சென்னை: திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க அதிமுக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்றதாக சொல்லப்படும் கடிதத்தை இன்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வென்று பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்கிறது.
தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நடத்த முயற்சிகள் நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர் தகவலை அளித்தார். திமுக ஆதரவுடன் தன்னை முதல்வராக்க சட்டசபை உறுப்பினர்களின் கையெழுத்து பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. திமுகவுடன் கூட்டு சேர்வதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனை எழுந்து அடங்குவதற்கு தவெக கூட்டணி ஆட்சி வந்தது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். தவெக குதிரை பேரம் செய்து அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை ராஜினாமா செய்ய வைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக சட்டசபையிலேயே எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களோ, "தீயசக்தி திமுக என எம்ஜிஆரால் அழைக்கப்பட்ட ஒரு கட்சி, வாழ்நாள் எதிரியாக கருதப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி மனம் வந்தது? அவரது பதவி ஆசைக்கு திமுகவுடன் கூட்டணி வைப்பதா, இது எங்களுக்கு பிடிக்காமல்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம்" என விளக்கமளித்திருந்தனர். இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளராக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை வைத்து தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது ஊர்ஜிதமாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ஆதவ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் 100 எம்எல்ஏக்களை கூட வெல்ல முடியாத எடப்பாடி பழனிசாமியால் எப்படி முதல்வராக முடியும்? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அவரது குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து அதிமுக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்ற கடிதத்தை இன்று ஆதவ் அர்ஜுனா வெளியிட போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு வேளை இந்த ஆதாரம் வெளியானால் ஒட்டுமொத்த அதிமுகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.