறைகளின்படி, ஒரு முன் விசாரணை நடத்திய பிறகே, அது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் கொடுக்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சில அசாதாரணமான விஷயங்கள் தெரிவதால், இதில் சட்டம் கண்டிப்பாக உள்ளே வரும்.

    முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் வழக்கில், நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாதபோது ஜே.எம்.எம் கட்சி உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து ஆதரவு பெறப்பட்ட விவகாரத்தில், அடுத்த ஆட்சியில் சிபிஐ விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நரசிம்ம ராவுக்குக் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அதனால் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நேர்மையான செயல்பாடும், சட்டத்தின் ஆட்சியும்தான் இங்கு முக்கியம்.

    Advertisement

    107 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஒருவர் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது ஆளுநர் அதைத் தள்ளிப்போட்டதும், அதன் பிறகு தவெக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் கையாண்ட நகர்வுகளும் அரசியல் ரீதியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

    சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு

    குறிப்பாக, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தாய் கட்சியின் கொரடா உத்தரவை மீறி ஓட்டு போட்டபோதே, அந்த எம்.எல்.ஏ-க்கள் 10-வது அட்டவணையின்படி கட்சித் தாவல் தொடர்பான நடவடிக்கைக்கு உட்படலாம்.

    சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்தாமல், அவையில் 144 என்ற எண்ணிக்கையைப் பதிவு செய்ததால், 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக ஓட்டு போட்டது அவைப் பதிவில் இடம்பெற்றுள்ளது. இதில் 21 பேரை மட்டும் உட்கட்சி மன்னிப்பு என்ற பெயரில் ஏற்பதும், தம்மீதான நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது மீதமுள்ள 4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதும் சட்ட ரீதியாகப் பல கேள்விகளை எழுப்புகிறது.

    Advertisement

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

    இந்த சட்டச் சிக்கல்களும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கான ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் 2018-ல் நடந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கைப் போல, நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

    அப்போது தொகுதி மக்கள் நீண்ட காலம் பிரதிநிதியின்றி இருக்கக் கூடாது என்பதற்காக, தங்க தமிழ்செல்வன் தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லப் போவதில்லை என்று முடிவெடுத்த பிறகே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" நடைமுறைக்கு வந்தால், இடைத்தேர்தல் நடத்தப்படாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. இன்றைய நிலவரப்படி, அந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை, அவற்றுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை. இத்தகைய சூழல், எதிர்காலத்தில் புதிய அரசியல் முடிவுகளை எடுத்து இன்னொரு கட்சியில் போய்ச் சேரக்கூடிய நபர்களுக்கு ஒருவித கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Senior journalist Tarasu Shyam provides a detailed analysis of the ongoing AIADMK MLA resignation crisis in Tamil Nadu. He discusses the legislative procedures, the Speaker's constitutional responsibilities, and legal precedents like the 2018 disqualification case, exploring how these events impact the state's political future and the upcoming electoral landscape in 2026.