ஜெம் வீரமணி வழக்கில் கம்யூனிஸ்ட் நிலை என்ன.. திமுகவை கண்டிப்பீர்களா.. ராஜ்மோகன் சரமாரி கேள்வி

  • சென்னை: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. தவெக கம்யூனிஸ்ட் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தவெக அரசை சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் ஜெம் கிராணைட் உரிமையாளர் மீதான பாலியல் வழக்கை, கடந்த திமுக ஆட்சியில் மூடி மறைத்தது குறித்து கம்யூனிஸ்ட்கள் பேசுவார்களா என ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியாக உள்ளது. ஜனநாயக பூர்வமாக உள்ளது. எங்கள் மீது எந்த விமர்சனத்தை வேண்டுமானால் சிபிஎம் சண்முகம் வைக்கலாம். அதுதான் ஜனநாயகம். அது அவர்களின் உரிமை. முதலமைச்சருக்கு தெரியாமல் அரசாணை வெளியாகிறதா என்று சண்முகம் கேட்கிறார்.

    Advertisement

    தவெக கம்யூனிஸ்ட் கூட்டணி

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டுமென சேர்ந்து தானே முடிவு செய்தீர்கள் என கேட்கிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மீனவர்களும், அந்தப் பகுதி மக்களும் பல்வேறு கருத்துகளை சொல்கிறார்கள். அவர்கள் கருத்துகளை ஆராய்ந்து மறு பரிசீலனை செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. இப்போதுவரை பட்டினப்பாக்கம் தலைமை செயலகத்தில் இறுதி முடிவு செய்யவில்லை. நாங்கள் எடுப்பது தான் முடிவு.

    மெரினாவில் பேனா சிலை வைத்தே தீர்வோம் என்பது போல அடம் பிடிக்கும் ஆட்சியாளர்கள் நாங்கள் இல்லை. அனைவரின் கருத்துகளுக்கு செவி கொடுக்கும் ஆட்சியாளர்களா நாங்கள் உள்ளோம். இந்த பிரச்சனை மட்டுமல்ல, எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்கள் நிலைப்பாடு அதுதான். உயரதிகாரி மீது தவறு ஒரு புகார் வருகிறது என்றாலும் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்போம். தவெக கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியான, ஜனநாயக கூட்டணி.

    Advertisement

    திமுகவை கேட்பார்களா

    இடைத்தேர்தலில் அவர்கள் தனி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள். கம்யூனிஸ்ட்கள் அவர்களை சுயபரிசோதனை செய்கிறார்கள். தவெகவினர் நாங்கள் எங்களை சுய பரிசோதனை செய்கிறோம். கடந்த 2-3 நாட்களாக ஊடகங்களை பார்க்கிறன். ஜெம் கிராணைட் உரிமையாளர் வீரமணி போக்சோ வழக்கு தீவிரமாக போய் கொண்டிருக்கிறது. இது மிகவும் கொடூரமான வழக்கு. நான் பள்ளிக்கல்வித்துறையில் இருக்கிறேன். குழந்தைகளுடன் தொடர்பில் உள்ளேன்.

    அவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த போக்சோ வழக்கி்ல் கம்யூனிஸ்ட் தோழர்களின் நிலைப்பாடு என்ன. கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டது. அதை கண்டிக்கிறார்களா இல்லையா. இதை நான் கோபமாக சொல்லவில்லை. அவர்களின் நிலைப்பாட்டை சொல்ல வேண்டுமல்லவா. கடந்த ஆட்சியில் ஏன் இப்படி ஒரு கொடூரமான வழக்கை மூடி மறைத்தார்கள் என சொன்னார்களா.

    Advertisement

    நான் ஜனநாயகவாதி

    அதைத் தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் நானும் ஜனநாயகவாதி. பாலன் இல்லத்தில் கம்யூனிஸ்ட் வகுப்பில் கலந்துள்ளேன். ஆர்.என்.கே ஐயா, டாக்டர் ரவீந்திரன், சி. மகேந்திரன் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். அந்த வழக்கை கம்யூனிஸ்ட்கள் கண்டிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்றார். ராஜ்மோகனின் கருத்து தவெக, கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் வாக்குவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

    English Summary

    Minister Rajmohan said, TVK Communist alliance is very strong. I wanted to know whether communist condemns DMK on Gem Veeramani.