“வேடிக்கை பார்த்துவிட்டு.. பிறகுதான் ஹீரோயிசத்தை காட்டுவாரா?” விஜய்க்கு கனிமொழி எம்பி சரமாரி கேள்வி

  • சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீரியஸாக வெடித்திருக்கிறது. இந்நிலையில், இதையெல்லாம் விஜய் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர்தான், கதாநாயக சாகசங்களை செய்வாரா? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    Advertisement

    மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது 'கதாநாயக சாகசங்களை' காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது" என்று கூறியிருக்கிறார்.

    என்ன நடந்தது?

    சென்னை திருவொற்றியூரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த 28 வயதான பிரதீப் ராஜ் என்பவர் நேற்று மாலை திருவொற்றியூர் மேற்கு மாட வீதி அருகே நின்றுக்கொண்டிருந்தார்.

    Advertisement

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, பொதுமக்களின் கண்முன்னே பிரதீப்பை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் பிரதீப் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. முதற்கட்ட விசாரணையின்படி பிரதீப் ராஜுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே கந்துவட்டி விஷயத்தில் பணத் தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர், எதிர் தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை மிரட்டுவதாகவும், பொய் வழக்கு போட பார்ப்பதாகவும் கூறி, பிரதீப் ராஜ் ஒரு வீடியோவையும் புகார் மனுவையையும் வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அவர் காவல்துறையினருக்கு எதிராக புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் இந்த துயரமான கொலை சம்பவம் நடந்திருக்கிறது.

    ஏற்கெனவே சென்னை அடையாறில் தவெக நிர்வாகி ஒருவர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது வட சென்னையில் மற்றொரு கொலை நடந்திருப்பது, சட்டம் ஒழுங்கு குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    English Summary

    The law and order problem has erupted seriously in Tamil Nadu. In this case, will Vijay have fun with all this and then do the heroic adventures? DMK MP Kanimozhi has questioned.