Rajesh Lakhani: தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்! தலைமைச் செயலாளர் பதவிக்கு குறி?

  • சென்னை: மத்திய அரசு பணியில் இருந்து தமிழக அரசு பணிக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி சொந்த காரணங்களுக்காக திரும்புவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Advertisement

    தற்போதைய தமிழக தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில் அந்த பதவியை குறிவைத்து ராஜேஷ் தமிழகத்திற்கு திரும்புவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானியை அவரது பணிக்காலம் முடியும் முன்பே, தமிழக அரசு பணிக்கு திரும்புவதற்கு மத்திய பணியாளர் நலத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளர்களாக இறையன்பு, சிவதாஸ் மீனா, முருகானந்தம் ஆகியோர் பதவி வகித்தனர். ஆனால் சட்டசபை தேர்தல் நடந்த போது தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக எம்.சாய்குமாரை தேர்தல் ஆணையமே நியமித்தது.

    இதையடுத்து தவெக அரசு பொறுப்பேற்றதும் சாய்குமார் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே தற்போது வரை அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.

    Advertisement

    இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சாய்குமார் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மத்திய அரசு 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதனால் அவர் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கக் கூடும்.

    இதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாய்குமார் ஓய்வு பெறுவதற்குள் அடுத்த தலைமைச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த ரேஸில் தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி இருக்கிறார்.

    Advertisement

    1992ஆம் ஆண்டு அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தருமபுரியில் உதவி ஆட்சியராக பதவிக்கு வந்தார். இதையடுத்து 2003-2004 வரை கன்னியாகுமரி ஆட்சியராகவும், 2005-2006 ஆம் ஆண்டு வரை தேனி ஆட்சியராகவும் இருந்தார்.

    அது போல் மாநகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட் செயலாளர், சுற்றுலா துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும் ராஜேஷ் லக்கானி வகித்துள்ளார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தார்.

    ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தமிழக மின் வாரியத்தின் தலைவர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளை வகித்த ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணிக்கு சென்றார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக செயல்பட்டு வந்தார்.

    அங்கு அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக மாநில பணிக்கே திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அவரது விருப்பத்திற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர் தமிழக பணிக்கு திரும்புகிறார்.

    அவரது பதவிக்காலம் 2029 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை இருக்கிறது. ராஜேஷ் லக்கானியை போல் தலைமைச் செயலாளர் ரேஸில் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம்.

    English Summary

    Sources says that Rajesh Lakhani is back to Tamil nadu cadre and have the focus on Chief Secretary post?