ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாதா? ரூ.700 பிளாஸ்டிக் கரன்சி வதந்தி.. ரிசர்வ் வங்கி சொல்வது என்ன

  • சென்னை: புதிதாக 700 ரூபாய் நோட்டுகள் அறிமுகமாக உள்ளதாகவும், காகித நோட்டுகளுக்கு பதிலாக ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளதாகவும் வெளியான செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. இந்த பரபரப்பான சூழலில், இணையத்தில் வைரலாகும் இத்தகைய கரன்சி மாற்றங்கள் குறித்த பின்னணி உண்மைகளையும், அதற்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கங்களையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பெயரில் சோஷியல் மீடியாவில் பரவி வரும் ஒரு செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    காகித ரூபாய் நோட்டுகள்

    அதாவது காகித ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழிந்து விடுவதாலும், அழுக்கடைவதாலும் அவற்றுக்கு பதிலாக அதிக ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருகிற ஜூன் 30ம் தேதி முதல் புதியதாகப் புழக்கத்திற்கு வரப்போவதாக, ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

    சோஷியல் மீடியாவில் வட்டமிடும் இந்த தகவலை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துவிட்டனர். ஒருவேளை தங்களின் கையிலுள்ள காகிதப் பணம் செல்லாமல் போய்விடுமோ என்ற பீதியும், கலக்கமும் தொற்றிக்கொண்டது.

    பாலிமர் கரன்சி - பிளாஸ்டிக் நோட்டு

    இந்த விவகாரத்தின் பின்னணியை பார்த்தால், இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுளைக் கூட்டவும் தயாரிப்பு செலவைக் குறைக்கவும் காகித நோட்டை விட 3 மடங்கு அதிக காலம் உழைக்கும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அதாவது பாலிமர் கரன்சியைக் கொண்டு வர ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆலோசித்து வருவது உண்மைதான்.

    Advertisement

    இதற்காகவே இந்தத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முதன்முதலில் கடந்த 2012-லேயே கையிலெடுத்தது, ஆனால் சில டெக்னிக்கல் காரணங்களால் அந்த முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட 14 வருஷத்துக்கு பிறகு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் இந்த பிளாஸ்டிக் நோட்டுத் திட்டம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    700 ரூபாய் நோட்டுகள்

    அதுமட்டுமல்ல, இந்த தகவலுடன் சேர்த்து இன்னொரு பரபரப்பான செய்தியும் இணையத்தில் உலா வந்தது. நாம் வழக்கமாக பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிதாக 700 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடப்போவதாகவும், மகாத்மா காந்தி படம் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சின்னம் அச்சிடப்பட்ட அந்த நோட்டின் போட்டோ எக்ஸ் தளத்தில் வைரலானது.

    Advertisement

    நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்த ஆர்பிஐ நிஜமாகவே இப்படி ஒரு நோட்டைக் கொண்டு வருகிறதோ என்று மக்கள் நிஜமாகவே குழம்பிப் போனார்கள். ஆனால், இந்த 700 ரூபாய் நோட்டு செய்தி முற்றிலும் அப்பட்டமான வதந்தி என்றும், யாரோ செய்த விஷமத்தனமான எடிட்டிங் வேலைதான் இது என்றும் நிதித்துறை வல்லுநர்கள் உடைத்துள்ளனர்.

    ரிசர்வ் வங்கி, மத்திய அரசு விளக்கம்

    700 ரூபாய் போன்ற ஒரு நோட்டை அறிமுகம் செய்தால் சில்லறைத் தட்டுப்பாடுதான் அதிகமாகும் என்பதால், அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    எனினும், இந்த 2 விவகாரங்களும் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியதையடுத்து, PIB என்று சொல்லக்கூடிய மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இது குறித்து மிகத் தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கத்தை இப்போது அளித்துள்ளது.

    Advertisement

    சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாது என்று பரப்பப்படும் வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வருகிற ஜூன் 30ம் தேதி முதல் காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியும் மறுப்பு தெரிவித்துள்ளது...!!

    English Summary

    Will Paper Currency Become Invalid from June 30? Viral Rumours About a ₹700 Plastic Note Prompt RBI Clarification