உயில் இருந்தால் மட்டும் போதுமா? சொத்து உங்களுக்கு கிடைக்க இதை செய்யணும்.. இல்லனா சிக்கல்

  • சென்னை: நம் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகள், நாம் மறைந்த பிறகு யாருக்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அதனால்தான் பலரும் உயில் (Will) எழுதி வைக்கின்றனர். ஆனால் உயில் எழுதிவைத்துவிட்டால் மட்டும், அந்தச் சொத்து தானாகவே வாரிசின் பெயருக்கு மாறிவிடும் என்று நினைத்துவிடக்கூடாது. சொத்தின் உரிமையை சட்டப்படி மாற்றுவதற்கு அதற்கு பிறகும் சில முக்கியமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    Advertisement

    உயில் பற்றி சட்ட நிபுணர்களின் எச்சரிக்கை என்னவென்றால், உயில் எழுதி வைத்துவிட்டாலே தங்கள் பணி முடிந்துவிட்டதாகவும், சொத்துக்கள் தானாகவே வாரிசுகளுக்கு மாறிவிடும் என நம்புவதும் தவறான புரிதலாகும்.

    Advertisement

    உயில் மட்டுமே போதுமா

    "அப்பாவின் சொத்து என்றால் மகனுக்குத்தான்", "கணவர் இறந்துவிட்டால் மனைவிக்குத்தான்" என்று பொதுவாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. யார் யார் சட்டப்பூர்வ வாரிசுகள், அவர்களுக்கான உரிமை என்ன, சொத்தில் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்பவை சம்பந்தப்பட்ட வாரிசு சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும்.

    ஒருவர் உயில் மூலமாகச் சொத்தை பெறும்போது, அதன் தன்மை மற்றும் சூழலை பொறுத்து நீதிமன்றத்தில் முறையான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

    சொத்து கிடைக்க என்ன வழி

    "அத்துடன், சொத்தின் தன்மைக்கு ஏற்ப வருவாய்த் துறையில் பட்டா உள்ளிட்ட பதிவுகளை மாற்றுதல், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற உரிய நடைமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    இந்து மதப் பிரிவினரை பொறுத்தவரை, இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, உயில் இல்லாத பட்சத்தில் வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் கிளாஸ் 1 வாரிசுகளான மனைவி, மகன், மகள் மற்றும் தாய் உள்ளிட்டோருக்கு சட்ட விதிகளின்படி உரிய பங்காகப் பிரித்து வழங்கப்படும். மற்ற மதத்தினரைப் பொறுத்தவரை அவர்களின் தனிப்பட்ட மதச் சட்டங்களின்படியே சொத்துரிமை மாற்றப்படும்.

    உயில் இல்லாமல் ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்?

    இப்போது இன்னொரு முக்கியமான கேள்வி.. ஒருவர் எந்த உயிலும் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது சொத்து யாருக்குச் செல்லும்? அப்போது அந்த சொத்து தன்னிச்சையாக ஒருவரின் பெயருக்குச் சென்றுவிடாது. இறந்தவருக்கு பொருந்தும் தனிநபர் வாரிசு சட்டத்தின் அடிப்படையில்தான் சொத்து யாருக்கு உரிமை என்பது தீர்மானிக்கப்படும்.

    Advertisement

    பொதுவாக, கணவன் அல்லது மனைவி, மகன், மகள், பெற்றோர் உள்ளிட்ட சட்டப்பூர்வ வாரிசுகள், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி சொத்தில் உரிமை கோர முடியும். குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்தால், அனைவருக்கும் சமமான பங்கு கிடைக்கும் என்று பொதுவாகக் கருதிவிட முடியாது. இறந்தவருக்கு பொருந்தும் வாரிசு சட்டத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரின் உரிமையும் பங்கும் தீர்மானிக்கப்படும்.

    சட்டம் சொல்வது என்ன

    உயில் இல்லாத நிலையில், முதலில் யார் சட்டப்பூர்வ வாரிசுகள் என்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம். இதற்காக தேவையான வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று, சொத்தின் உரிமையை வாரிசுகளின் பெயருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சொத்து, வங்கி கணக்கு அல்லது பிற சொத்துகள் என ஒவ்வொன்றுக்கும் தேவையான நடைமுறைகள் மாறுபடலாம் என்பதால், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட துறையை அணுகுவது அவசியம்.

    Advertisement

    அதேபோல தனது சொத்து யாருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக உயில் எழுதுவது கட்டாயம் கிடையாது.. உயில் இல்லாவிட்டாலும், அந்த நபருக்கு பொருந்தும் வாரிசு சட்டத்தின் அடிப்படையில் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் சொத்தில் உரிமை பெற முடியும். ஆனால் உயில் எழுதாமல் விட்டால், யார் வாரிசு, யாருக்கு எவ்வளவு பங்கு என்பது சட்ட விதிகளின்படி தீர்மானிக்கப்படும்.

    ஆவணங்கள், சட்ட வழிமுறைகள்

    உயில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சொத்தின் தன்மை மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப சட்டப்பூர்வமான ஆவணங்களைப் பெற்று உரிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமே சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

    Advertisement

    சொத்து என்பது வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த மிகப்பெரிய செல்வமாக இருக்கலாம். அதனால், அதை அடுத்த தலைமுறைக்கு எந்த குழப்பமும் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு உயில் மட்டுமல்லாமல், தேவையான ஆவணங்கள் மற்றும் உரிமை மாற்ற நடைமுறைகளையும் முறையாக முடித்துவைப்பதே பாதுகாப்பான வழியாகும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்..!!

    English Summary

    Will Alone Is Not Enough.. What You Must Do to Transfer Property to Your Name or Face Legal Issues