ஏன் வெள்ளை அறிக்கை விடனும்.. பச்சை, சிகப்பு, மஞ்சள் அறிக்கையெல்லாம் விடக் கூடாதா? தெளிவான விளக்கம்!

  • சென்னை: தவெக ஆட்சியமைத்த பிறகு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் மரிய வில்சன். இன்று மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கையில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். ஒவ்வொரு முறை ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகும், "முந்தைய ஆட்சியின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்" அல்லது "இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்ற வார்த்தைகளை கேட்டுவருகிறோம் அல்லவா? அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

    Advertisement

    அரசியலில் மட்டுமல்லாமல், தொழில், அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளிலும் "வெள்ளை அறிக்கை" என்ற சொல்லுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படியானால், வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஏன் அது வெளியிடப்படுகிறது?

    Advertisement

    அதேபோல் கிரீன் பேப்பர், ப்ளூ பேப்பர், ரெட் பேப்பர், யெல்லோ பேப்பர், பிங்க் பேப்பர் போன்ற ஆவணங்களின் பொருள் என்ன? என்பதை எளிமையாகப் பார்ப்போம். வெள்ளை அறிக்கை (White Paper) என்பது ஒரு அரசு, நிறுவனம் அல்லது அமைப்பு, ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளிப்படையாக விளக்கும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும்.

    வெள்ளை அறிக்கை

    பொதுவாக, ஒரு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முந்தைய ஆட்சியின் நிதிநிலை, கடன் சுமை, திட்டங்களின் நிலை, நிர்வாக குறைபாடுகள் உள்ளிட்ட விபரங்களை மக்களுக்கு தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதேபோல், ஒரு முக்கிய பிரச்சினை, கொள்கை அல்லது திட்டம் குறித்து தெளிவான நிலைப்பாட்டை விளக்கவும் வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படுகிறது. அதன்படி வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும்.

    Advertisement

    புள்ளிவிவரங்கள்

    அதில், தற்போதைய நிலைமை என்ன? என்னென்ன சவால்கள் உள்ளன? கடந்த காலத்தில் என்ன நடந்தது?
    எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன? அதற்கான தீர்வுகள் என்ன? போன்ற அம்சங்கள் விரிவாக இடம்பெறும். ஒரு நல்ல வெள்ளை அறிக்கை என்பது வெறும் குற்றச்சாட்டுகளின் தொகுப்பாக இருக்கக் கூடாது. புள்ளிவிவரங்கள், ஆதாரங்கள், பகுப்பாய்வுகள் மற்றும் தீர்வு பரிந்துரைகளுடன் இருக்க வேண்டும்.

    ஏன் வெள்ளை நிறம்?

    வெள்ளை நிறம் உலகளவில் தூய்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே, ஒரு அறிக்கை எந்தவித அரசியல் அல்லது தனிப்பட்ட சார்புமின்றி உண்மைகளை மட்டும் முன்வைக்கிறது என்ற கருத்தை வெளிப்படுத்தவே "வெள்ளை அறிக்கை" என்ற பெயர் உருவானது. "White Paper" என்ற சொல் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும், அரசியல் ரீதியாக அதிகம் அறியப்பட்டது பிரிட்டனில்.

    Advertisement

    சர்ச்சில் வெள்ளை அறிக்கை

    1922-ஆம் ஆண்டு, அப்போது காலனித்துவ நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் பாலஸ்தீனில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக வெளியிட்ட ஆவணம் "Churchill White Paper" என அழைக்கப்பட்டது. அதன்பிறகு உலக நாடுகள் பல முக்கிய கொள்கை மற்றும் நிர்வாக விவகாரங்களில் வெள்ளை அறிக்கைகளை வெளியிடத் தொடங்கின.

    கிரீன் பேப்பர்

    கிரீன் பேப்பர் (Green Paper) என்பது ஒரு கொள்கை அல்லது சட்ட முன்வரைவுக்கான ஆரம்ப கட்ட ஆலோசனை ஆவணம். இதன் மூலம் அரசு அல்லது நிர்வாகம் மக்களிடமிருந்து கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் எதிர்ப்புகளை பெறுகிறது. கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்த நடைமுறை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    ரெட் பேப்பர்

    ரெட் பேப்பர் (Red Paper) அல்லது ரெட் புக் என்பது பொதுவாக நிதி மற்றும் பட்ஜெட் தொடர்பான ஆவணங்களைக் குறிக்கும். ஒரு நாட்டின் அரசின் வரவு-செலவுத் திட்டம், வரி மாற்றங்கள், கடன் நிலை, எதிர்கால நிதி திட்டங்கள் போன்றவை இதில் இடம்பெறும்.

    ப்ளூ பேப்பர்

    ப்ளூ பேப்பர் (Blue Paper) என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல். ஒரு புதிய தொழில்நுட்பம், மென்பொருள், இயந்திரம் அல்லது கண்டுபிடிப்பு குறித்த விரிவான தொழில்நுட்ப விளக்க அறிக்கை ப்ளூ பேப்பர் என அழைக்கப்படுகிறது.

    யெல்லோ பேப்பர்

    யெல்லோ பேப்பர் (Yellow Paper) என்பது கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத அல்லது ஆய்விதழ்களில் ஏற்கப்படாத ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களுக்கு இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது.

    Advertisement

    பிங்க் பேப்பர்

    பிங்க் பேப்பர் (Pink Paper) என்பது கொள்கை மற்றும் நிர்வாக ஆவணங்கள் பரிமாற்றத்துடன் தொடர்புடையது. குறிப்பாக அமெரிக்காவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கொள்கை தகவல்களை பகிர்வதற்கான ஆவணங்களை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

    அரசு அறிக்கை

    இன்றைய நிர்வாக மற்றும் அரசியல் சூழலில், தகவல்களை வெளிப்படையாக பகிர்வது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. அதற்காகவே வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வகை ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு அரசின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், ஒரு நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளவும், ஒரு புதிய கொள்கையை மக்கள் விவாதிக்கவும் இந்த அறிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

    English Summary

    What is a White Paper and why governments release it? Simple explanation of White, Green, Red, Blue, Yellow and Pink papers.