சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த கோயம்பேடு பேருந்து நிலையம், அரசு விரைவு பஸ்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதால் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. அதேநேரம் ஆம்னி பேருந்துகள் மட்டும் தொடர்ந்து கோயம்பேடு வரை வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆனால் அரசு பேருந்துகள் கோயம்பேடு வராமல் கிளாம்பாக்கத்துடன் நின்றுவிடுகின்றன இதனால் கோபம் அடைந்துள்ள சாமானிய மக்கள் ஆம்னி பஸ்களுக்கு ஒரு நியாயம்.. அரசு பஸ்களுக்கு அநியாயமா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு விரைவு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
2003ம் ஆண்டில் பாரிமுனையில் இருந்து காய்கறி சந்தையும், பேருந்து நிலையத்தையும் அப்படியே எடுத்து சென்று கோயம்பேட்டில் வைத்தார்கள். கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் ஒரு புறமும், ஆம்னி பேருந்துகள் சாலையின் எதிர்புறத்திலும் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு எப்போதும் நெரிசல் மிகுந்த இடமாக இருந்தது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் அங்கு மாற்றப்பட்டுவிட்டன. இதனால் கோயம்பேடு அப்படியே அடியோடு முடங்கிவிட்டது.
பயணிகள் நடமாட்டம் இல்லை.. இரவு நேரங்களில் கோயம்பேடு பஸ் நிலையம் சமூக விரோதிகள், குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதில் மக்கள் கோபப்பட முக்கிய காரணம் இருக்கிறது. அரசு ஆம்னி பேருந்துகளையும் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கிளாம்பாக்கம் வந்து செல்லும் அவர்கள். கோயம்பேட்டில் இருந்தே (பணிமனைக்காகவே) கிளம்பி வந்து செல்கிறார்கள். ஆனால் அரசு இந்த பிரச்சனைக்காகவே ஆம்னி பஸ்களையும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் நோக்கில் முடிச்சூரில் ரூ.42.70 கோடி செலவில் ஆம்னி பஸ் பணிமனை அமைத்தது. ஆனால், இதற்கு எதிராக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு, மாதவரம் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி அளித்தது. இதன் விளைவாக பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இன்றும் கோயம்பேடு பகுதியிலிருந்தே இயக்கப்படுகிறது. மீதமுள்ள பேருந்துகள், அடையாறு, வேளச்சேரியில் இருந்து (தென்சென்னை) மார்க்கமாக புறப்பட்டு சென்னைமுழுக்க ஆட்களை ஏற்றி செல்கின்றன. இந்த பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மிக அதிகம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வசதி படைத்தவர்கள் கோயம்பேட்டிலும், வேளச்சேரியிலும் ஏறி பயணிக்கின்றனர். ஆனால் அரசு பஸ்களை நம்பியிருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள், கிளாம்பாக்கம் செல்ல மின்சார ரெயில், மாநகர பஸ், மெட்ரோ ரெயில், ஆட்டோ என பல்வேறு போக்குவரத்து வசதிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் பயணித்து வருகிறார்கள். குடும்பத்துடன், சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் சுமைகளை சுமந்தபடி கிளாம்பாக்கம் வருவதற்குள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கும் அரசு, மதுரை, கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம் வழித்தடங்களில் அரசு பேருந்துகளையும் கணிசமான அளவு கோயம்பேட்டில் இருந்து இயக்கலாம் என்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனர். ஆம்னி பேருந்துகளின் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகை அரசு பேருந்தில் பயணிப்பவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.பழைய ஓய்வூதியம் பெற உரிமை உள்ளதா? அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய உண்மை.. ஐகோர்ட்டின் புதிய தீர்ப்பு
ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா.. அமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றங்கள் வரப்போகிறது