மனைவி அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் கொடுமை தான்.. விவாகரத்தை உறுதி செய்த ஹைகோர்ட்

  • சென்னை: ''உரிய காரணமின்றி மனைவி அடிக்கடி கணவர் வீட்டை விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்குவது கொடுமையாக தான் கருதப்படும். மனைவியின் இப்படியான செயல் என்பது கணவருக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும்'' என்று கூறி குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    Advertisement

    தமிழகத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவி தனது கணவரின் வீட்டுக்கு செல்ல மறுத்தார். பெற்றோர் உடன் தான் இருப்பேன் என்று அடம் பிடித்தார். இருப்பினும் கணவர் மற்றும் அவரது பெற்றோர் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    அந்த பெண் கணவர் வீட்டில் 2 மாதம் இருந்தார். அதன்பிறகு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 4 மாதங்கள் வரை அவர் அங்கேயே இருந்தார். பெற்றோர் வீட்டில்இருந்து கணவர் வீட்டுக்கு வரவேயில்லை. இதனால் கணவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்கு சென்று அவரை அழைத்தார்.

    அப்போது தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் . அப்போது தான் வீட்டிற்கு வருவேன் என்று மனைவி கூறினார். கணவரும் அதற்கு ஒப்புக்கொண்டு மனைவியை அழைத்து கொண்டு தனிக்குடித்தனமாக வாழ தொடங்கினார். அப்போதும் ஒரு மாதம் வரை மட்டுமே கணவருடன் அந்த பெண் இருந்தார். அதன்பிறகு மீண்டும் மனைவி அடம்பிடிக்க தொடங்கினார். தனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை. தனது பெற்றோர் வீட்டு அருகே உள்ள வீட்டிற்கு மாற வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது.

    Advertisement

    மீண்டும் அந்த பெண் தனது கணவரை விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானா அந்த கணவர் நடந்த சம்பவத்தை கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அந்த பெண் விவாகரத்தை விரும்பவில்லை.

    இதனால் குடும்பநல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ''மாமனார், மாமியார் தரப்பில் என்னிடம் வரதட்சணை கேட்கப்பட்டது. வரதட்சணை பிரச்சனையால் பாதிக்கப்பட்டேன். இதனால் தான் தனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். பெண் குழந்தை பிறந்த பிறகு எனது கணவர் பார்க்க வரவில்லை. ஜீவனாம்சத்தை மறுப்பதற்கும், கணவர் மறுமணம் செய்துகொள்வதற்கும் ஏதுவாகவே இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது.

    Advertisement

    இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிடி ஆஷா மற்றும் என் மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''திருமண பந்தமானது கருணை, பரஸ்பர அனுசரிப்பு மற்றும் அன்பு ஆகியவற்றால் பேணப்பட வேண்டும். கணவன்-மனைவி இடையிலான உறவு பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். அதை ஒரு தரப்பினர் மட்டுமே தீர்மானிக்க முடியாது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    உரிய காரணமின்றி மனைவி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது கொடுமையாக தான் கருதப்படும். ஏனென்றால் இது எப்போது வேண்டுமானாலும் சண்டையிட்டு தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற அச்ச உணர்வை கணவருக்கு ஏற்படுத்தும். இதுவும் ஒருவகையான கொடுமைதான்.

    Advertisement

    அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தொடர்புடைய கணவர் தனது பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்கிறார். பெற்றோரை பராமரித்து, பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனாலும் அவரை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தியதும் கொடுமை தான். இதனால் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையீடு செய்ய விரும்பவில்லை. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்'' என்று அதிரடியாக உத்தரவிட்டது.

    English Summary

    The Chennai High Court has upheld a divorce order granted by the Family Court, observing that a wife frequently leaving the matrimonial home to stay with her parents without a valid reason amounts to cruelty, as such conduct can create a sense of insecurity for the husband.