சமையல் எண்ணெய் விலை குறையுமா? பண்டிகை நெருங்குதே.. 5% வரி குறையுமா? மத்திய அரசு போடும் கணக்கு என்ன

  • சென்னை: சமையல் எண்ணெய் விலை ஏறிக்கொண்டே போகிறதே என்று கவலைப்படும் இல்லத்தரசிகளுக்கு ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.. பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பாக எண்ணெய் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஒரு முக்கியமான விஷயத்தை ஆலோசித்து வருகிறது. அது என்ன தெரியுமா?

    Advertisement

    இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு வருஷத்தில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்போது செப்டம்பர் முதல் நவம்பர் வரை பண்டிகை காலம் வரப்போகிறது.

    Advertisement

    இந்த காலகட்டத்தில் இனிப்பு, முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட பொரித்த பலகாரங்களை அதிகமாக தயார் செய்வார்கள். இதற்கெல்லாம் சமையல் எண்ணெய்தான் அடிப்படை அவசியம். இந்த பண்டிகை காலத்தில் விலை மேலும் உயர்ந்துவிடக்கூடாது என்பதுதான் அரசுக்கு இருக்கும் முக்கியமான கவலை.

    சமையல் எண்ணெய்

    நம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கு வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை முக்கியமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. மலேசியா, இந்தோனேசியா, அர்ஜென்டினா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த எண்ணெய்கள் இந்தியாவுக்கு வருகின்றன.

    Advertisement

    அப்படியானால் விலை ஏன் இவ்வளவு முக்கியமாகிறது? வெளிநாட்டிலிருந்து எண்ணெய் வாங்கும்போது அதற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அந்த வரி குறைந்தால் எண்ணெயை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கான செலவு குறைய வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் இந்திய மார்க்கெட்டிலும் எண்ணெய் விலை குறையலாம் என்பதுதான் இப்போது முன்வைக்கப்படும் கணக்கு.

    மத்திய அரசு பரிசீலனை

    இதற்காக சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 5 சதவீத புள்ளிகள் வரை குறைக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது இன்னும் ஆலோசனையில்தான் இருக்கிறது. எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    Advertisement

    ஏற்கெனவே கடந்த 2025-ம் ஆண்டு மே மாதத்தில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான அடிப்படை இறக்குமதி வரி 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. மற்ற கட்டணங்களையும் சேர்த்துப் பார்த்தால், மொத்த இறக்குமதி வரி 27.5 சதவீதத்தில் இருந்து 16.5 சதவீதமாக குறைந்தது.

    பாமாயில், சோயாபீன் எண்ணெய்

    ஆனால் அதன் பிறகு ஒரு சிக்கல் வந்தது. இந்தியா வரியை குறைத்தாலும், சர்வதேச சந்தையில் பாமாயில், சோயாபீன் எண்ணெய் விலைகள் உயர்ந்துவிட்டன. இதனால் இந்தியாவில் இறக்குமதி செலவு குறைந்த அளவுக்கு மக்களுக்கு எண்ணெய் விலை குறையவில்லை. இதுபோன்ற சூழலில், பண்டிகை காலத்துக்கு முன்பாக மீண்டும் வரியை குறைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    Advertisement

    அதேசமயம், சோயாபீன் விலை அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் இருக்க வேண்டும் என்பதையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

    இறக்குமதி எண்ணெய்

    ஏனென்றால் இறக்குமதி வரியை அதிகமாக குறைத்தால் வெளிநாட்டிலிருந்து எண்ணெய் அதிக அளவில் இந்தியாவுக்குள் வரலாம். அப்படி வந்தால் உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் விதைகளுக்கு நல்ல விலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம்.

    இன்னொரு பக்கம், இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கத் தொடங்கினால் சர்வதேச சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கலாம். இந்தியாவின் தேவை அதிகரிப்பதால் மலேசிய பாமாயில், அமெரிக்க சோயாபீன் எண்ணெய் போன்றவற்றின் விலைகளும் உயரக்கூடும் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

    Advertisement

    வரி குறையுமா? விலை குறையுமா

    ஆனால் இங்கேதான் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. வரியை குறைத்துவிட்டால் மட்டும் எண்ணெய் விலை உடனே குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. வெளிநாட்டு சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால், அந்தப் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போகலாம்.

    ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர், எல்-நினோ போன்ற காரணிகளாலும் உலகளவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பண்டிகை காலமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், சமையல் எண்ணெய் விலை மேலும் உயராமல் பார்த்துக்கொள்ள அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்....!!!

    English Summary

    Will Cooking Oil Prices Fall? 5% Import Duty Cut Before Festive Season.. What Is the Centre Planning?